இந்தத் தொடரில் 2 சதங்கள் அடிப்பேன்... இந்திய பேட்ஸ்மென்கள் இன்னும் மேம்படுத்த வேண்டும்: ரஹானே

By பிடிஐ

வெளிநாடுகளில் சீரான முறையில் வெற்றி பெற வேண்டுமெனில் பவுலர்களுக்கு உதவிகரமாக பேட்ஸ்மென்களும் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார்.

 

இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் இதுவரை 1-1 என்று சமனிலையில் உள்ளது. நாளை மறுநாள் மெல்போர்னில் 3வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்திய தொடக்க வீரர்களின் கடும் சொதப்பல் காரணமாக புஜாரா, கோலி, ரஹானேவுக்கு கடும் அழுத்தங்கள் ஏற்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் ரஹானே கூறியதாவது:

 

பேட்ஸ்மென்கள் நிச்சயம் மேம்படுத்த வேண்டும், இதில் இருவேறு கருத்துகள் கிடையாது.  பேட்டிங் பற்றி விவாதிக்கும் போது இது மிகவும் முக்கியமான ஒரு புள்ளியாகும். குறிப்பாக வெளிநாடுகளில் பவுலர்கள் எதிரணியினரின் 20 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துகின்றனர். ஆகவே பவுலர்களுக்கு எங்கள் தரப்பிலிருந்து உதவி கிடைத்தால் முடிவுகள் நமக்குச் சாதகமாக இருக்கும்.

 

பாக்சிங் டே டெஸ்ட் போட்டி, மெல்போர்ன் மைதானம், மிகப்பெரிய ரசிகர் கூட்டம், நான் உண்மையில் ஆர்வமாக இருக்கிறேன்.  1-1 என்று இங்கு வந்துள்ளோம், ஆனால் பெர்த்தில் ஆஸ்திரேலிய அணி நிச்சயம் மீண்டு எழும் என்பது எங்களுக்குத் தெரிந்தே இருந்தது.

 

பெர்த்தில் நமக்கும் வாய்ப்பு இருந்தது, ஆனால் அது முடிந்த கதை, எனவே அடுத்த டெஸ்ட் போட்டியில்தான் கவனம்.  ஒவ்வொரு செஷனிலும் சிறந்தவற்றை அளிக்க வேண்டும்.  டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் முக்கியம்.  ஒரு செஷனில் ஆட்டம் மாறிவிடும் என்பதால் நாம் 100%க்கும் அதிகமாக களத்தில் பங்களிப்புச் செய்ய வேண்டும். வரும் டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மென்கள் இன்னும் கூடுதல் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

 

என்னைப் பொறுத்தவரை மெல்போர்னில் சதம் எடுப்பேன் என்று நினைக்கிறேன், ஏனெனில் அடிலெய்ட், பெர்த் டெஸ்ட் போட்டிகளில் நான் பேட் செய்த விதத்தைப் பார்க்கும் போது நிச்சயம் சதம் வரவேண்டும்.

 

நான் 2 சதங்கள் எடுப்பேன், ஆனால் பொதுவாக அவற்றைப் பற்றி சிந்திக்காமல் ஆட வேண்டும். சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அணிக்காக ஆடினால் போதும். சொந்த மைல்கல்கள் பின்னால் வரும்.

 

அஸ்வின் பற்றி அணி நிர்வாகமே முடிவு செய்யும், ரோஹித் சர்மா உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் நேற்று நெட்டில் பேட் செய்தார். அவர் நன்றாகவே ஆடுகிறார். நாளை வலைப்பயிற்சி முடிந்தவுடன் தான் அணித்தேர்வு விவகாரம் பற்றி முடிவு செய்வோம்.

 

இவ்வாறு கூறிய ரஹானே கடந்த 4 இன்னிங்ஸ்களில் 164 ரன்கள் எடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE