இன்னமும் கூட தொடரை வெல்லும் வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கே உள்ளது: எதார்த்த நோக்கில் அஜிங்கிய ரஹானே

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய அணி பலவீனமான அணி, இப்போது வெல்ல நல்ல வாய்ப்பு, இந்திய அணி இம்முறை வென்று விடும், கோலி படை சாதிக்கும் என்றெல்லாம் ஊடகங்களும் சில முன்னாள் வீரர்களும் ஆஸ்திரேலியா மீது காண்டில் இருக்கும் சில இங்கிலாந்து வீரர்களும் பாடும் வாய்ப்பாட்டு ரொமாண்டிக் பார்வை என்றால், அஜிங்கிய ரஹானே எதார்த்த நோக்கில் ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ளார்.

அவர்  ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த வீடியோ நேர்காணலில் கூறியதாவது:

எந்தத் தொடராக இருந்தாலும் புதிதாகத் தொடங்க வேண்டும் நன்றாகத் தொடங்க வேண்டும் என்பதே அடிப்படை. இங்கிலாந்திலும் தென் ஆப்பிரிக்காவிலும் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டதாகவே உணர்கிறோம். நிச்சயமாக மேம்பாடு அடைவதற்கான பகுதிகள் நிறையவே உள்ளன.

குறிப்பாக அயல்நாட்டுத் தொடர்களில் புதிதாகத் தொடங்க வேண்டும், நன்றாகத் தொடங்க வேண்டும்.  இந்தத் தொடரில் நம் கவனம் நாம் எதைக் கட்டுப்படுத்த முடியுமோ அதன் மீதுதான் இருக்க முடியும். ஓரிரண்டு நல்ல பயிற்சி அமர்வுகள் நடந்தது, ஒரு நல்ல பயிற்சி ஆட்டம் நடந்தது.

கடந்த முறை இங்கு நானும் விராட் கோலியும் சேர்ந்து ஆடும்போது நிறைய மகிழ்ச்சியுடன் ஆடினோம். மிட்செல் ஜான்சன் விராட் கோலிக்கு ஆக்ரோஷமாக வீசினார், வார்த்தைகளையும் வீசினார், அதனால் இன்னொரு முனையில் நான் அடித்து ஆடும் பங்கையாற்றினேன். விராட் கோலியும் பவுலர்களை ஆதிக்கம் செலுத்த விரும்புவர்தான், பேட்டிங்கில் மட்டுமல்ல வார்த்தைகளிலும்தான். அதனால் நான் என் ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடிந்தது.

நான் இன்னமும் கூட என் இயல்பான அடித்து ஆடும் ஆட்டத்தைத்தான் ஆடிக்கொண்டிருக்கிறேன்.

எந்த ஒரு அணியும் தங்கள் சொந்த மண்ணில் ஆடும்போது நிச்சயமாக நன்றாக ஆடுவார்கள். அதனால்தான் கூறுகிறேன் இந்தத் தொடரை இன்னமும் கூட ஆஸ்திரேலியாதான் வெல்ல வாய்ப்புகள் அதிகம்.  நாம் அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை.  அவர்கள் பலவீனமான அணி என்று நான் நினைக்கவில்லை.

அவர்களிடம் நல்ல பவுலிங் வரிசை உள்ளது, டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமெனில் நல்ல பவுலிங் வேண்டும்,  ஆஸி.யிடம் இது இருப்பதால் அவர்களுக்குத்தான் தொடரை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.

டேவிட் வார்னர், ஸ்மித் இல்லை என்பது அவர்களுக்குக் கஷ்டம்தான், ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் யார் வேண்டுமானாலும் ரன் குவிக்கலாம், உஸ்மான் கவாஜா, பிஞ்ச் இன்னமும் கூட அபாயகரமானவர்கள்தான்.

இவ்வாறு கூறினார் அஜிங்கிய ரஹானே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE