காமன்வெல்த் பதக்க வீரர்களுக்கு ரூ.2.70 கோடி: முதல்வர் வழங்கினார்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 7 பேருக்கு ரூ.2.70 கோடி ஊக்கத் தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கி பாராட்டினார்.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.

அதன்படி, ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடந்த 20–வது காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு ஊக்கத்தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதோடு, புதிய சாதனை புரிந்த எஸ்.சதீஷ்குமார், ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பலிக்கல் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம், டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷரத் கமல், அந்தோணி அமல்ராஜ், ஆடவர் ஹாக்கிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ரூபிந்தர்பால் சிங், ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகிய 4 வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.2.70 கோடிக்கான காசோலைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

அப்போது, ‘‘உங்களுக்கு எனது வாழ்த்துகள். உங்கள் வெற்றியைக் கண்டு நாங்கள் பெருமைப்படுகிறோம். எதிர்காலத்தில் இன்னும் நிறைய வெற்றியை நீங்கள் அடையவேண்டும் என வாழ்த்துகிறேன்’’ என முதல்வர் பாராட்டினார். தங்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்கி பாராட்டிய முதல்வருக்கு வீரர்கள் நன்றி தெரிவித்தனர் என அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE