எட்ஜ்பாஸ்டனில் வெற்றிக்கு மிக அருகில் வந்து இந்திய அணி தோற்றதன் மூலம் நிறைய அனுகூலங்களை பெற்றாலும் இறுதியில் முடிவு தோல்வி என்பது சிறப்பாக ஆடிய கேப்டன் விராட் கோலி, 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலர்களுக்கு நிச்சயம் இருதயம் உடையும் அனுபவமாகவே இருக்கும்.
ஏனெனில் இந்திய கிரிக்கெட் அணி முன்னெப்போதும் இல்லாத தீவிரத்துடன் ஆடுகிறது, அதனால் தோல்விகள் நிச்சயம் இந்திய அணியை உலுக்கவே செய்யும்.
இங்கிலாந்து அணி தன் கேட்ச்களைப் பிடிக்க ஆரம்பித்தால் இந்திய அணியின் தோல்வி இன்னமும் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கும், அல்லது இனி தீர்மானிக்கப்படும்.
2வது டெஸ்ட் போட்டிக்கு பென் ஸ்டோக்ஸ் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய நிம்மதி. ஏனெனில் அவர் மிடில் ஆர்டரைக் காலி செய்து விடும் திறமை கொண்டவர். அவருக்குப் பதில் கிறிஸ் வொக்ஸ் அல்லது மொயின் அலி வரலாம் இந்த ஓட்டையை இந்திய அணி நன்றாகப் பயன்படுத்த வேண்டும்.
இந்திய அணியும் பீல்டிங்கில் முன்னேற வேண்டியுள்ளது, எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவண் மட்டும் வாய்ப்புகளை பிடித்திருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். மேலும் சாம் கரன் என்ற இளம் வீரர் எதிர்த்தாக்குதல் ஆட்டம் ஆடும்போது கேப்டன் விராட் கோலி என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பதுதான் நடந்தது.
இந்திய அணிக்குப் பெரிய அனுகூலம் என்னவெனில் பந்து வீச்சு அபாரமாக உள்ளது, அஸ்வினின் அயல்நாட்டுப் பிட்சில் திடீர் எழுச்சி இங்கிலாந்துக்கு இன்னும் கவலையளிக்கவே செய்யும். காரணம் லார்ட்ஸ் பிட்ச் இன்னமும் கூட வறண்ட பிட்சாகவே இருக்கும். அலிஸ்டர் குக், எப்போதும் எந்த வேகப்பந்து வீச்சை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற சிந்தனையிலிருந்து தற்போது அஸ்வினிடம் விக்கெட் கொடுக்காமல் இருப்பது எப்படி என்ற புதிய குழப்பத்தில் ஆட்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியின் இன்னொரு சாதக அம்சம் என்னவெனில் நம் பேட்டிங்கை தொடர்ந்து நெருக்கடியிலும் அழுத்தத்திலும் வைத்திருந்ததே. விராட் கோலி இன்னமும் கூட ஆண்டர்சனை தன்னம்பிக்கையுடன் ஆடுவது போல் தெரியவில்லை. ஆனாலும் அவரது பொறுமை மற்றும் உறுதி உலகத்தரம் வாய்ந்த இரண்டு டெஸ்ட் இன்னிங்ஸ்களை அவருக்கு எட்ஜ்பாஸ்டனில் அளித்தது.
விஜய், தவன், ரஹானே, ராகுல் ஆகியோர் தங்கள் உத்தியை மீண்டுமொருமுறை பரிசீலித்துக் கொள்வது நல்லது. புஜாரா அணிக்குள் வந்தால் நல்லது என்றே இப்போது இந்திய ரசிகர்களுக்குத் தோன்றலாம், ஆனால் ரசிகர்கள் பார்வை வேறு அணி நிர்வாகத்தின் பார்வை வேறு.
ரஹானே நிச்சயம் நிரூபிக்க வேண்டியுள்ளது, தேவையில்லாமல் அவரை உட்கார வைத்து செய்த பரிசோதனைகளினால் அவர் இந்திய பிட்ச்களில் ஸ்பின் பந்து வீச்சில் கூட திணறும் வீரராக மாற்றப்பட்டிருப்பதுதான் நடந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் 7 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 10.72 என்பது அவரது தரத்துக்கு மிகவும் இழுக்கானது.
இங்கிலாந்து அணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வலது கை பேட்ஸ்மென் 20 வயது ஆலி போப் நாளை ஆடுவார் என்பது ஏறக்குறைய ஊர்ஜிதமாகி உள்ளது. இந்திய அணி பவுலர்கள் உண்மையில் பயப்பட வேண்டியது ஜானி பேர்ஸ்டோ என்ற அபாய வீரரின் பேட்டிங்கில்தான். விரைவில் எதிரணியிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துச் செல்வார்.
ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவன் தேவையா?
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு அடுத்த படியாக அதிக ரன்களை எடுத்தவர் பாண்டியா என்றாலும் அவரது ஆட்டத்தில் ஒரு முதிர்ச்சியில்லை. பவுலிங்கில் அவரை விராட் கோலி நம்பவில்லை.
பேசாமல் இவருக்குப் பதிலாக கருண் நாயர் போன்ற கூடுதல் பேட்ஸ்மெனைத் தேர்வு செய்துகொள்ளலாம். பவுலிங்கில் பிட்ச் வறண்டு காணப்பட்டால் உமேஷ் யாதவ்வை தூக்கி விட்டு குல்தீப் அல்லது ஜடேஜாவைக் கொண்டு வர வாய்ப்புள்ளது.
ஷிகர் தவண் மீது அவர் ஏதோ சேவாக் போல் நம்பிக்கை வைப்பது வீணே. எப்போது வேண்டுமானாலும் எட்ஜ் ஆகும் அவரது கால் நகர்த்தல்கள் சர்வதேச உயர்தர பந்து வீச்சுக்குப் பொருத்தமானதாக இல்லை.
ஆனால் நாம் என்ன மாற்றமெல்லாம் வேண்டும், விரும்பத்தக்கது என்று கூறுகிறோமோ அதையெல்லாம் கோலி ஒரு போதும் கவனிக்க மாட்டார், மாறாத அதே அணியுடன் கூட நாளை களமிறங்கலாம். கோலியின் ஸ்டைல் என்னவெனில் எப்போது மாற்றம் தேவையோ அப்போது செய்ய மாட்டார், எப்போதெல்லாம் மாற்றம் தேவையில்லையோ அப்போதெல்லாம் மாற்றம் செய்வார். கேட்டால் இது என் ஸ்டைல் என்பார். ஆகவே அதே அணியாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா 4 கேட்ச்களை விட்டன. இதனால் இந்தியாவுக்குக் கூடுதலாக 154 ரன்களும் இங்கிலாந்துக்கு கூடுதலாக 86 ரன்களும் கிடைத்தன.
இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவோம் என்று ஆடுவதை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அவர், “பெரிய அளவில் நாங்கள் சிறப்பாக ஆடாமலேயே நெருக்கடியிலும் வெற்றி வழிகளைக் கண்டுபிடித்துக் கொள்கிறோம்” என்று கூறியது இங்கிலாந்து அணி குறித்த அவரது கருத்தல்ல, மாறாக, இந்திய அணியைப் பற்றிய கருத்தாகும், அதாவது, “இந்திய அணி எவ்வளவு சிறப்பாக ஆடினாலும் எப்படியாவது அவர்களே தோற்று விடுவார்கள்” என்று கூறுவது போல் அவர் சுற்றிவளைத்து மறைமுக அர்த்தத்தில் இடக்கரடக்கலாகத் தெரிவிப்பது போல்தான் நமக்குப் படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago