பேட்டிங்கில் சொதப்பல்: இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்தார் ஹேல்ஸ்; 2 பந்துகள் மீதமிருக்கையில் இங்கிலாந்து வெற்றி

By க.போத்திராஜ்

“பினிஷிங் நாயகன்” தோனிக்கு இன்று 37-வது பிறந்தநாள். முதலில் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவிடலாம். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. தோனி

அலெக்ஸ் ஹேல்ஸின் அற்புதமான ஆட்டத்தால், கார்டிப் நகரில் நேற்று நடந்த 2-வது 20 போட்டியில் 2 பந்துகள் மிதமிருக்கையில், இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியுடன் 1-1 என்ற சமநிலையில் இருக்கின்றன.

புவனேஷ்குமார் வீசிய கடைசி ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அந்த ஓவரில் மட்டும் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கவிடாமல் ஹேல்ஸை கட்டுப்படுத்தி இருந்தால், வெற்றி இந்திய அணியின் பக்கம்தான். ஐபிஎல் போட்டிகள் உள்நாட்டு வீரர்களை மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களையும் செம்மைபடுத்தி இருக்கிறது என்பது இக்கட்டான நேரத்தில் நமக்கு கிடைத்த தோல்வியின் மூலம் அறியலாம்.

ஹேல்ஸ் நடுவரிசையில் இறங்கி கடைசி வரை நிலைத்து பேட் செய்து 41 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக்காரணமாக அமைந்தார். இதில் 3 சிக்ஸர்,4 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டநாயகன் விருதும் இவருக்கே தரப்பட்டது.

இந்திய அணி ஸ்கோர் செய்த 148 ரன்கள் என்பது டி20 போட்டியில் தோல்வியில் இருந்து தற்காத்துக்கொள்ளும் அளவுக்கு சிறப்பான ஸ்கோர் இல்லை. இன்னும் கூடுதலாக 20 ரன்கள் அடித்திருந்தால் மட்டுமே தோல்வியில் இருந்து தப்பித்தும், ஆட்டத்தை இன்னும் நெருக்கடியாக கொண்டு சென்றிருக்க முடியும்.

முதல் போட்டியில் குல்தீப் யாதவ் பந்துவீச்சைப் பற்றி புரிந்துகொள்ள முடியாமல், விக்கெட்டை  பறிகொடுத்த இங்கிலாந்து வீரர்கள் இந்தப் போட்டியில் நன்கு கணித்து விளையாடினார்கள். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நல்ல “ஹோம் வொர்க்” செய்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், 2005-ம் ஆண்டுக்கு பின் “மெர்லின்” இயந்திரத்தின் உதவியால் சுழற்பந்துவீசச் செய்து பேட்ஸ்மேன்கள் பயிற்சி எடுத்து கைகொடுத்து இருக்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை “பவர் ப்ளே” ஓவர்கள் வரை விக்கெட்டுகளை இழக்காமல் பேட் செய்தால்தான் பின்வரிசையில் களமிறங்கும் வீரர்களுக்கு நெருக்கடி இல்லாமல் இருக்கும். ஆனால், தொடக்கத்திலேயே தவண், ரோகித்சர்மா, ராகுல் விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தது அடுத்து வந்த கோலி, ரெய்னா கூட்டணிக்கு அழுத்தத்தைதக் கொடுத்தது.

அயர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராக வீராதி வீரர்கள் போல் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் ரோகி்த் சர்மாவும், தவணும் அடித்தது பெருமை இல்லை. ஆனால், கடந்த 2 போட்டிகளிலும் இவர்களின் பங்களிப்பு கேள்வியை எழுப்பி இருக்கிறது.

இலங்கைக்கு எதிரான நிடாஹஸ் கோப்பையில் இருந்து ரோகிக் சர்மா பேட்டிங்கில் சொதப்பி வருகிறார், ஐபிஎல் போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும் விதமாக ஸ்கோர் செய்யவில்லை, அயர்லாந்து அணிக்கு எதிராக மட்டுமே ஒரு போட்டியில் அடித்தார். ஆனால், அவரின் நிலையற்ற பேட்டிங்கை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறது அணி நிர்வாகம்.

ஆனால், இலங்கையில் சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தவரும், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை அணியில் சும்மாவே பெஞ்சில் அமரவைப்பது அவரின் மனஇருக்கத்தை மேலும் அதிகப்படுத்தும். சிறிதுகூட யோசிக்காமல் ரோகித் சர்மா, ரெய்னா, தவண் இதில் யாராவது ஒருவரை அமரவைத்துவிட்டு தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு அளித்துப் பார்க்கலாம்.

அதிலும் இந்த போட்டியில் ஷிகர் தவண் ரன் அவுட் ஆனது கொடுமையிலும் பெருங்கொடுமை. பேட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு பதிலாக பின்னோக்கி சென்று அதில் கால்காப்பில் சிக்கி இறுதியில் ரன் அவுட் ஆகினார். தொடக்க வீரர்களாக களமிறங்கும் வீரர்கள் நெருக்கடியை சமாளித்து, நிலைத்தன்மை கிடைக்கும் வரை பொறுமையாக பேட் செய்வது அவசியம்.

ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்திருப்பார், ஆனால், வாய்ப்பு தவறியது, ஆனால், கடைசி பந்தில் விக்கெட்டை வாரிக்கொடுத்துவிட்டு நடையைக் கட்டிவிட்டார். “லெக்கட்டரில்” செல்லும் அதுபோன்ற பந்தை ரோகிக் சர்மா தொடாமல் இருந்திருக்கலாம்.

ராகுல் முதல்போட்டியில் மிகச்சிறப்பாக பேட் செய்தார், அதே எதிர்பார்ப்பு இந்த போட்டியிலும் அனைத்து தரப்பிலும் இருந்தது. ஆனால், அடித்து ஆட முற்பட்டு போல்டாகிவிட்டார். அவசரமில்லாமல் பேட் செய்திருக்கலாம்.

ரெய்னாவின் “வீக்பாயின்ட்” அனைத்து அணிகளும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. லெக்சைடில் “பவுன்ஸர்” பந்தை அவரால் கணித்து ஆடத் தெரியாது என்பதை தெரிந்து கொண்டு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சரியாகப் பந்துவீசினார்கள்.

ஆனால், பெரும்பாலான பந்துகளையும் ரெய்னா குதித்து, குதித்து விளையாடினால், ரன்களை எப்படி சேர்க்க முடியும். பேட்டுக்கு வரும் பந்துகளைக் கூட ரெய்னா குதித்து ஆடினார் என்பதுதான் வெட்கக்கேடு. ஒருவேளை ரெய்னா பேட்டிங் செய்ய லகுவாக பந்துவீசனால்தான் அடிப்பாரா என்னமோ தெரியவில்லை.

 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்கு ரெய்னா தேவையா இல்லையா என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு அணி நிர்வாகத்தை அவரே தள்ளுகிறார்.

விராட் கோலியும், ரெய்னாவும் பேட் செய்தபோது, ஏறக்குறைய 4 ஓவர்களுக்கு மேல் பவுண்டரியும், சிக்ஸர்களும் அடிக்கப்படவில்லை. இது  இந்திய அணியின் ரன்குவிப்பு குறைய முக்கியக்காரணமாக அமைந்தது. விராட் கோலி இன்னும் சிறப்பாக பேட் செய்திருக்கலாம்.

தோனிக்கு நேற்றைய போட்டி சர்வதேச அரங்கில் அவரின் 500-வது போட்டியாகும். ஏதேனும் மறக்கமுடியாத இன்ப நினைவுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், கசப்பான தோல்விதான் கிடைத்துள்ளது. கடைசி நேரத்தில் தோனியும் நிலைத்து ஆடாமல் இருந்திருந்தால், அணியின் ஸ்கோர் இன்னும் குறைந்திருக்கும்.

“நீலநிற” உடையில் பேட் செய்வதைக் காட்டிலும், “மஞ்சள்நிற” உடையில் பேட் செய்யும்போதுதான் தோனியின் பேட்டிங்கில் ஆக்ரோஷமும், ஷாட்களில் அனல் தெறிக்கும் வேகமும் இருக்கிறது. ஒருவேளை இந்திய அணி ஆடையின் வண்ணத்தை “மஞ்சள்நிறமாக” மாற்றினால், இன்னும் சிறப்பாக விளையாடுவாரோ.

ஒட்டுமொத்தத்தில் 3-வது டி20 போட்டியை விறுவிறுப்பாக கொண்டு சென்று, டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றமுடிவு செய்துவிட்டார்கள்.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை தொடக்க வீரர்கள் ராய், பட்லர், ரூட் ஆகியோர் விக்கெட்டுகளை விரைவாக இழந்தபோதிலும் அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தியவர் ஹேல்ஸ். வெற்றிக்கு உரித்தானவரும் ஹேல்ஸ் மட்டுமே. மோர்கனுடனும், பேர்ஸ்டோவுடனும் ஹேல்ஸ் அமைத்த கூட்டணி வெற்றியை இன்னும் அந்த அணிக்கு எளிதாக்கியது.

டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. 149 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2 பந்துகள் மீதிமிருக்கும் நிலையில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் முதல் 3 முக்கிய வீரர்களான தவண்(10), ரோகி்த் சர்மா(5), ராகுல்(6) ஆகியோர் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழந்தது இந்திய அணியின் ஸ்கோர் குறைவுக்கும், நெருக்கடிக்கும் முக்கியக்காரணம். கடந்த 2 ஆண்டுகளுக்குப்பின், பவர்ப்ளேயில் இந்திய அணி 31 ரன்கள் சேர்த்துள்ளது என்றால் என்னமாதிரி மோசமாக ஆட்டமாக அமைந்திருக்கும்

இதற்குமுன் கடந்த 2016-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணியுடன் ஹராரேயில் நடந்த போட்டியில் பவர்ப்ளேயில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி, ரெய்ன ஜோடி ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்து 57 ரன்கள் சேர்த்தனர். ஆனால், நீண்டநேரமாக பவுண்டரி, சிக்ஸர் அடிக்காமல் விளையாடியது ஸ்கோர் குறைய முக்கியக்காரணம்.

27 ரன்கள் சேர்த்த ரெய்னா நீண்டகாலத்துக்கு பின் டி20 போட்டியில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். நல்ல ஃபார்மில் இருக்கும் கோலி இன்னும் சிறிது நிலைத்து ஆடி இருந்தால், அரைசதம் அடித்திருக்கலாம். ஆனால், 2 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்களில் கோலி  ஆட்டமிழந்தார்.

தோனி தனக்கே உரிய “ஹெலிகாப்டர்” ஷாட்களையும், “புல்” ஷாட்களையும் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். ஆனால், 24 பந்துகளில் 32 ரன்கள் என்பது நெருக்கடியான நேரத்தை எளிதாக சமாளிக்கும் திறமையுடைய தோனிக்கு போதுமான ரன்களாக இல்லை. கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடியதை முன்கூட்டியே அடித்திருக்கலாம்.

இன்னும் சிறிது அதிரடிக்கு முயன்றிருந்தால், அணியின் ஸ்கோர் உயர்ந்திருக்கும். 5 பவுண்டரிளுடன் தோனி 32 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து அணித் தரப்பில் டேவிட் வில்லி, பிளங்கெட் சிறப்பாகப் பந்துவீசினார்கள். வில்லி, பிளங்கெட், ஜேட்பால், ரஷித் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

149 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஜேஸன் ராய், பட்லர் களமிறங்கினார்கள். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே ராய் 14 ரன்கள் சேர்த்து பொளந்துகட்டிவிட்டார். ஆனால், அதற்கு பதிலடியாக தனது அடுத்த ஸ்பெல்லில் ராய்(15ரன்கள்) விக்கெட்டை கழற்றிவிட்டார் உமேஷ் யாதவ்.

ஆனால், ஆபத்தான பட்லருடன், ரூட்இணைந்தார். பட்லர் அவ்வப்போது பவுண்டரிகள்  அடித்து மிரட்டினார். உமேஷ் யாதவ் வீசிய 5-வது ஓவரில் பட்லருக்கு விராட் கோலி ஒரு கேட்சை நழுவவிட்டார். சிறிது முன்கூட்டியே குதித்திருந்தால் கைகளில் பந்துசிக்கி இருக்கும். அதேஓவரில் அடுத்த கேட்சை சரியாகப் பிடித்து பட்லரை(14) வெளியேற்றினார் கோலி.

பவர்ப்ளேயில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்தது. சாஹல் வீசிய 7-வது ஓவரில் ரூட்(7) எளிதாக விக்கெட்டை பறிகொடுத்தார்.

4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹேல்ஸ், கேப்டன் மோர்கன் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்தனர். குல்தீப் யாதவ் சுழற்பந்துவீச்சை சரியாகக் கணித்து ஆடி, சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விரட்டினர்.

ஹர்திக் பாண்டியா வீசிய 14-வது ஓவரில் தவண் அருமையான கேட்ச் பிடித்து மோர்கனை 17 ரன்களில் பெவிலியன் அனுப்பினார்கள். இந்த கேட்சைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில்தான் 100 ரன்கள் எட்டியது. ஆனால், அடுத்த 4ஓவர்களில் வெற்றிக்கு தேவையான 49 ரன்களை எட்டியது. அதாவது கடைசி 4 ஓவர்களில் இந்திய வீரர்கள் கவனக்குறைவாக பந்துவீசியதால், வெற்றி கைநழுவிப்போனது.

குல்தீப் வீசிய 17-வது ஓவரில் பேர்ஸ்டோ தொடர்ந்து அடித்த  சிக்ஸர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஆனால், நிலைத்து ஆடாத பேர்ஸ்டோ 24 ரன்களில் புவனேஷ்குமாரிடம் விக்கெட்டை இழந்தார்.

கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் 8 ரன்களைக் விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்குமாரின் முதல் இரு பந்துகளிலும் ஹேல்ஸ் சிக்ஸர், பவுண்டரி அடித்து இந்திய அணியின் கைகளில் இருந்த வெற்றியை அவர் பறித்துக்கொண்டார்.  2 பந்துகள் மீதமிருக்கும் நிலையில்  இங்கிலாந்து அணி 149 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணித் தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்