ஜென்டில்மேன்களின் விளையாட்டில் ஒரு மோசமான தீர்ப்பு

By ஏ.வி.பெருமாள்

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் வெற்றி, தோல்விகளைவிட அதிகமாக பேசப்பட்ட விஷயம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்-இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடையிலான மோதல் விவகாரம்தான்.

நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் மதிய உணவுக்காக இரு அணியினரும் பெவிலியின் திரும்பியபோது ஆண்டர்சனுக்கும், ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஆண்டர்சன், ஜடேஜாவை கீழே தள்ளிவிட்டதாகப் புகார் எழுந்தது.

ஐசிசி நடத்தை விதி லெவல்-3 ஐ ஆண்டர்சன் மீறியதாக இந்தியா புகார் அளிக்க, பதிலுக்கு ஆண்டர்சனை மிரட்டியதாக இங்கிலாந்து சார்பில் ஜடேஜா மீது ஐசிசியிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், மட் பிரையரிடம் போட்டி நடுவர் டேவிட் பூன் விசாரணை நடத்தினார். அதில், ஆண்டர்சனை நோக்கி பேட்டை உயர்த்தி ஜடேஜா அச்சுறுத்தினார். அப்போது ஆண்டர்சன் தன்னை பாதுகாத்துக் கொள்ள மட்டுமே முயன்றார்.

ஜடேஜாதான் முதலில் ஆண்டர்சனை தள்ளினார் என அவர்கள் இருவரும் சாட்சியம் அளிக்க, இந்தியத் தரப்போ அதை முற்றிலும் மறுத்தது. முடிவில் ஜடேஜாவுக்கு அவருடைய போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபாரதமாக விதிக்கப்பட்டது. நியாமற்ற இந்தத் தீர்ப்பால் பொறுமையின் சிகரமான இந்திய கேப்டன் தோனியே கொதித்துப் போனார்.

ஏமாற்றமளிக்கும் தீர்ப்பு

இதனிடையே ஆண்டர்சன் மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் நிச்சயம் அவருக்கு 2 முதல் 4 டெஸ்ட் போட்டிகள் வரை தடைவிதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐசிசி விசாரணை அதிகாரி கார்டன் லீவிஸின் தீர்ப்போ அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. இருவர் மீதும் தவறில்லை என்று கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ஜடேஜா-ஆண்டர்சன் இடையில் மோதல் சம்பவமே நடைபெறவில்லை என்பதைப் போல் கார்டன் லீவிஸின் தீர்ப்பு உப்பு சப்பில்லாததாக அமைந்திருக்கிறது.

இப்படியொரு தீர்ப்பை வழங்குவதற்கு பதிலாக இரு அணி கேப்டன்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு வீரர்களையும் அழைத்து சமாதானம் செய்திருக்கலாமே? அதைவிட்டு ஏன் இப்படியொரு வீடியோ கான்பரன்ஸ் விசாரணை, அதற்கு ஒரு நடுவர் என எல்லோரையும் ஏமாற்ற வேண்டும்? பந்தை சேதப்படுத்துவது, களத்தில் வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, நடுவரிடம் முறைப்பது உள்ளிட்ட அற்ப விஷயங்களுக்கெல்லாம் அபராதம் விதிக்கும் ஐசிசி, ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தை மட்டும் இவ்வளவு மென்மையாக அணுகியிருப்பது ஏன்?

மறைக்கப்பட்ட வீடியோ ஆதாரம்

இதையெல்லாம்விட முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நாட்டிங்காம் மைதானத்தில் பெவிலியன் வாயிலில் இருந்த வீடியோ கேமரா, சம்பவம் நடைபெற்ற நேரத்தில் மட்டும் செயல்பாட்டில் இல்லை என நாட்டிங்காம் செய்தித்தொடர்பாளர் கூறியிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

ஒரு மைதானத்தில் போட்டி நடைபெறும்போது பாதுகாப்பு கருதி அங்குள்ள அனைத்து கேமராக்களும் முழு அளவில் செயல்பாட்டில் இருக்கும்.

ஆனால் முக்கியமான பகுதியான பெவிலியன் வாயிலில் இருந்த வீடியோ கேமரா செயல்பாட்டில் இல்லை என்ற நாட்டிங்காம் செய்தித் தொடர்பாளரின் பதிலை வைத்துப் பார்க்கும்போது, வீடியோவில் பதிவான ஜடேஜா-ஆண்டர்சன் இடையிலான மோதல் காட்சிகள் மறைக்கப்பட்டுவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆண்டர்சன் மீது தவறில்லாதபட்சத்தில் அவர்கள் வீடியோ பதிவுகளை மறைக்க வாய்ப்பில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் வந்திருக்காது.

காப்பாற்றப்பட்ட ஆண்டர்சன்

ஜடேஜா-ஆண்டர்சன் இடையிலான மோதல் சம்பவம் நடந்ததற்கு இரு அணிகளின் வீரர்களைத் தவிர வேறு எந்த சாட்சியமும் இல்லை. அவர்களில் யாரை விசாரித்தாலும், நிச்சயம் உண்மை வெளிவராது. ஆண்டர்சனை காப்பாற்ற இங்கிலாந்து அணி நிர்வாகம் மேற்கொண்ட கடுமையான முயற்சிக்கு இப்போது கார்டன் லீவிஸ் தீர்ப்பின் மூலம் பலன் கிடைத்திருக்கிறது.

ஆண்டர்சனைக் காப்பாற்ற இங்கிலாந்து கடுமையான முயற்சி மேற்கொண்ட அதேவேளையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஏன் ஜடேஜாவுக்கு நியாயம் கிடைக்க குரல்கொடுக்கவில்லை? நடுவரின் முடிவை மறு ஆய்வு செய்யும் முறை (டிஆர்எஸ்) உள்ளிட்ட சிறு விஷயங்களுக்குகூட போர்க்கொடி தூக்கும் செல்வாக்கு படைத்த பிசிசிஐ, ஜடேஜா விஷயத்தில் மட்டும் மென்மையான போக்கை கடைப்பிடிப்பது ஏன்?

ஜடேஜா பலிகடா?

கார்டன் லீவிஸ் தீர்ப்பு தொடர்பான பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேலின் பதிலும் மழுப்பலான பதிலாகத்தான் இருக்கிறது. மொத்தத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் சக்தி படைத்த இரு அணிகளும் பரஸ்பரம் பேசி தங்களின் வீரர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றிக் கொண்டதையே கார்டன் லீவிஸின் தீர்ப்பு காட்டுகிறது.

அதேநேரத்தில் இந்தத் தீர்ப்பை இன்னொரு கோணத்தில் பார்த்தால் ஆண்டர்சனால் கீழே தள்ளிவிடப்பட்ட ஜடேஜாவுக்கு நியாயம் கிடைக்கவில்லையோ என்று தோன்றுகிறது. ஐசிசி நிர்வாகத்தில் கோலோச்சும் பிசிசிஐக்கு இங்கிலாந்தின் ஆதரவும், இங்கிலாந்துக்கு பிசிசிஐயின் ஆதரவும் தேவை என்பதால் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உண்மையை மறைத்து பாதிக்கப்பட்ட ஜடேஜாவை பலிகடா ஆக்கியிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆண்டர்சனோ, ஜடேஜாவோ யாராக இருந்தாலும் சரி, செய்த தவறுக்கு நிச்சயம் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். செல்வாக்கு படைத்த அணிகளுக்கு ஒரு தீர்ப்பும், எஞ்சிய அணிகளுக்கு ஒரு தீர்ப்பும் வழங்கப்படுவது சரியான அணுகுமுறையல்ல. ஜென்டில்மேன்களின் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் கார்டன் லீவிஸின் தீர்ப்பு மோசமான முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்