மழை எதிர்பார்ப்பில் 5-ம் நாள்: கடைசி 2 விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியா திணறல்: நங்கூரமிட்ட கம்மின்ஸ்

By க.போத்திராஜ்

மெல்போர்னில் நடந்துவரும் பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 399 ரன்கள் இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது. கடைசி 2 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இந்திய அணியும் திணறி வருகிறது. முடிவு கிடைத்துவிடும் என்று மைதானத்தில் 19,855 ரசிகர்கள் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.

399 ரன்கள் வெற்றி இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது. கம்மின்ஸ் 61 ரன்களிலும், லயன் 6 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் கூடுதலாக அரை மணிநேரத்தை கேப்டன் கோலி நடுவரிடம் கேட்டு வாங்கினார். அவ்வாறு கூடுதல் நேரத்தைப் பெற்றும் கம்மின்ஸ்ஸை அகற்ற முடியவில்லை என்பது வேதனை.

நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறும் நிலையில், மழை வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் வெற்றியை மழைத் தடுத்துவிடுமா என்று இந்திய ரசிகர்கள் கவலையுடன் இருக்க , மழை வந்து தோல்வியில் இருந்து காத்துவிடாதா என ஆஸி. ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

இன்று காலையில் இந்திய அணி 55 நிமிடங்கள் விளையாடால் இருந்திருந்தால், இன்று ஆட்டம் முடிந்திருக்கும்.  ஆனால், கேப்டன் கோலி டிக்ளேர் செய்வதற்கு எடுத்துக்கொண்ட நேரம்தான் ஆட்டத்தில் முடிவு கிடைப்பதற்கு தாமதத்தை ஏற்படுத்துகிறது என்று ரசிகர்கள் கருத்தாக இருக்கிறது. நாளை மழை வராமல் இருந்திருந்தால் வெற்றி இந்தியாவின் கைகளில் விரைவில் வசமாகும், ஆனால் ஒருவேளை மழை வந்தால், வெற்றி எட்டாக்கனியாக மாற கோலியின் முடிவு காரணமாகும்.

திணறல்

இந்திய அணியைப் பொருத்தவரை ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் டெய்லண்டர் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறுகின்றனர்.

2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை தங்களின் துல்லியமான லைன், லென்த் பந்துவீச்சில் மிரள வைத்த பும்ரா, இசாந்த், ஷமி, ஜடேஜா ஆகியோர் கடைசி நேரத்தில் திணறுவதை காண முடிந்தது.

ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் ஆல்-ரவுண்டரும் இல்லை, பேட்ஸ்மேனும் இல்லை. ஆனால், கடைசி நேரத்தில் களத்தில் கம்மின்ஸ் பேட் செய்தவிதம் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிகாட்டும் விதமாக இருந்தது.

தனது டெஸ்ட் அரங்கில் 2-வது அரைசதத்தையும் கம்மின்ஸ் அடித்தார். அதிலும் கடைசியில் இசாந்த் சர்மா வீசிய ஓவரில் இரு பவுண்டரிகளை ஸ்டிரைட் டிரைவில் ஆடி கம்மின்ஸ் அசத்தினார்.

டிக்ளேர்

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய இந்திய அணி நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்திருந்தது. மயங்க் அகர்வால் 28 ரன்களிலும், ரிஷப் பந்த் 6 ரன்களிலும் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 55 நிமிடங்கள் மட்டுமே விளையாடிய இந்திய அணி மேலும் 3 விக்கெட்டுகளை இழந்தது.

38 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக இந்திய அணி கேப்டன் கோலி அறிவித்தார். இதைத்தொடர்ந்து 399 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியத் தரப்பில் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

399 ரன்கள் இலக்கு

399 ரன்கள் இலக்காக வைத்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. பும்ரா வீசிய 2-வது ஓவரில், ஆரோன் பிஞ்ச் 3 ரன்கள் சேர்த்த நிலையில், 2-வது ஸ்லிப்பில் இருந்த விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த கவாஜா, ஹாரிஸுடன் இணைந்து பவுண்டரிகளை விளாசத் தொடங்கினார். பந்துவீச்சில் மாற்றம் கொண்டுவந்து, ஜடேஜா அழைக்கப்பட்டார்.

ஜடேஜா வீசிய 10-வது ஓவரில் ‘ஷார்ட் லெக்’ திசையில் நின்றிருந்த அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து, ஹாரிஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த மார்ஷ், கவாஜாவுடன் இணைந்தார். கவாஜா ஆவேசத்தோடு அவ்வப்போது பவுண்டரிகள் விளாசினார். ஆனாலும் நிலைக்காத கவாஜாவை ஷமி வெளியேற்றினார். ஷமி வீசிய 21-வது ஓவரில் எல்பிடபிள்யு முறையில் கவாஜா 33 ரன்களில் வெளியேறினார்.

வாக்குவாதம்

அடுத்து ஹெட் களமிறங்கினார். ஹெட் நிதானமாக பேட் செய்ய மார்ஷ் அடித்து ஆடியதால் ஸ்கோர் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. பும்ரா வீசிய 33 –வது ஓவரில் மார்ஷ் 44 ரன்கள் சேர்த்த நிலையில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அப்போது நடுவரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு மார்ஷ் அங்கிருந்து நகர்ந்தார். 114 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது

அடுத்து மிட்ஷெல் மார்ஷ், ஹெட்டுன் சேர்ந்தார். அதன்பின் ஆஸ்திலேலிய வீரர்கள் விக்கெட்டை தக்கவைத்துக்கொள்ள அதிகம் முயற்சித்ததால் ரன் அதிகம் சேர்க்க முடியவில்லை. அடுத்த சிறிதுநேரத்தில் 10 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்ஷெல் மார்ஷ் ஜடேஜா சுழலில் கோலியிடம் ஷார்ட் கவர் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் பெய்ன், ஹெட்டுன் இணைந்து ஆடினார். ஜடேஜா, ஷமியின் பந்துவீச்சில் சில பவுண்டரிகளை விளாசினார்.

இசாந்த் சர்மா வீசிய 51-வது ஓவரில் 'கிளீன் போல்டாகி' ஹெட் 34 ரன்களில் பெவிலியின் திரும்பினார். அடுத்த 10 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பெய்ன் 26 ரன்கள் சேர்த்த நிலையில், ஜடேஜா சுழலில் ரிஷப் பந்திடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

நெருக்கடி கொடுத்த கம்மின்ஸ்

அடுத்து வந்த கம்மின்ஸ், ஸ்டார்க்  கூட்டணி இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக இருந்தனர். கம்மின்ஸ் இந்திய பந்துவீச்சை அனாசயமாக எதிர்கொண்டார். 18 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டார்க் விக்கெட்டை கழற்றினார் ஷமி.

8-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸுடன், லயன் இணைந்தார். இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பேட் செய்து வருகின்றனர். கம்மின்ஸ் அரைசதம் அடித்து 61 ரன்னிலும், லயன் 6 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணித் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்