ஆஸி.யை மண்டியிட வைத்த பும்ரா எனும் வித்தியாசம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் முதல் ஆண்டிலேயே தெ.ஆ, இங்கிலாந்து, ஆஸி.யில் 5 விக்கெட்டுகள்

By இரா.முத்துக்குமார்

மெல்போர்ன் பிட்ச் முதல் 2 நாட்கள் ஆடியதைப் பார்க்கும் போது இது ஒரு டெட் பிட்ச், ஒரு அறுவையான ட்ராவை நோக்கியே டெஸ்ட் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் திடீரென பிட்சில் ஒருமாற்றம், பவுன்சை பேட்ஸ்மென்களால் கணிக்க முடியவில்லை, ஜடேஜாவுக்கு வாகாக இடது கை பேட்ஸ்மென்கள் திணறுமாரு ஆஃப் ஸ்டம்ப்புக்கு சற்று வெளியே ஒரு ஸ்பாட், அங்கு பந்து பிட்ச் ஆனால் கிளம்பும் தூசி, பிட்சில் தோன்றிய திடீர் பிளவுகள் ஆகியவற்றை ஒருவரும் கணிக்க முடியவில்லை.

 

பும்ரா தனது ஆகச்சிறந்த டெஸ்ட் பந்து வீச்சில் 33 ரன்களுக்கு 6 விக்கெட் என்று அசத்தியதால் ஆஸ்திரேலியா 151 ரன்களுக்குச் சுருண்டு 292 ரன்கள் முன்னிலையை இந்திய அணிக்குக் கொடுத்தது.

 

புஜாரா மட்டுமே இந்தப் பிட்சில் ஒருநாளைக்கு 200 எடுப்பது கடினம் என்றார், ஏரோன் பிஞ்ச்சும் இந்தப் பிட்ச் மாறியுள்ளது என்றார், ஆனால் முதல் 2நாட்களுக்கும் இன்று 15 விக்கெட்டுகள் ஒரே நாளில் விழுந்ததற்கும் சம்பந்தமில்லாமல் மாறியுள்ளதை யாரும் கணிக்க முடியவில்லை என்பதே உண்மை.

 

மேலும், பிட்ச் காரணியைக் காட்டிலும் மார்கஸ் ஹாரிஸ், ஏரோன் பிஞ்ச் ஆட்டமிழந்தது பிட்சினால் அல்ல மோசமான ஷாட் தேர்வினால், ஆனால் கோலி, இஷாந்த் சர்மாவின் கூட்டு முயற்சி களவியூகத்தினால் ஏரோன் பிஞ்ச் ஆட்டமிழந்தது நடந்தேறியது, மார்கஸ் ஹாரிஸ் போதிய இட, கால அவகாசமின்றி ஹூக் ஷாட்டைத் தேர்வு செய்ய அங்கு பந்து முன் பின் மாறாமல் நேராக இஷாந்த் கையில் போய் விழுந்தது. பும்ரா ஷார்ட் பிட்சில் ஹாரிஸை வீழ்த்த முடியும் என்று நம்பினார். அவர் நம்பிக்கையை ஹாரிஸ் வீணடிக்கவில்லை, மோசமான ஷாட்.  கணிக்க முடியா பிட்சில் இத்தகைய ஷாட்கள் தேவையற்றது. ஏரோன் பிஞ்ச் தன் மணிக்கட்டைத் தளர்த்த முடியாமல் பிளிக் செய்ய முயன்றார் ஷார்ட் மிட்விக்கெட்டில் அறிமுக வீரர் மயங்க் அகர்வால் மிக அருமையாகப் பிடித்தார்.

 

பிட்ச், பும்ரா என்பதைவிடவும் முக முக்கியமான விஷயம் இந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களிடம் திறமையும் இல்லை, தீவிரமும் இல்லை. ஆகவேதான் விராட் கோலி பாலோ ஆன் கொடுத்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் ஆஸ்திரேலிய அணி ஏதாவது சிறிய முன்னிலையை வைத்துக் கொண்டு இந்தப் பிட்சில் நம்மை ஆட்டிப்படைத்து விடுமோ என்ற 4வது இன்னிங்சில் பேட் செய்ய நேரிட்டு விடுமோ என்ற ஒரு படுமோசமான பயத்தினால்தான் இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்ததாகத் தெரிகிறது. இவர்களின் 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கும் அப்படித்தான் இருந்தது, புஜாரா, கோலி போன்றவர்களே பீல்டர்கள் கையில் கேட்ச் கொடுத்து புத்திக் கெட்டத்தனமாக அவுட் ஆகிச் சென்றனர். மார்கஸ் ஹாரிஸின் அவுட் பும்ராவுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுக்க அதன் பிறகு வெளுத்துக் கட்டிய ஸ்பெல் ஒன்றை வீசினார்.

 

தொடர்ந்து மணிக்கு 140, 145+ வேகத்தில் வீசி வந்த பும்ரா, அதுவரை பேக் ஆஃப் லெந்தில் வீசி பந்தை உள்ளேயும் வெளியேயும் இழுத்த பும்ரா, ஷான் மார்ஷுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அதே வேகத்தில் ஓடி வந்து மிகப்பிரமாதமாக மறைத்து ஒரு ஸ்லோயர் பந்தை வீசினார், திடீரென பந்தின் வேகம் குறைந்ததை ஷான் மார்ஷினால் கணிக்க முடியவில்லை அதுவும் அது ஃபுல்லாக, யார்க்கர் போல் வரும் என்பதையும் அவரால் கணித்திருக்க முடியும் என்று தோன்றவில்லை, கால்காப்பில் வாங்கி தன் அவுட்டைத் தானே கண்ணாடியில் பார்ப்பது போல் நேரில் பார்த்து விட்டு வெளியேறினார்.மிகச்சிறந்த பந்து வீச்சு சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சிப் பந்து அது.

 

 

ஷான் மார்ஷை வேகம் குறைந்த பந்தில் வீழ்த்திய பும்ரா, பிறகு வேகமான பந்து ஒன்றை உள்ளே சொருக ட்ராவிஸ் ஹெட் ஸ்டம்புகள் இடம்பெயர்ந்தன.  ஃபுல் லெந்த் பந்துகளையும் ஷார்ட் பிட்ச் பந்துகளையும் ஒரு சரியான கலவையில் வீசி பேட்ஸ்மென்களை தொடர்ந்து ஒரு ஐயத்திலேயே வைத்திருந்தார், டிம் பெய்னுக்கு ஒரு பந்தை உள்ளே பிட்ச் செய்து வெளியே எடுத்தார் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது.  நேதன் லயனுக்கு ஒரு காட்டு பவுன்சரை வீசி, பிறகு 145 கிமீ வேகத்துக்கும் அதிகமான ஒரு ஃபுல் லெந்த பந்தை ஸ்டம்ப் லைனில் இறக்க லயன் எல்.பி.ஆவதைத் தவிர வேறு வழியில்லை.  பிறகு ஹேசில்வுட்டுக்கும் ஷார்ட் பிட்ச் சோதனை கொடுத்து அவரை ஸ்டம்பை விட்டு ஒதுங்க வைத்து ஒரு பந்தை உள்ளே செலுத்தினார், ஹாசல்வுட் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். பும்ரா 6/33. இதனுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஒரே ஆண்டில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு இன்னிங்சில் 5 அல்லது 5+ விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் ஆனார்.

 

இதே போன்ற ஒரு களவியூகம், ஆக்ரோஷ ஸ்பெல்லில் கமின்ஸ், இந்திய வீரர்கள் விஹாரி, புஜாரா, கோலி, ரஹானேவை வீழ்த்தி 6-2-10-4 என்று அசத்தினாலும் 346 ரன்கள் முன்னிலையில் பாலோ ஆன் கொடுக்காவிட்டாலும் இந்திய அணியின் கையே ஓங்கியிருக்கிறது. ஆஸ்திரேலியா தோல்வியைத் தவிர்ப்பது என்பது மிகமிகக் கடினம் என்றே இன்று இந்த பிட்ச் எடுத்துக் காட்டியுள்ளது. ஒருவேளை பிட்சில் இன்னொரு ‘ட்விஸ்ட்’ ஏற்பட்டால்... தெரியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்