இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்கமில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலியினால் முதலில் பேட் செய்ய தைரியமாக அழைக்கப்பட்ட இங்கிலாந்து மீண்டும் குல்தீப் சுழலில் சிக்கித் திணறி ஒருவழியாக 268 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஸ்டோக்ஸ், பட்லர், டி.ஜே.வில்லே ஆகிய முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி 10 ஓவர்களில் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 38 டாட் பால்கள், சாஹல் 10 ஓவர்களில் 51 ரன்கள் முக்கிய விக்கெட்டான மோர்கனைக் காலி செய்தார். வேகப்பந்து வீச்சுக் கவலை தொடர்கிறது, உமேஷ் யாதவ் 70 ரன்களையும் சித்தார்த் கவுல் 62 ரன்களையும் பாண்டியா 7 ஓவர்களில் 47 ரன்களையும் கொடுத்து 179 ரன்களை 26.5 ஓவர்களில் விட்டுக் கொடுத்தனர்.
ஹர்திக் பாண்டியாவை மோர்கன் ஒரு சிக்ஸ் பவுண்டரி என்று கவனிக்க பட்லர், ஸ்டோக்ஸும் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் இவரை ஆட கோலி ஒரு முனையில் பாண்டியாவின் கோட்டாவை முடிக்க ரெய்னாவை 3 ஓவர்கள் வீசச் செய்தார். அவரும் 3 ஓவர் 1 மெய்டனுடன் 8 ரன்களைத்தான் விட்டு கொடுத்து சிக்கனம் காட்டினார்.
குல்தீப் யாதவ்வின் கை சாதுரியங்களை விட அவர் வீசும் வேகம் இங்கிலாந்துக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது என்றே கூற வேண்டும், தென் ஆப்பிரிக்காவில் வீசியது போலவே பந்துகள் மணிக்கு 60-70 கிமீ வேகம்தான், இது இங்கிலாந்து வீரர்களின் பேட் ஸ்பீடுக்குப் பொருத்தமாக இல்லை. கொஞ்சம் காத்திருந்து ஆட வேண்டும். அதற்காக பேர்ஸ்டோ, ஜோ ரூட் போல் பின் காலில் சென்று பந்தை அவர் ஸ்கிட் செய்ய அனுமதிக்கக் கூடாது.
73/0 என்று 11வது ஓவரில் இருந்த இங்கிலாந்து குல்தீப்பின் முதல் ஸ்பெல் சுழலில் சிக்கி 105/4 என்று ஆனது. பட்லர், பென் ஸ்டோக்ஸ் இணைந்து ஸ்கோரை 198 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், பட்லர் 51 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார். மாறாக பென் ஸ்டோக்ஸ் கட்டிப்போடப்பட்டார், 103 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் அவர் 53 எடுத்தார். இருவரும் ஒருவேளை நின்றிருந்தால் ஸ்கோரை 300 பக்கம் கொண்டு சென்றிருக்கலாம், ஆனால் பட்லர் லெக் திசையில் தோனியிடம் கேட்ச் கொடுத்து குல்தீப்பிடம் வெளியேற, பென் ஸ்டோக்ஸ் தன் பொறுமையை இழந்து தவறாக ரிவர்ஸ் ஸ்வீப் ஆட பேக்வர்ட் பாயிண்டில் சித்தார்த் கவுல் இடது புறம் டைவ் அடித்து பிரமாதமான கேட்சை எடுத்தார், குல்தீப் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். குல்தீப் எடுத்த 6வது விக்கெட் டி.ஜே.வில்லே. இந்த விக்கெட்டுதான் ஒரு சாதாரண பந்தில் எடுக்கப்பட்டது, மற்றபடி குல்தீப் யாதவ்வை இங்கிலாந்து புரிந்து கொள்வார்களா என்ற சந்தேகமே எஞ்சுகிறது.
கடைசியில் மொயின் அலி உமேஷ் யாதவ்வை ஒரு அருமையான புல்ஷாட் சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று விளாசி 24 ரன்களையும் அடில் ரஷீத் 16 பந்துகளில் 22 ரன்களையும் எடுக்க இங்கிலாந்து ஒருவழியாக 268 ரன்கள் எடுத்தது. ஆனால் மொயின் அலி, அடில் ரஷீத் இருவருமே உமேஷிடம் காலியாயினர். கடைசியில் பிளங்கெட் 10 ரன்களில் ரெய்னா, தோனி கூட்டணியில் ரன் அவுட் ஆனார்.
முன்னதாக...
மீண்டும் இங்கிலாந்தைத் திணறடிக்கும் குல்தீப்; தவறைச் சரி செய்த கோலி; ரிவியூவில் பேர்ஸ்டோ அவுட்
நாட்டிங்கமில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் ஜேசன் ராய், பேர்ஸ்டோ நல்ல தொடக்கத்துக்குப் பிறகு குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இங்கிலாந்து 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
முதலில் ஜேசன் ராய், பேர்ஸ்டோ இணைந்து 10.2 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 73 ரன்களை விளாச, 11வது ஓவரில் ஸ்ட்ரைக் பவுலர் குல்தீப் யாதவ் கொண்டு வரப்பட்டார். 35 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அபாயகரமாகத் திகழ்ந்த ஜேசன் ராய் முன் கூட்டியே திட்டமிட்ட ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை நேராகக் கவரில் அடித்தார். அதற்கு முன்னதாக ஸ்லிப் நகர்த்தப்பட்டு லெக் ஸ்லிப் வைக்கப்பட்டது, இதனால் ரிவர்ஸ் ஷாட் முயன்றார் ஜேசன் ராய் கேட்ச் ஆனது.
அடுத்ததாக ஜோ ரூட் 6 பந்துகளில் 3 ரன்களே எடுத்த நிலையில் குல்தீப்பின் உள்ளே வரும் பந்தை புரிந்து கொள்ளவில்லை, கால்காப்பைத் தாக்க பிளம்ப் எல்.பி. வெளியேறினார்.
ஜானி பேர்ஸ்டோ முதல் ஓவரில் ரிவியூ செய்யப்படாமல் தப்பித்தார், ஆனால் ஜோ ரூட் அவுட் ஆன அதே ஓவரின் 5வது பந்தில் ஜானி பேர்ஸ்டோ கூக்ளியை கணிக்கத் தவறி கால்காப்பில் வாங்கினார், நடுவர் நாட் அவுட் என்றனர் ஆனால் இம்முறை கோலி தவறு செய்யவில்லை, ரிவியூ கேட்டார் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் பேர்ஸ்டோ நடையைக் கட்டினார்.
தற்போது இயன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகிய புதிய பேட்ஸ்மென்கள் களம் கண்டுள்ளனர், குல்தீப் யாதவ் 3 ஓவர்கள் 8 ரன்கள் 3 விக்கெட்டுகள் இதுவரை.
முன்னதாக...
டாஸ் வென்று இந்தியா பீல்டிங்: முதல் ஓவரிலேயே ‘ட்ராமா’ தொடக்கம்: தவறு செய்தார் கோலி
ட்ரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார், அணியில் புவனேஷ்வர் குமார் இல்லை. சித்தார்த் கவுல் வந்துள்ளார்.
இந்திய அணி: ரோஹித், தவண், ராகுல், கோலி, ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், சாஹல்.
இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன், ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, டேவிட் வில்லே, லியாம் பிளெங்கெட், ரஷீத், மார்க் உட்.
முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீச ஆஃப் ஸ்டம்பில் வீசிய முதல் பந்தே ஜேசன் ராய்க்கு எட்ஜ் எடுக்க ஒரே ஸ்லிப்பை வைத்து வீசியதால் ரெய்னா வலது புறம் டைவ் அடித்தும் பயனில்லை பந்து பவுண்டரிக்குப் பறந்தது. ரெய்னா டைவ் கொஞ்சம் தாமதம். என்ன செய்வது அவர் யோ-யோ பாஸ் செய்வதராயிற்றே? இந்த வயதில் இந்த கேட்சைப் பிடிப்பது கடினம்தான், யோ-யோவில் தேறினால் கேட்ச் எடுப்பார்கள் என்று யார் கூறியது?
பேர்ஸ்டோவுக்கு மட்டையின் வெளிப்புற விளிம்பை நூலிழையில் தவற விட்டுச் சென்றது உமேஷின் அற்புத பந்து ஒன்று.
ஆனால் கடைசி பந்தில் ஜானி பேர்ஸ்டோ பின்கால்காப்பில் வாங்கினார், விக்கெட் முன்னால் கால் என்று கடும் முறையீடு செய்தனர் இந்திய அணியினர் நடுவர் நாட் அவுட் என்றார், ரீப்ளேயில் மட்டை உள்விளிம்பில் படவில்லை என்று காட்டியது. விராட் கோலி ரிவியூ செய்திருக்க வேண்டும், செய்திருந்தால் அது பிளம்ப் எல்.பி. அவுட் கொடுத்திருப்பார்கள், ஆனால் அவர் அதற்கு எதிராக முடிவெடுத்து விட்டார். இதனால் அபாயகரமான ஜானி பேர்ஸ்டோ தப்பினார்.
அதன் பிறகு 3 அரக்க பவுண்டரிகளைத்தான் அடித்துள்ளார் பேர்ஸ்டோ, கோலியின் தவறு எதில் போய் முடியும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago