நொந்து நூலான ஆஸி.யை மேலும் கிழித்த தென் ஆப்பிரிக்கா: பெர்த் அதிவேகப் பிட்சில் படுதோல்வி

By இரா.முத்துக்குமார்

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே பெர்த்தில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஏற்கெனவே அந்து நொந்து போன ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்க அணி படு உதை கொடுத்ததன் மூலம் மேலும் நொந்து நூலாகச் செய்துள்ளது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

டேல் ஸ்டெய்ன் தொடங்கி வைக்க தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவை 38.1 ஒவர்களில் 152 ரன்களுக்குச் சுருட்டி பிறகு 29.2 ஓவர்களில் 153/4 என்று அபார வெற்றி பெற்றனர்.

பிட்ச் கடினமாக இருந்ததோடு புற்கள் நன்றாக இருந்தன, ஆஸ்திரேலிய ரசிகர்களும் பெருமளவு மைதானத்துக்கு வரவில்லை. பிட்சில் பந்துகள் எழும்பி ஸ்விங் ஆகின, பழைய பெர்த் பிட்சை நினைவூட்டியது இந்தப் பிட்ச்.

ஃபப் டு பிளேசிஸ் பிட்சைப் பார்த்தவுடனேயே டாஸ் வென்று ஆஸி.யை பேட் செய்ய அழைத்தார். கேப்டன் பிஞ்ச், ஹெட் இறங்கினர். ஸ்டெய்ன், லுங்கி இங்கிடி அங்கு தொடங்கினர். ஆஸ்திரேலியா முதலில் 8/3 என்றும் பிறகு 66/6 என்றும் சரிந்தன. ஆஸி. பேட்ஸ்மென்களின் உத்தியும் இந்த அதிவேகப் பிட்சில் போதாமையாக அமைய ஆஃப் ஸ்டம்ப் பந்துகளுக்கு மட்டையை இலகுவாக்காமல் ஹார்டாகச் சென்றதால் எட்ஜ் ஆனது, கேட்ச் ஆனது. ஏரோன் பிஞ்ச், இங்கிடியின் இன்ஸ்விங்கரில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார், ஆனால் ரிவ்யூ செய்திருந்தால் அது நாட் அவுட் ஆகியிருக்கும்.

முன்னதாக ட்ராவிஸ் ஹெட், ஸ்டெய்னின் ட்ரைவ் ஆட வேண்டிய பந்தை கிரீசில் நின்ற படி மட்டையை விட்டதால் எட்ஜ் ஆகி வெளியேறினார், டி ஆர்க்கி ஷார்ட்டும் ஸ்டெய்ன் பந்தை ட்ரைவ் ஆட முயன்று எட்ஜ் செய்தார், ஆனால் 2வது ஸ்லிப்பில் டுபிளெசிஸ் எம்பிப் பிடித்தார் அபாரமான கேட்சை.

பெலுக்வயோ என்ற தெ.ஆ. பவுலர் கிறிஸ் லின் (15), கிளென் மேக்ஸ்வெல் (11), ஸ்டாய்னிஸ் (14) ஆகியோரை காலி செய்தார். ரபாடா ஒரு முனையில் விக்கெட் விழாவிட்டாலும் படுத்தி எடுத்தார். ஆஸ்திரேலியா அணியில் விக்கெட் கீப்பர் கேரி மட்டுமே மிடில் ஆர்டரில் 33 ரன்களை எடுத்தார், கடைசியில் கூல்ட்டர் நைல் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 31 பந்துகளில் 34 விளாசினார். ஸ்டார்க் 12 ரன்கள் எடுக்க 152 ரன்களுக்கு 39வது ஓவரில் ஆஸி. கதை முடிந்தது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் பெலுக்வயோ 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஸ்டெய்ன் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், இங்கிடி 2 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தென் ஆப்பிரிக்கா குவிண்டன் டி காக், ஹென்ரிக்ஸை இறக்கிய போது மிட்செல் ஸ்டார்க் வீச அழைக்கப்படாமல் கூல்ட்டர் நைல், ஹேசில்வுட் தொடங்கியது ஆச்சரியமாக இருந்தது, காரணம் கூல்ட்டர் நைல் முதல் ஓவரிலேயே 16 ரன்கள் விளாசப்பட்டார். ஒன் கட் கொண்டு வரப்பட்ட ஸ்டார்க்., டி காக்கின் எளிதான பகுதிகளில் வீசி வாங்கினார். ஹேசில்வுட்டும் அவருக்கு வாகாகவே வீச முதல் 8 ஓவர்களுக்குள் ஸ்கோர் 50 ரன்களை எட்டியது.

கமின்ஸ்தன அபாயகரமாக வீசினார், ஒரு பவுன்சரில் ஹென்றிக்ஸ் தோள்பட்டையைப் பதம் பார்க்க சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் ஹென்றிக்ஸ் அச்சப்படவில்லை அதன் பிறகும் அபாரமாக ஆடி 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார், குவிண்டன் டி காக் அதிவேகப் பிட்சில் அதிவேகமாக ஆடி 40 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார். மார்க்ரம் மிகப்பிரமாதமான பேக்புட் ஷாட்களுடன் 32 பந்துகளில் 36 விளாசினார். கிளாசன் 2 ரன்களில் வெளியேறினார், ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டாய்னிஸ் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைபற்றினர், கமின்ஸ் 6 ஓவர்கள் 2 மெய்டன் 18 ரன்கள் விக்கெட் இல்லை. கூல்டர் நைல், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோருக்கு சாத்துமுறை விழுந்தது.

தென் ஆப்பிரிக்கா 30வது ஓவரில் வெற்றியை ஈட்டியது. ஆஸ்திரேலியா 21 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவிடம் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆட்ட நாயகனாக டேல் ஸ்டெய்ன் தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று தென் ஆப்பிரிக்கா முன்னிலை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்