தோனி ஒரு மிகப்பெரிய வீரர்தான், அவர் இல்லாதது குறைதான்; ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக்கிற்கு அரிய வாய்ப்பு: ரோஹித் சர்மா பேட்டி

தோனி என்ற மிகப்பெரிய விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் இல்லாதது ஒரு குறைதான், ஆனாலும் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் போன்றோரிடம் பொறுப்பு பாதுகாப்பாக உள்ளது என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

நாளை கொல்கத்தாவில் முதல் டி20 போட்டி நடைபெறுவதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா கூறியதாவது:

ஆண்டுக் கணக்கில் நம்முடைய மிகப்பெரிய வீரர் எம்.எஸ்.தோனி.  அவரது அனுபவம், களத்தில், விக்கெட் கீப்பிங்கில் அபரிமிதமானது இதனை இழந்துள்ளோம், ஆனால்  ரிஷப், தினேஷ் இருவரும் விக்கெட் கீப்பர்கள், தங்களால் நிரூபிக்க முடியும் என்பதை இருவரும் செய்து காட்ட மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இருவருமே ஐபிஎல் அணியாகட்டும் அல்லது தங்கள் மாநில அணியாகட்டும் நன்றாக ஆடியுள்ளனர். குறைந்த வீரர்களுடன் நாம் உலகக்கோப்பைக்குச் செல்ல முடியாது, நமக்கு தெரிவுகள் நிறைய வேண்டும்.

மே.இ.தீவுகளைப் பொறுத்தவரை ரஸல், பொலார்ட் மட்டுமல்ல மற்ற வீரர்களும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடியுள்ளார்கள். இந்த வடிவத்தை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆடி வருகிறார்கள். ஆகவே நமக்கு எளிதாக இருக்காது.

அவர்களது பலம் பலவீனங்களை அறிய வேண்டும். ஆனால் கவனம் நம் அணிமீதுதான் அவர்கள் மீதல்ல. டி20யில் மேற்கிந்திய அணி அபாயகரமான அணியாகும். இந்த வடிவத்தில் மிக வலுவான் அணியாவார்கள், என்றார் ரோஹித் சர்மா.

இடது கை ஸ்பின்னர் ஷாபாஸ் நதீம், குருணால் பாண்டியா, வாசிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

“அதிக கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதால் அணியில் பேலன்ஸ் தேவை. நம் பெஞ்ச் வலுவாக உள்ளதா என்பதை அவ்வப்போது சோதிக்க வேண்டும், புதிய வீரர்கள் தங்களிடம் பங்களிப்பு செய்ய என்ன வைத்திருக்கின்றனர் என்பதை சர்வதேச போட்டியில்தான் முடிவு செய்ய முடியும், அதுவும் உலகக்கோப்பை இருக்கும் போது வெறும் 15 வீரர்கள் போதாது அந்த 15க்கு வெளியேயும் உள்ள திறமைகளை ஊக்குவிக்க வேண்டும்.

கேப்டன்சி என் ஆட்டத்தை வளர்த்துள்ளது.  எனக்கு பொறுப்புணர்வை அதிகமாக்கியுள்ளது. முன்னிலையில் நின்று அணியை வழிநடத்த பொறுப்பை எனக்கு அளிக்கு அளிக்கிறது கேப்டன்சி. ஆனாலும் நான் முதலில் ஒரு வீரர் அதன் பிறகுதான் கேப்டன். கேப்டன்சி என் ஆட்டத்தை நான் புரிந்து கொள்ள உதவுகிறது. சக வீரர்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது” என்றார் ரோஹித் சர்மா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE