ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்துள்ளது.
இப்படித்தான் இந்திய அணி ஆட வேண்டும் என்று இங்கிலாந்தில் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பம்மிப் பம்மி ஆடியதில் முதுகில் அடி விழுந்த பின் முதுகெலும்பு விழித்துக் கொண்டது.
ஷிகர் தவண் தன்னுடைய உண்மையான திறன் என்னவென்பதை உணர்ந்து கொண்டு பந்துக்காக காத்திருந்து ஆடினார். இல்லையெனில் ஐபிஎல் மட்டைப் பவுலர்களைப் போல் உலகின் சிறந்த பவுலர்களையும் ஆடி வாங்கிக் கட்டிக்கொள்வார்.
இம்முறை தவறிழைத்தது இங்கிலாந்து. ஆதில் ரஷீத்துக்குப் பதிலாக சாம் கரனை அணியில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் ரஷீத் சுத்த வேஸ்ட் என்று விமர்சனங்கள் எழுந்த பிறகே ரஷீத்தைத் தூக்கினால் விமர்சனங்களுக்கு அடிபணிந்ததாகி விடும், அப்படி விட்டுவிடுமா இன்றைய கோலியிச பாரம்பரியம், ஒரு வகையில் கோலியிசம் ரூட்டுக்கும் இருக்கும்தானே?
முதல் ஒருமணி நேரத்தில் விக்கெட்டை இழக்காமல் ஆடியது இந்த அணியைப் பொறுத்தவரை சாதனைதான், அதிலும் ஷார்ட் பிட்ச் பந்தை அதற்குரிய முறையில் கட் ஷாட் ஆடி 3 பவுண்டரிகளை அடித்த ஷிகர் தவண், ஜேம்ஸ் ஆண்டர்சன் அரிய தவறு இழைத்து லெக் திசையில் வீசும் போது 2 பவுண்டரிகள் அடித்து 7 பவுண்டரிகள் எடுத்த பிறகு அந்தப் பந்து எட்ஜ் ஆவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆட்டமிழந்து வெளியேறினார்.
கே.எல்.ராகுல் தொடக்கக் கணங்களில் ஒன்றும் புரியாமல் ஆடினார், ஆனால் அவரும் அடிக்க வேண்டிய பந்துகளை அடிப்பதில் சோடை போகவில்லை. ஆனாலும் மிகவும் சாதாரணமான உத்தியான 5-6 பந்துகளை அவுட் ஸ்விங் செய்து விட்டு அதே லெந்தில் ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தால் எல்.பி. அல்லது பவுல்டு ஆவது என்ற ரீதியில் ராகுல் வோக்ஸிடம் வெளியேறினார். புஜாராவும் 14 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார். கடைசியில் ஒன்றிரண்டு ஆண்டுகளாக ஆடிப்பழக்கமில்லாத ஹூக் ஷாட்டை வோக்ஸ் பந்தில் ஆடி லெக் திசையில் டீப்பில் குறிபார்த்து கையில் அடித்து வெளியேறினார். உணவு இடைவேளையின் போது 82/3 என்று கொஞ்சம் தடுமாறித்தான் போனது. கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கோலி, ரஹானே அபாரக் கூட்டணி:
உணவு இடைவேளைக்குப் பிறகு கோலி, ரஹானே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் விராட் கோலி இருமுறை இன்ஸ்விங்கரில் கால்காப்பில் வாங்கினார். ஒருமுறை எல்.பி.காக ரிவியூவில் பிழைத்தார் கோலி.
ரஹானே தன் தவறுகளைத் திருத்திக் கொண்டு பந்தை அதன் நேர் கோட்டில் சந்தித்தார். பந்தை தன்னிடம் வரும் வரை காத்திருந்தார்.
மேலும் தைரியமாக ஆடினார், புல்ஷாட், கட்ஷாட்களை துல்லியமாக ஆளில்லாத இடங்களில் அடித்தார். குறிப்பாக பேக்ஃபுட் ஆட்டத்தை இந்திய அணியினர் மீண்டும் கண்டுபிடித்துக் கொண்டனர்.
சூழ்நிலையும் கொஞ்சம் சாதகமாக இருந்தது, சூரிய ஒளி நன்றாக இருந்தது பந்துகள் ஸ்விங் குறைந்தது, பென் ஸ்டோக்ஸ் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி லைனுக்குத் திணறினார்.
ரஹானேயும் இருமுறை எட்ஜ் செய்தார், ஆனால் பந்து பீல்டர் கைக்குச் செல்லவில்லை. இதனையடுத்து ரஷீத்திடம் பந்து கொடுக்கப்பட்டது, ஆனால் பயனில்லை. ஆனால் ரஷீத் 5 ஓவர்கள் 29 ரன்கள் கொடுத்தார்.
கோலியும் மெதுவே தனது கவர் ட்ரைவ், ஸ்கொயர் ட்ரைவ்களைக் கண்டு கொண்டார். ட்ரைவ்கள், கட்கள், புல்கள் என்று இருவரும் அரைசதம் கடந்தனர். ரஹானே 57 ரன்களில் இருந்த போது வோக்ஸ் பந்தை ஒரு அரக்க கட் ஷாட் ஆடினார், ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடினமான வாய்ப்பைத் தவறவிட்டார். பந்து பழையதாகிக் கொண்டிருந்தது. புதிய பந்து எடுப்பதற்குள் ரன்களை அடிக்க வேண்டும் என்று கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டினார்கள். இதில் ரஹானே 81 ரன்களில் பிராட் வீசிய பந்தை எட்ஜ் செய்து சிக்கினார், பிராடும் கொஞ்சம் ரஹானேவை ஒர்க் அவுட் செய்தார். குக் கடைசி நொடியில் இடது புறம் டைவ் அடித்து கேட்ச் எடுத்தார். ரஹானே 12 பவுண்டரிகளை அடித்திருந்தார்.
2002க்குப் பிறகு இங்கிலாந்தில் சதக்கூட்டணி அமைத்ததில் இருவரும் சேர்ந்து 159 ரன்களை 4வது விக்கெட்டுக்காக எடுத்து அணியை வலுப்படுத்தினர்.
விராட் கோலி 152 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் சேர்த்து இன்னொரு உலகத்தர சதத்துக்குத் தயாராக இருந்த போது ரஷீத் பந்து ஒன்று திரும்பி லெக்ஸ்பின்னாக கோலி கவர் டிரைவ் முயற்சியில் எட்ஜ் செய்தார். கோலி வெளியேறினார்.
பந்து பழையதாக இருக்கும் போதே, ரஹானே ஆட்டமிழந்த பிறகே ரிஷப் பந்த்தை இறக்கியிருக்க வேண்டும், ஆனால் ஹர்திக் பாண்டியாவை இறக்கி சரியாக புதிய பந்து வரும் நேரத்தில் ரிஷப் பந்த்தை இறக்குகின்றனர், இது கூடவா ஒரு கேப்டனுக்குப் புரியாது?
ஆனால் பந்த் இறங்கியவுடன் ஆதில் ரஷீத்தை நேராக அவரது தலைக்கு மேல் தூக்கி சிக்சருக்கு அடித்தார். அறிமுகப் போட்டியில் முதல் ரன்களையே சிக்சர் அடித்து எடுத்தார் ரிஷப் பந்த். ஆனால் அதன் பிறகு பந்தை ஆடினார், விட்டார். பிறகு ஒரு அபாரமான மிட்விக்கெட் பிளிக் பவுண்டரி அடிதார். கடைசியில் 32 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
பாண்டியா 18 ரன்கள் எடுத்திருந்த போது ஆண்டர்சன் பந்தில் வழக்கமான எட்ஜ் செய்தார். பட்லர் கேட்ச் எடுத்தார். வேஸ்ட் விக்கெட். இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 307/6.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago