வெற்றி பல குறைகளை மூடி மறைத்துவிடும். தோல்வி அத்தனையையும் அம்பலப் படுத்திவிடும். 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இந்தியா பெற்ற தொடர் வெற்றிகளும் ஒரே ஒரு தோல்வியும் இந்த உண்மையைப் பறைசாற்றுகின்றன.
முதல் சுற்றில் எல்லா அணிகளும் வெற்றியையும் தோல்விகளையும் சந்தித்துவந்த நிலையில் இந்தியா மட்டும் நான்கு போட்டிகளிலும் வாகை சூடியது. அதுவும் பதற்றமில்லாமல், அனாயாசமாக வென்றது. சுழல் பந்து வீச்சாளர்களும் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற மட்டையாளர்களும் வெற்றியை மிகச் சுலபமான சங்கதியாக ஆக்கிக்கொண்டிருந்தார்கள். அதுவும் ஆஸ்திரேலிய அணியை வென்ற விதம் மிகவும் அபாரம். 70 ரன் வித்தியாசத்தில் ஆஸி அணியைத் தோற்கடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
விளைவாக, இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்தது. அரை இறுதியில் வலுவான தென்னாப்பிரிக்க அணி களத்தில் நின்றாலும் அனைவருமே இந்தியாதான் வெல்லும் என் றார்கள். சொன்னபடியே இந்தியா வென்றது. அதுவும் 172 ரன் என்னும் இலக்கை எட்டி வென்றது. சுழல் வீச்சும் மட்டை வீச்சும் சேர்ந்து வெற்றி தேடித்தந்த முதல் நான்கு போட்டிகளைப் போல அல்லாமல் இந்தப் போட்டியை மட்டைக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
டேல் ஸ்டெயின் ஆல்பி மார்க்கல் போன்ற பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 19.1 ஓவரில் 172 ரன்களை எடுக்க முடியும் என்றால் ஆஞ்சலோ மேத்யூஸும் லசித் மலிங்காவும் ரங்கனா ஹெராத்தும் இந்தியாவைக் கட்டுப்படுத்த முடியாது என்னும் நம்பிக்கை ஏற்பட்டது. 50 ஓவர் உலகக் கோப்பை, 50 ஓவர் சாம்பியன்ஷிப் கோப்பை ஆகியவற்றைத் தன் வசம் வைத்திருக்கும் இந்தியா இருபது ஓவர் உலகக் கோப்பையையும் கைப்பற்ற ஞாயிற்றுக்கிழமை இரவுவரை காத்திருக்க வேண்டி யதுதான் பாக்கி என்றே இந்திய ரசிகர்கள் நினைத்தார்கள்.
ஆனால் நடந்தது வேறு. இலங்கைப் பந்து வீச்சாளர்கள் மிகவும் கட்டுக்கோப்புடன் பந்து வீசினார்கள். இந்தியாவை 130 ரன்னுக்குள் மட்டுப்படுத்தினார்கள். தங்கள் கடைசி இருபது ஓவர் சர்வதேச ஆட்டத்தை ஆடும் மஹீலா ஜெயவர்த்தனேயும் குமார சங்கக்காராவும் பொறுப்புடன் ஆடி இந்தியச் சுழலின் அச்சுறுத்தலை முறியடித்தார்கள். இலங்கை கோப்பையை வென்றது.
இலங்கை வலுவான அணிகளுள் ஒன்று. போட்டியை வெல்லக்கூடிய பந்து வீச்சாளர் களும் மட்டையாளர்களும் கொண்ட அணி. எனவே அந்த அணியிடம் இந்தியா தோற்றதில் அவமானம் ஒன்றுமில்லை. ஆனால் இந்தியா தனது முந்தைய ஆட்டங்களைக் கறாராகப் பரிசீலனை செய்திருந்தால் இந்தத் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம்.
தோல்விக்கான காரணமாக எல்லோருமே குறிப்பிடுவது யுவராஜ் சிங்கின் நிதான ஆட்டத்தை. 21 பந்துகளில் 11 ரன் என்பது இருபது ஓவர் போட்டியில் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுதான். ஆனால் இதற்காக அவரைக் குறைசொல்ல முடியாது. கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியதைப் போல, “யுவராஜ் தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்தார்” என்பதில் ஐயமில்லை. பிரச்சினை என்னவென்றால் அவர் தன் ஆட்டத் திறனின் (ஃபார்ம்) உச்சத்தில் இல்லாத நிலையில் அவரை நான்காம் ஆட்டக்காரராகக் களம் இறக்கியதுதான் தவறு.
நிர்ணயிக்கப்பட்ட ஓவர் போட்டிகளைப் பொறுத்தவரை எந்த இடமும் யாருக்கும் நிரந்தர மானதல்ல. சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் போன்றோர் பல முறை வெவ்வேறு நிலைகளில் களம் இறங்கியிருக்கிறார்கள். யுவராஜும் தோனியும் கூட அப்படி இறங்கியிருக் கிறார்கள். குறிப்பிட்ட ஆட்டத்தின் போக்கு, குறிப்பிட்ட ஆட்டக்காரரின் நடப்பு ஆட்டத் திறன் ஆகிய வற்றைப் பொறுத்து இந்த முடிவுகள் எடுக்கப்படும். அப்படி இருக்கையில் யுவராஜை நான்காம் இடத்தில் இறக்கியது ஏன்?
இதே யுவராஜ் தன்னுடைய ஃபார்மின் உச்சத்தில் இருந்த போது பலமுறை அவரை 5, 6 ஆகிய இடங்களில் தோனி இறக்கியிருக்கிறார். 50 ஓவர் போட்டி, 20 ஓவர் போட்டி இரண்டிலும் அப்படிச் செய்திருக் கிறார். 2011 உலகக் கோப்பைப் போட்டிகளில் யுவராஜ் மிக நன்றாக ஆடினார். அதிக ரன் குவித்தவரும் அவரே. அப்படி இருந்தும் இறுதி ஆட்டத்தில் அவரது இடத்தில் தோனி இறங்கினார். அப்படி இந்த இறுதி ஆட்டத்திலும் தோனி முன்னால் இறங்கியிருக்கலாம்; அல்லது சுரேஷ் ரெய்னாவை இறக்கியிருக்கலாம்.
இவர்கள் இருவருமே இன்று யுவராஜை விடவும் சரளமாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். யுவராஜ் எதிர்கொண்ட பந்துகளை இவர்களில் யாரேனும் ஒருவர் எதிர்கொண்டிருந்தால் இந்தியா மேலும் 20 ரன்களை எடுத்திருப்பதற்கான வாய்ப்பு அதிகம். தென்னாப்பிரிக்காவுடனான போட்டியின் கடைசிக் கட்டத்தில் யுவராஜ் ஆட்டமிழந்த பிறகு வந்த ரெய்னா தான் ஆடிய ஒரு ஓவரில் 17 ரன் எடுத்தார்.
ஆக, யுவராஜைக் குறை கூறுவதை விடவும் யுவராஜ் ஃபார்மில் இல்லாதபோதும் அவரையே தொடர்ந்து 4-ம் இடத்தில் இறக்கிய அணித் தலைமையையே குறை கூற வேண்டும். யுவராஜ் ஆடிய முதல் இரு ஆட்டங்களிலேயே அவரது ஃபார்ம் எப்படி இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது. இந்நிலையில் அவரை இன்னிங்ஸை வலுப்படுத்த வேண்டிய கட்டத்தில் அவரை அனுப்பாமல் இருப்பதே சரியான உத்தியாக இருக்க முடியும். இந்த விஷயத்தில் அணித் தலைமை கோட்டைவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
யுவராஜ் விஷயம் ஒருபுறம் இருக்க, இந்தியாவின் இன்னொரு பலவீனமும் தொடர் வெற்றிகளில் அமுங்கிவிட்டது. வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாகப் பந்து வீச்சவில்லை என்பதே அது. இலங்கை வென்றதற்கு சங்கக் காராவின் ஆட்டத்தை விடவும் லசித் மலிங்கா, மேத்யூஸ் ஆகிய வேகப் பந்து வீச்சாளர்களின் துல்லியமான வீச்சும் ஒரு காரணம். மலிங்கா கடைசி ஓவரில் வைட் யார்க்கர்களைத் துல்லியமாக வீசியதால் தோனியால் ரன் எடுக்க முடியவில்லை.
இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் யாரும் எதிரணியினரைத் தொந்தரவு செய்யவே இல்லை. போட்டி நடந்த இடம் சுழலுக்குச் சாதகமான களங்களாக இல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று சொல்ல முடியாது. வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும்போது இதுபோன்ற குறைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. தோல்வியில்தான் இவை அம்பலமாகின்றன. உலகக் கோப்பையில் பெற்ற அனுபவத்தை வைத்து அணியின் அணுகுமுறையில் மாற்றம் வருமா என்பதுதான் இப்போது முக்கியமான கேள்வி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago