லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேதனையான இன்னிங்ஸ் தோல்வியடைந்ததையடுத்து இந்தத் தொடரில் இந்திய அணி 5-0 ஒயிட்வாஷைத் தவிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மொத்தமே 170.3 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்தின் 100 ஆண்டுகால வரலாற்றில் 3வது மிகக்குறுகிய டெஸ்ட் போட்டியாகியுள்ளது. நம்பர் 1 அணிக்கு நிச்சயம் இது பெரிய அவமானகரமானத் தோல்விதான். உண்மையான முகத்தை இங்கிலாந்து இந்திய அணி வீரர்களுக்குக் காட்டியது.
இங்கிலாந்து தன் முந்தைய நாள் முன்னிலையான 250 ரன்களுக்குக் கூடுதலாக 39 ரன்கள் சேர்த்து 396/7 என்று டிக்ளேர் செய்ய பிறகு இந்திய அணியை 130 ரன்களுக்குச் சுருட்டியது, ஆண்டர்சன், பிராட் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
முரளி விஜய் 2வது இன்னிங்சில் இன்சைடு எட்ஜில் ஆண்டர்சனின் லார்ட்ஸ் மைதான 100வது விக்கெட்டாக வெளியேறினார், இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆகியுள்ளார் விஜய். கே.எல்.ராகுல் ஏதோ தன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஆடுவது போல் உள்ளே வரும் பந்தை வலைப்பயிற்சி போல் பிளிக் செய்ய முயன்று எல்.பி.ஆனார்.
அதாவது இப்போதிருக்கும் வீரர்கள் சச்சின் டெண்டுல்கரிடமோ, சேவாகிடமோ ‘பேக் அண்ட் அக்ராஸ்’ என்றால் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அயல்நாட்டுப் பிட்ச்களில் ஆடினால் பயன்கிட்டும். இல்லையெனில் காலை நீட்டி நீட்டி எல்.பி., எட்ஜ் என்று ஆகிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இந்திய தொடக்க வீரர்கள் இந்த ஆண்டில் அயல்நாட்டில் 13 ரன்கள் என்ற சராசரியில்தான் ஆடிவருகின்றனர்.
புஜாரா 87 பந்துகள் தாக்குப் பிடித்தார், இது அவரது உத்தியின் கோளாறு, இதனை நாம் அதிக பந்துகளை எதிர்கொண்ட தீரர் என்றெல்லாம் புகழ்பாட முடியாது, 87 பந்துகளில் அவர் குறைந்தது 45-50 ரன்களையாவது எடுத்திருந்தால் ஆட்டம் வேறு விதத்தில் பயணித்திருக்க வாய்ப்பு உண்டு. ராகுல் திராவிட் ஒரு காலத்தில் இப்படித்தான் மட்டை போடுவார், அதில் எந்த ஒரு பயனுமில்லை என்பதை இயன் சாப்பல் போன்ற கிரிக்கெட் வல்லுநர்கள் கண்டித்துள்ளனர்.
கிரிக்கெட் என்பது பேட்ஸ்மென்கள் ரன் எடுக்க வேண்டும், பவுலர்கள் விக்கெட் எடுக்க வேண்டும் என்ற இரு அடிப்படையில்தான் இயங்குகிறது, மட்டையை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்யாமல் நான் 5 மணி நேரம் ஆடினேன், ஆனால் அணி 100 ரன்களில் சுருண்டது என்றால் அதில் எந்த ஒரு பயனுமில்லை என்பதை திராவிட்டுக்கு யாராவது சொல்லுங்களேன் என்று இயன் சாப்பல் கூறினார், அதையேதான் இப்போது புஜாராவுக்கும் கூற வேண்டியுள்ளது.
கடைசியில் 86 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து பிராடின் அதியற்புத இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார், அறிமுகமான டெஸ்ட்டிலிருந்து அதிக முறை பவுல்டு ஆன ஒரு வீரரானார் புஜாரா. காரணம் கிரீசிற்குள் இருந்த படியே குப்பைகொட்டியதுதான். கால்களை அரைகுறையாக நகர்த்துவது, மட்டையை பந்துக்கு விரைவில் இறக்க முடியாமல் மந்தகதியில் ஆடுவது இவையெல்லாம் புஜாராவின் தீர்க்க முடியா பலவீனங்கள். ரவிசாஸ்திரி போன்ற பொம்மைப் பயிற்சியாளரெல்லாம் இதற்கு ஒரு போதும் உதவ முடியாது.
ரஹானேவும், புஜாராவும் 12 ஓவர்களுக்கும் மேல் திக்கித் திணறி நின்றனர். தொடர்ந்து ரஹானேயின் எட்ஜை அச்சுறுத்திய பிராடின் பந்து கடைசியில் எட்ஜைத் தீண்டியது, ரஹானே வெளியேறினார்.
முதுகுவலியுடன் ஆடிய விராட் கோலி, வலிநிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொண்டுதான் ஆடினார். கிரீஸிற்கு வெளியே நின்று கால்களை முன்னால் தூக்கிப் போட்டு பந்தைத் தீண்டி விடுவேன் என்று அச்சுறுத்தினார். சாம் கரன் இதனை முறியடிக்க விக்கெட் கீப்பரை ஸ்டம்புக்கு அருகில் அழைத்தார். அவுட் ஸ்விங்கரில் வெறும் பீட்டன் தான் ஆவார், ஆகவே இம்முறை இன்ஸ்விங்கர் வீசினால் வெளியே நிற்கும் இவர் எப்படியும் பந்தைத் தீண்டுவார் அப்போது லெக் திசையில் நமக்கு வாய்ப்பு உண்டு என்று இங்கிலாந்து மிகச்சரியாகத் திட்டமிட்டது. ஷார்ட் லெக் பீல்டரைக் கொண்டு வந்தார் பிராட். அப்போது கூட தன்னை ஒர்க் அவுட் செய்கிறார்கள் என்று ஒரு கேப்டனுக்குப் புரியவில்லை. கடைசியில் இன்ஸ்விங்கரை வீச மிகவும் மோசமாக அதனைத் தீண்டினார், ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது.
அடுத்த பந்தே தினேஷ் கார்த்திக்கிற்கு ஒரு பெரிய இன்ஸ்விங்கரை வீச கால்காப்பில் வாங்கினார், வெளியேறினார்.
பிட்ச் கடினமான பிட்ச்தான், அதனுடன் பந்துகள் சில வேளைகளில் எழும்பியும் சில சமயங்களில் தாழ்ந்தும் வெறுப்பேற்றின, பாண்டியா, அஸ்வின் போராடி ஆடினர், அஸ்வின் நல்ல உத்தியைக் கடைபிடித்தார். ஸ்கோர் செய்யும் வாய்ப்புகளை விடாமல் ஸ்கோர் செய்தனர். இந்திய அணியை 100 ரன்களைக் கடக்கச் செய்தனர். பாண்டியா, அஸ்வின் இருவருமே விரல்களில் அடிவாங்கினர். ஆனால் இருவரும் 55 ரன்களைச் சேர்த்தனர், 26 ரன்கள் எடுத்த பாண்டியா இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆனார். அஸ்வின் 33 ரன்கள் எடுத்து கடைசி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். குல்தீப் யாதவ், மொகமது ஷமியை ஆண்டர்சன் பவுல்டு மற்றும் எல்.பியில் வீழ்த்த இஷாந்த் ஷர்மாவை வோக்ஸ் வீட்டுக்கு அனுப்பினார், இந்திய அணி 47 ஓவர்களி 130 ரன்களுக்குச் சுருண்டது. ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
5 டெஸ்ட்கள் கொண்ட போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் நெருக்கமாக வந்து தோல்வியடைந்த இந்திய அணி லார்ட்ஸில் மேலும் மோசமாக ஆடி மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து 5-0 உதையை வாங்காமல் வெளியே வருமா என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் இனி வரும் மைதானங்கள் பிராட், ஆண்டர்சன் ஆகியோர் விக்கெட்டுகளைக் குவித்த பிட்ச்களாகும். இந்திய அணி தன் பேட்டிங் உத்தியில் கடுமையான சட்டக மாற்றத்தை நிகழ்த்தவில்லையெனில் நிச்சயம் 5-0 உதை உறுதியே.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago