ஆஸி.யுடன் நாளை டி20 போட்டி: 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு?

பிரிஸ்பேன் நகரில் நாளை நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் முதலாவது போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு இரண்டரை மாதங்கள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெறவுள்ள நிலையில் முதல் ஆட்டம் பிரிஸ்பேன் நகரில் நாளை நடக்கிறது.

இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரர் எம்.எஸ். தோனி இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது. இதுவரை இந்திய அணி மோதிய 100-க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் ஒரு சில போட்டிகளைத் தவிர அனைத்துப் போட்டிகளிலும் தோனி இல்லாமல் விளையாடியதில்லை. முதல் முறையாக தோனி இல்லாத அணி களம் காண்கிறது.

மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இருந்து இந்திய அணி நிர்வாகம், போட்டி தொடங்குவதற்கு முதல் நாளே 12 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்து வருகிறது. மேற்கிந்தியத் தீவுகள் தொடர் முழுவதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியத் தொடரிலும் இதே நடைமுறையைப் பின்பற்றி நாளை பிரிஸ்பேன், காபா நகரில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடும் 12 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

 

இந்திய அணியில் 3 சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 6 பேட்ஸ்மேன்கள் என்ற ரீதியில் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா காயத்தால் அவதிப்படுவதால், ஆல்ரவுண்டருக்காக, அவரின் சகோதரர் குர்னல் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பிங் பணிக்காக ரிஷப் பந்த்தும்,கூடுதலாக தினேஷ் கார்த்திக்கும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மணிஷ் பாண்டே, உமேஷ் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், குர்னல் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜூவேந்திர சாஹல், கலீல் அகமது, புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் 12 பேர் கொண்டஅணி அறிவிக்கப்படவில்லை என்கிற போதிலும், டி20 போட்டிக்கான அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

ஆஸி. வீரர்கள் விவரம்:

ஆரோன் பின்ஞ் (கேப்டன்), ஏ.சி.அகர், பெஹ்ரென்டார்ப், ஏ.டி.கேரே, கோல்டர் நீல், லின், மெக்டார்மாட், மெக்ஸ்வெல், டி.எம். ஷார்ட், ஸ்டான்லேக், ஸ்டோய்னிஸ், ஆன்ட்ரூ டை, ஜம்பா

 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE