ராகுல் திராவிட் ஆலோசனை மறக்க முடியாதது: முரளி விஜய் சிறப்புப் பேட்டி

By எஸ்.தினகர்

இங்கிலாந்தின் பிட்ச் மற்றும் தட்பவெப்ப நிலைகளில் தொடக்க வீரர் என்ற கடினமான பணியைத் திருப்தியளிக்கும் விதமாகச் செய்த முரளி விஜய் ஆஸ்திரேலியா தொடரில் இந்த இளம் இந்திய அணி எழுச்சிபெறும் என்று நம்பிக்கை கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் 402 ரன்களை 40.20 என்ற சராசரியில் எடுத்த முரளி விஜய் 'தி இந்து' (ஆங்கிலம்) இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் தமிழ் வடிவம் வருமாறு:

டெஸ்ட் தொடரை சிறப்பாகத் தொடங்கி விட்டு பிறகு சவால் அளிக்காமல் தோல்வியடைந்தது உங்களை எப்படி ஏமாற்றமடையச் செய்தது? குறிப்பாக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் 4 மணி நேர ஆட்டத்திலேயே இந்திய அணியின் கையை விட்டுச் சென்றதே?

இது ஒரு இளம் அணி, சில வீரர்களே இதற்கு முன்பாக இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் பெற்றிருந்தனர். எங்களுக்கு இது கற்றுக்கொள்ளும் அனுபவம். இந்த அணியிடத்தில் நிறைய திறமைகள் உள்ளன. இங்கிலாந்தில் சூழ்நிலைமைகள் கடினம் என்பதால் சிரமம் கூடுதலாக இருந்தது, ஆஸ்திரேலியாவில் நாங்கள் எழுச்சி பெறுவோம்.

உங்கள் சொந்த பேட்டிங் பார்வையிலிருந்து.... லார்ட்ஸ் டெஸ்ட்டில் கடினமான முதல்நாள் பிட்சில் நீங்கள் எடுத்த 95 ரன்கள், இதற்கு முன்னதாக நாட்டிங்கமில் நடந்த முதல் டெஸ்ட்டில் எடுத்த சதம்...

லார்ட்ஸ் பிட்சில் பந்துகள் எகிறின, ஸ்விங் ஆயின. தரமான இங்கிலாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள யாராவது ஒருவர் உறுதியுடன் நின்று ஆட வேண்டியிருந்தது. நாட்டிங்கமில் அடித்த சதம் இந்திய அணி தொடரை சிறப்பாகத் தொடங்க உதவியது.

இங்கிலாந்து பிட்ச்களுக்காக நீங்கள் உத்தி ரீதியாக என்னன்ன மாற்றங்களை செய்து கொண்டீர்கள்? மட்டையை மேலேயிருந்து கீழே கொண்டு வரும்போது சரியாக இருந்தது மற்றும் உங்கள் ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்பதில் உங்களிடம் தெளிவு இருந்தது பற்றி?

நேரான ஷாட்களை மிட் ஆன் அல்லது மிட் ஆஃப் என்ற "V"-யில் ஆடுவது பிறகு அந்த V-பகுதியை மெல்ல களத்தின் மற்ற பகுதிகளுக்கும் விரிவு படுத்துவதுதான் எனது முதல் திட்டம். இங்கிலாந்து தொடருக்கு முன்பாக ஐஐடி கெம்ப்ளாஸ்ட் மைதானத்தில் எனது பயிற்சியாளர் ஜெயக்குமாருடன் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டேன். இங்கிலாந்தில் எனது ஷாட்களில் ‘கட்’ ஷாட்டை ஆடக்கூடாது என்று முடிவெடுத்தேன், காரணம் அங்கு அது பயனளிக்காது.நான் எனது மனதையும் நன்றாகத் தயார் படுத்திக் கொண்டேன். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், பாரத் அருண், பரத் ரெட்டி, ஆகியோர் எனது ஆட்டத்தின் வளர்ச்சியில் ஆற்றிய பங்கையும் நான் மறக்க முடியாது.

இங்கிலாந்தில் உங்கள் பேட்டிங்கில் சிறப்பான விஷயம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை நான் ஆடாமல் விட்டது. ஒரு தொடக்க வீரருக்கு எந்தப் பந்தை ஆடுவது, எந்தப் பந்தை ஆடாமல் விடுவது என்பதைத் தீர்மானிப்பதுதான் கலை.

இப்படி ஆடவேண்டும் என்பதற்கு உங்கள் மீது செல்வாக்கு செலுத்தியவர்கள் யாராவது உண்டா?

இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய நமக்கு முந்தைய தொடரை வீடியோவில் பார்த்தேன். குமார் சங்கக்காரா ஆஃப் ஸ்டம்ப் பந்துகள் பலவற்றை ஆடாமல் விட்டு பிறகு மெதுவாக இங்கிலாந்து பந்து வீச்சின் மீது ஆதிக்கம் செலுத்தினார். இங்கிலாந்தில் பொறுமை அவசியம் என்பதைக் கற்றுக் கொண்டேன்.

இங்கிலாந்து தொடருக்கு முன்னால் மறக்க முடியாத ஆலோசனை எதுவும் இருந்ததா?

இங்கிலாந்தில் நான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், எனது பேட்டிங்கை நான் எப்படி ஒழுங்கமைக்கிறேன் என்பதும் மிக முக்கியம் என்று ராகுல் திராவிட் எனக்கு கூறிய ஆலோசனை மறக்க முடியாதது.

தொடரில் திருப்பு முனை எது என்று கருதுகிறீர்கள்?

3வது டெஸ்ட் போட்டியில் பிராட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது அந்தப் பந்து வீச்சு இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த தன்னம்பிக்கையையும் தூக்கி நிறுத்தியது.

அந்த சூழ்நிலையில் ஆண்டர்சன், பிராட் ஆகியோரை எதிர்கொள்வது எவ்வளவு கடினமாக இருந்தது?

இருவரும் வேறு விதமான வீச்சாளர்கள், ஆண்டர்சன் பந்துகள் வெளியே, மற்றும் உள்ளே சற்றே லேட் ஸ்விங் ஆகும், மேலும் மணிக்கு 80 மைல்கள் வேகம் வீசுவார். தவறான நகர்வு இவர் பந்தைத் தவறாகக் கணித்து தப்புவது கடினம். பிராட் பந்தின் தையலை பிட்சில் அடித்து பந்துகளை எகிற வைக்கக் கூடியவர்.

தொடரின் பிற்பகுதியில் உங்கள் ஃபார்ம் சரிவு கண்டது பற்றி...

சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டியில் மிக நல்ல பந்தில் அவுட் ஆனேன், 2வது இன்னிங்ஸில் ரன் அவுட் ஆனேன்., அதன் பிறகு எனது உத்வேகம் சற்றே குறைந்தது.

பேட்ஸ்மெனின் கால்நகர்த்தலை சந்தேகத்திற்குட் படுத்தும் சூழ்நிலையில் டியூக் பந்துகளை எதிர்கொள்வதும் கூடுதல் சவால் அல்லவா?

டியூக் பந்துகள் அதிக ஓவர்களுக்கு நன்றாக ஸ்விங் ஆகக்கூடியது, மேலும், பிட்ச்களில் ஈரப்பதம் இருப்பதால் மிக நல்ல பந்துகளை அடிக்கடி எதிர்கொள்ள நேரிடும்.

ஸ்டீவன் பிளெமிங், நீங்கள் மற்றும் புஜாரா போன்றவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து சற்று விலகி கவுண்டி கிரிக்கெட்டில் ஆடவேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இல்லை. நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு நவீன கிரிக்கெட் வீரர் அனைத்து வடிவங்களிலும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் டூ பிளேசியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுப்பாட்டம் ஆடி 20 ஓவர் கிரிக்கெட்டில் அடித்து ஆடுவதில்லையா?

எப்படியிருந்தாலும் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுவது அனுகூலம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

ஆம். ஒரு தொழில்பூர்வ கிரிக்கெட் வீரராக அனைத்துச் சூழ்நிலையிலும் ஆடி அனுபவம் பெறவேண்டும், நிறைய பயணம் செய்ய வேண்டும். அது நம்மை பரிபூர்ண கிரிக்கெட் வீரராக உருமாற்றும். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டை கைவிடுவதாக அது அமையக்கூடாது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் பந்துகள் எகிறும் பிட்ச்கள் தேவை என்பதை நீங்கள் பரிந்துரை செய்வீர்களா?

நாங்கள் அனைவரும் விரும்புகிறோம், ஆனால் ரஞ்சி கிரிக்கெட் என்பது அணியின் தனிப்பட்ட இடங்களுக்கானது, புள்ளிகள் அட்டவணை ஆட்சி செலுத்தும் வடிவம். மேலும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியான சூழ்நிலை இருக்கும். லாஹ்லியில் உள்ள பிட்சில் ஸ்விங், மற்றும் பவுன்ஸ் இருக்கும். ஆனால் பிற உஷ்ணமான பிரதேசங்களில் ஈரப்பதம் இல்லாததால் வறண்ட பிட்ச்களே கிடைக்கும்.

அணி நிர்வாகத்தில் செய்துள்ள புதிய மாற்றங்கள் பற்றி...

நான் அதைப் பற்றி கருத்து கூற அனுமதி கிடையாது. ஆனால் கேப்டன் தோனி எனக்கும் பிறருக்கும் உதவிகரமாக இருந்தார். எல்லோருக்கும் உதாரணமாக திகழ்ந்தார்.



இந்திய அணியின் ஃபீல்டிங், கேட்சிங்...

இந்தப் பகுதியிலும் நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம். மிக முக்கியமான சிறு சிறு நுணுக்கங்களையும் கற்று வருகிறோம். மேலும் ஸ்லிப் உள்ளிட்ட நெருக்கமான பகுதிகளில் இதற்கு முன்னர் சிறந்த வீரர்கள் நின்று கொண்டிருந்தனர், அவர்களது இடத்தில் இப்போது நாங்கள் இருக்கிறோம் என்பதையும் மறந்து விட வேண்டாம்.

ஒவ்வொரு பிட்சிலும் ஒவ்வொரு விதமாக ஸ்லிப்பில் கேட்ச்கள் வரும். இங்கிலாந்தில் ஸ்லிப் திசையில் வரும் கேட்ச்கள் நம்மை விட்டு விலகிச் செல்லும். அல்லது பந்து முன்னால் விழும்.

தமிழில்:முத்துக்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்