ரஷ்ய உலகக் கோப்பையில் நல்லதும் கெட்டதும்

By பெ.மாரிமுத்து

19 வயதான கிளியான் பாப்பேவின் அற்புதமான ஆட்டம், பிரேசிலின் நெய்மர் நாடகமாடியதாக எழுந்த குற்றச்சாட்டு, நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய ஜெர்மனி லீக் சுற்றிலேயே மூட்டை கட்டியது, நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, போர்ச்சுக்கல், ஸ்பெயின் வெளியேற பிரேசில் கால் இறுதிவரை தாக்குப்பிடித்தது, டிகோ மரடோனாவின் கிண்டல் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமலேயே ரஷ்யாவில் சுமார் ஒரு மாத காலம் நடைபெற்று வந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த  ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நிறைவடைந்தது. இளம் வீரர்களை உள்ளடக்கிய பிரான்ஸ் அணி இறுதிப் போட்டியில் முதல்முறையாக பட்டம் வென்று சாதனை படைக்கும் குரோஷியாவின் கனவை கலைத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக மகுடம் சூடியது. இந்த உலகக் கோப்பை திருவிழாவில் நடைபெற்ற நல்ல விஷயங்களும், சில விரும்பத்தகாத விஷயங்களும் குறித்த ஓர் அலசல்...

புதியவர்கள்  அறிமுக அணியாக களமிறங்கிய ஐஸ்லாந்து, பனாமா ஆகிய அணிகள்  லீக் சுற்றை தாண்டவில்லை. எனினும் அந்த அணிக்கு ரசிகர்கள் வழங்கிய ஆதரவு அளப்பரியது. ஐஸ்லாந்து போட்டிகளை காண அந்நாட்டு மக்கள் பெரும் கூட்டமாக படையெடுத்தனர். அதேபோல் உலகக் கோப்பையில் முதன்முறையாக பனாமா நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது தொலைக்காட்சி வர்ணணையாளராக இருந்த பனாமாவை சேர்ந்தவர் ஆனந்த கண்ணீர் சிந்தியது என்றும் மறக்க முடியாதது.

விருப்பமான மைதானங்கள் 12 நகரங்களில் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டாலும் ரசிகர்கள் அதிகம் விரும்பி வந்து பார்த்த மைதானங்கள் லுஸ்னிக்கி மற்றும் சோச்சி தான். இங்கு நடைபெற்ற அனைத்து ஆட்டங்களின் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. 

உணர்ச்சிகரமான நிமிடங்கள் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தில் 19 கோல்கள் அடிக்கப்பட்டது. 5 ஆட்டங்கள் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. 4 ஆட்டங்களின் முடிவுகள் பெனால்டி ஷூட் அவுட் மூலம் தீர்மானிக்கப்பட்டது. இவை அனைத்தும் ரசிகர்கள் தங்களது விரல் நகங்களை கடித்தபடி ஆட்டத்தின் முடிவை தெரிந்து கொள்வதில் இன்பமான பதற்றத்தை தொற்றிக்கொள்ள வைத்தது.

ஃபேர் பிளே ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்களில் 4 சிவப்பு அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டது. விஏஆர் தொழில்நுட்ப உதவியால் மைதானத்தின் அனைத்து பகுதியிலும் நடைபெற்ற நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டதால் முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திவிடக்கூடாது என் பதில் வீரர்கள் தகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டார்கள். நாக் அவுட் சுற்றில் காயம் அடைந்த உருகுவே வீரர் எடி சன் கவானியை, கைத்தாங்கலாக கிறிஸ்டியா னோ ரொனால்டோ அழைத்துச் சென்று ரசிகர்களின் மனதை வென்றார்.

ரசிகர்களை ஈர்த்தவர்கள் பிரான்ஸின் கிளி யான் பாப்பே, இங்கிலாந்தின் ஹாரிகேன், குரோஷியாவின் லுகா மோட்ரிச், இவான் ராக்கிடிக், பெல்ஜியத்தின் ரோமுலு லூகாகு ஆகியோர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர்.

அதிர்ச்சி வைத்தியம் பங்கேற்ற 32 அணிகளில் தரவரிசையில் 70-வது இடத்தில் இருந்த ரஷ்யா நாக் அவுட் சுற்றில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட்டில் வீழ்த்தி வெளியேற்றியது. யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக விளையாடி வந்த ரஷ்ய அணியின் பயணம் கால் இறுதியுடன் முடிவுக்கு வந்தது.

விஏஆர் இந்த தொழில்நுட்பத்தின் அறிமுகம் குறித்து ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அது, சில குறைபாடுகள் கொண்ட ஒரு பயனுள்ள மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்பமாக அமைந்தது.

இனவெறி ஜெர்மனி அணி லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் அந்த அணி வீரரான மெசட் ஓஸில் இனவெறிக்கு ஆளானார். மெசட் ஓஸில் துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர், மேலும் அவர், துருக்கி பிரத மர் டயிப் எர்டோகனுடன் இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்ததும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இதேபோன்று துருக்கி பாரம்பரியத்தைக் கொண்ட சுவீடன் வீரர் ஜிம்மி துர்மாஸ், இணையதளங்களில் இனவெறி சர்ச்சைக்கு உள்ளானார். ஜெர்மனி அணிக்கு எதிரான ஆட்டத்தில் துர்மாஸ் செய்த ஃபவுல் காரண மாக வெற்றியை இழந்திருந்தது. ஆனால் அவரது சக அணி வீரர்களும், கால்பந்து சங்கமும் அவருக்கு ஆதரவாக இருந்தன. 

அர்த்தமற்றவைகள் செர்பியா அணி 1-2 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்திடம் தோல்வியடைந்த ஆட்டத்தில் ரெப்ரீயாக செயல்பட்ட ஜெர்மனியின் பெலிக்ஸ் பிரைச்சை, போர் குற்றங்களை விசாரிக்கும் ஐ.நா. நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என செர்பியா கால்பந்து அணியின் பயிற்சியாளர் லேடன் கிரஸ்டஜிக் கடுமையாக விமர்சித்தார். இதனால் ஃபிபா அமைப்பு அவருக்கு அபராதம் விதித்தது.

ஜெர்மனி சுவீடன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தில் வெற்றி பெற்ற ஜெர்மனி அணி, மெக்சிகோ மற்றும் தென் கொரியாவிடம் தோல்வியடைந்ததால் லீக் சுற்றுடன் வெளியேறியது. 80 வருட கால் பந்து வரலாற்றில் ஜெர்மனி அணி முதல் சுற்றுடன் வெளியேற்றப்படுவது இதுவே முதன்முறையாக அமைந்தது. பயிற்சியாளர் ஜோச்சிம் லோவ் தனது பதவியை தக்க வைத்துக் கொண்டாலும் அணியை அவரால் இனிமேல் எந்த அளவுக்கு முன்னெடுத்துச் செல்ல முடியும் மற்றும் ஜெர்மனி கால்பந்து சங்கம் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை தொடருமா என்பது சந்தேகம்தான்.

மரடோனா அர்ஜென்டினா கால்பந்து அணி யின் ஜாம்பவானான டிகோ மரடோனா, மைதானத்தில் புகை பிடித்தது, மற்றும் ரசிகர்களை நோக்கி நடுவிரலை உயர்த்தி அநாகரீகமாக நடந்து கொண்டது சர்ச்சை களை ஏற்படுத்தியது.

மரண களம்: கஸான் அரினா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் தான் புகழ்பெற்ற ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா அணி கள் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறின. கூட்டாக 11 பட்டங்களை வென்ற இந்த அணிகளில் ஒன்று கூட அரை இறுதியை எட்டிப்பார்க்க முடியாமல் போனது.

ரகசிய இடம் அனைத்து அணிகளும் பொதுமக்கள் பார்வையில் ஒருமுறையாவது பயிற்சியில் ஈடுபட்டன. ஆனால் ரசிகர்கள் தங்களது அபிமான நட்சத்திர வீரர்களை பயிற்சிகளின் போது அரிதாகவே காண முடிந்தது. அதிலும் ஸ்பெயின் அணி பயிற்சியில் ஈடுபட்டதை அந்நாட்டு ரசிகர்கள் பார்க்க முடியாமலேயே போனது. காரணம் போட்டிகள் நடைபெற்ற மைதானங்களில் இருந்து வெகுதொலைவில் உள்ள கிரஸ் நோடார் பகுதியில் ஸ்பெயின் அணி பயிற்சியில் ஈடுபட்டது.

மிரட்டல்கள் லீக் சுற்றின் போது ஜப் பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிவப்பு அட்டை பெற்ற கார்லோஸ் சான்செஸூக்கு சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கொலம்பியா போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இது 1994-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ஓன் கோல் அடித்த கொலம்பியா வீரர் அன்ட்ரஸ் எஸ்கோபார், நாடு திரும்பிய சில நாட்களில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை இது கண்முன் கொண்டு வந்தது.

ஆப்பிரிக்க நாடுகள் 1982-ம் ஆண்டுக்குப் பிறகு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நாடு கூட லீக் சுற்றை கடக்காதது இதுவே முதன்முறை. நைஜீரியா, செனகல், துனீசியா, எகிப்து, மொராக்கோ ஆகிய 5 அணிகளும் கூட்டாக பெற்ற வெற்றிகள் மூன்று மட்டுமே. இதில் ஹெச் பிரிவில், ஃபேர் பிளே பாயின்டால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஜப்பான் அணியிடம் செனகல் இழந்தது அந்த அணி நாட்டு ரசிகர்களின் மனதை நொறுங்கச் செய்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முகமது சாலா காயத்தால் அவதிப்பட்டது எகிப்து அணியையும் முடக்கியது.

இரு கழுகுகள் செர்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்ததும் சுவிட்சர்லாந்து வீரர் ஹெர்டான் ஷகிரி மற்றும் கிரானிட் ஸாகா ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் செய்கைகள் செய்தவாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது அல்பேனியா நாட்டு கொடியில் உள்ள இரு கழுகுகளை குறிப்பது தெரியவந்ததையடுத்து இரு வீரர்களுக்கும் ஃபிபா அபராதம் விதித்தது.

ஹெர்டான் ஷகிரியும், கிரானிட் ஸாகாவும் கோசோவோ மாகாணத்தை மையமாக கொண்டவர்கள். இந்த பகுதி முன்பு செர்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 1998-1999ம் ஆண்டு செர்பிய படைகள் மற்றும் இனவாத அல்பேனியா கொரில்லாக்கள் இடையே நடந்த மோதல்களில் கோசோவோ நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதை மனதில் வைத்தே ஹெர்டான் ஷகிரியும், கிரானிட் ஸாகாவும் நடந்து கொண்டது தெரியவந்தது.

நெய்மரின் பல்டிகள்

பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் உலகக் கோப்பை தொடரில் இரு கோல்கள் மட்டுமே அடித்தார்.   நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது   நெய்மர், எதிரணி வீரர் காலை தட்டிவிட்டதாகக்கூறி சில அடி தூரத்துக்கு டைவ் செய்தபடி உருண்டு சென்று விழுந்தார். இது கடும் விமர்சனங்களை சந்தித்தது. மேலும் அவரது தலைமுடி அலங்காரமும், சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. ஸ்பெயின் நாளிதழ் ஒன்று, நெய்மால் மால் (மோசம்) என கேலி செய்திருந்தது.

சகாப்தம் முடிகிறதா?

31 வயதான அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, 33 வயதான போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இம்முறையும் தங்களது அணிக்காக கோப்பையை வென்று கொடுக்க முடியாமல் வெறும் கையுடன் திரும்பி உள்ளனர். அதிலும் இந்த இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது சோகம்தான். ரொனால்டோ, ஸ்பெயின் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே ஹாட்ரிக் கோல் அடித்து தொடரை சிறப்பாக தொடங்கிய போதும் அந்த உத்வேகத்தை முன்னெடுத்துச் செல்லத் தவறினார். மாறாக லயோனல் மெஸ்ஸி தனது அணியை லீக் சுற்றுடன் வெளியேறுவதில் இருந்து மட்டுமே காப்பாற்ற முடிந்தது. கோல் மழை பொழிந்த பிரான்ஸ் அணிக்கு எதிராக மெஸ்ஸியின் மந்திரம் எடுபடவில்லை. இவற்றை கருத்தில் கொண்டால் கடந்த 10 வருடங்களாக ஃபிபாவின் சிறந்த வீரர் விருதை தலா 5 முறை கைப்பற்றியுள்ள மெஸ்ஸியின் ஆதிக்கமும், ரொனால்டோவின் ஆதிக்கமும் முடிவுக்கும் வரும் கட்டத்தில் இருப்பதாகவே கருதத்தோன்றுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்