தோனி தலைமையில் எழுச்சி பெறுமா சிஎஸ்கே? - சேப்பாக்கத்தில் கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை

By பெ.மாரிமுத்து

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கே, நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யுடன் மோதுகிறது. காயம் காரண​மாக ருது​ராஜ் கெய்க்​வாட் இந்த சீசனில் இருந்து முழு​மை​யாக விலகி உள்​ள​தால் எம்​.எஸ்​.தோனி தலை​மை​யில் களமிறங்​கு​கிறது சிஎஸ்கே அணி.

ஐபிஎல் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி ஒரு வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 2 புள்​ளி​கள் பெற்று புள்​ளி​கள் பட்​டியலில் கடைசி இடத்​தில் உள்​ளது. தொடக்க ஆட்​டத்​தில் மும்பை அணியை வீழ்த்​திய நிலை​யில் அதன் பின்​னர் பெங்​களூரு, ராஜஸ்​தான், டெல்​லி, பஞ்சாப் அணி​களிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்​தது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த 4 ஆட்​டங்​களி​லும் இலக்கை துரத்தியிருந்தது.

இதில் பஞ்​சாப் அணிக்கு எதி​ரான ஆட்​டத்தை தவிர்த்து மற்ற 3 ஆட்​டங்​களி​லும் 180 ரன்​களுக்கு மேலான இலக்கை துரத்த சிஎஸ்கே அணி சிரமப்பட்​டது. ஆனால் பஞ்​சாப் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 220 ரன்​கள் இலக்கை போராட்ட குணத்​துடன் சிஸ்கே எதிர்​கொண்டு 18 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வியை சந்​தித்​திருந்​தது. டாப் ஆர்​டரில் டேவன் கான்​வே, ரச்​சின் ரவீந்​தி​ரா​வும், நடு​வரிசை​யில் ஷிவம் துபே​வும் பார்​முக்கு திரும்பி இருப்​பது பலம் சேர்க்​கக்​கூடும். தோனி​யும் தாக்​குதல் ஆட்​டம் (12 பந்​துகளில், 3 சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 27 ரன்​கள்) மேற்​கொண்​டுள்​ளது அணி​யின் நம்​பிக்​கையை அதி​கரிக்​கச் செய்​துள்​ளது.

இதற்​கிடையே கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் காயம் காரண​மாக இந்த சீசனில் இருந்து முழு​மை​யாக விலகி உள்​ளார். இதுதொடர்​பாக சிஎஸ்கே அணி​யின் பயிற்​சி​யாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்​போது, “கு​வாஹாட்​டி​யில் ராஜஸ்​தான் அணிக்கு எதி​ராக விளை​யாடிய போது ருது​ராஜ் கெய்க்​வாட்​டுக்கு முழங்​கை​யில் காயம் ஏற்​பட்​டது. அதன் பின்​னர் அதிக வலி​யுடனேயே அவர், அடுத்​தடுத்த ஆட்​டங்​களில் விளை​யாடி​னார். எக்​ஸ்ரே பரிசோதனை​யில் ருது​ராஜின் காயம் குறித்து ஏதும் தெரிய​வில்​லை.

ஆனால் எம்​ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை​யில் அவரது முழங்​கை​யில் முறிவு ஏற்​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது. இதனால் அவர், தொடரில் இருந்து விலகி உள்​ளார். இதனால் நாங்​கள் ஏமாற்​றமடைந்​துள்​ளோம், அவருக்​காக வருந்​துகிறோம். விளை​யாட முயற்​சிப்​ப​தில் அவர் மேற்​கொண்ட முயற்​சிகளை நாங்​கள் பாராட்​டு​கிறோம். ஆனால் துர​திர்​ஷ்ட​வச​மாக அவர், தொடரில் இருந்து வெளி​யேறுகிறார். இதனால் தொடரின் எஞ்​சிய போட்​டிகளுக்கு கேப்​ட​னாக எம்​.எஸ்​.தோனி செயல்​படு​வார்” என்​றார்.

ருது​ராஜ் கெய்க்​வாட் காயம் காரண​மாக வில​கி​யுள்​ளது சிஎஸ்கே அணிக்கு பின்​னடைவை ஏற்​படுத்​தக்​கூடும். எனினும் தோனி​யின் தலை​மை​யில் சிஎஸ்கே அணி புத்​துணர்ச்சி பெறக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கடந்த ஆட்​டத்​தில் பேட்​டிங் உத்​வேகம் பெற்ற நிலை​யில் பந்து வீச்​சு, பீல்​டிங்​கிலும் சிஎஸ்கே அணி கூடு​தல் கவனம் செலுத்​தி​னால் வெற்றி பெறு​வதற்கான சாத்​தி​யக்​கூறுகள் உரு​வாகக்​கூடும். பஞ்​சாப் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் பிரியன்ஷ் ஆர்​யா, ஷஷாங்க் சிங் ஆகியோரது கேட்ச்​களை தவற​விட்​டதற்​கான பலனை சிஎஸ்கே அணி அனுப​வித்​திருந்​தது.

இதனால் பீல்​டிங்​கில் அந்த அணி கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். வேகப்​பந்து வீச்​சில் கலீல் அகமது​வுக்கு உறு​துணை​யாக முகேஷ் சவுத்​ரி, மதீஷா பதிரனா ஆகியோர் உயர்​மட்ட செயல்திறனை வெளிப்​படுத்​தி​னால் அணி​யின் பலம் அதி​கரிக்கக்​கூடும். சுழற்​பந்து வீச்​சில் ரவீந்​திர ஜடேஜா, ரவிச்​சந்​திரன் அஸ்​வின் ஆகியோர் முழு​மை​யாக 4 ஓவர்​களை நிறைவு செய்​யாததும் பலவீன​மாக பார்க்​கப்​படு​கிறது. நூர் அகமது​வுக்கு இவர்​கள் உறு​துணை​யாக செயல்​பட்​டால் அணி வெற்​றிப்​பாதைக்கு திரும்​புவதற்கு வாய்ப்​பு​கள் உரு​வாகக்​கூடும். பேட்​டிங் வரிசை​யில் ருது​ராஜ் இடத்​தில் தீபக் ஹூடா, ராகுல் திரி​பா​தி, சேம் கரண் ஆகியோரில் யாரேனும் ஒரு​வர் களமிறக்​கப்​படக்​கூடும்.

கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனின் இறு​திப் போட்​டியில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தது. நடப்பு சீசனில் கொல்​கத்தா அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது. கடைசி​யாக லக்னோ அணிக்கு எதிரான ஆட்​டத்​தில் 239 ரன்​கள் இலக்கை துரத்​தி 4 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டிருந்​தது.

பேட்​டிங்​கில் கேப்​டன் அஜிங்க்ய ரஹானே, துணை கேப்​டன் வெங்​கடேஷ் ஐயர், சுனில் நரேன், ரிங்கு சிங், ரகு​வன்ஷி ஆகியோர் நல்ல பார்​மில் உள்​ளனர். பந்து வீச்​சில் ரிஸ்ட் ஸ்பின்​னர்​களான சுனில் நரேன், வருண்சக்கரவர்த்தி ஆகியோர் சிஎஸ்கே பேட்​ஸ்​மேன்​களுக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். வேகப்​பந்து வீச்​சில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ரானா நம்​பிக்கை அளிக்​கக்​கூடும். இன்​றைய ஆட்​டத்​தில் மொயின் அலிக்கு வாய்ப்பு கிடைக்​கக்​கூடும்.

அஜிங்க்ய ரஹானே, மொயின் அலி ஆகியோர் ஏற்​கெனவே சிஎஸ்கே அணிக்​காக கடந்த சீசன்​களில் விளை​யாடி உள்​ளனர். இதனால் இவர்​களது அனுபவம் இன்​றைய ஆட்​டத்​தில் உதவக்​கூடும். மேலும் அணி​யின் ஆலோ​சகரான டுவைன் பிராவோ, சிஎஸ்கே அணி​யில் நீண்ட காலம் இருந்​துள்​ளார். ஓய்வு பெற்ற பின்​னர் உதவி பயிற்​சி​யாள​ராக​வும்​ பணி​யாற்​றி உள்​ளார்​. இதனால்​ அவருடைய உள்​ளீடு​களும்​ கொல்​கத்​தா அணிக்​கு பயனளிக்​கக்​கூடும்​.

தோனியும்.. கேப்டன்ஷிப்பும்… - 43 வயதான தோனி 2008 முதல் 2024 வரை சிஎஸ்கே கேப்டனாக இருந்தார். கடந்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பொறுப்பு முழுமையாக ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னதாக 2022-ம் ஆண்டில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான தோல்விகளால் தொடரின் பாதியிலேயே ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனால் மீண்டும் தோனி கேப்டனாக வழிநடத்தினார். தற்போது ருதுராஜ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளதால் சிஎஸ்கேவுக்கு தலைமையேற்று வழிநடத்த உள்ளார் தோனி. அவரது தலைமையில் சிஎஸ்கே 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

ருதுராஜ் எப்போது காயமடைந்தார்? - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் தொடரில் 5 ஆட்டங்களில் முறையே 53, 0, 63, 5, 1 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் 63 ரன்கள் அவர், காயம் அடைந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேர்க்கப்பட்டதாகும். இந்த ஆட்டத்தில் துஷார் தேஷ்பாண்டே பந்தில் ருதுராஜ் காயம் அடைந்திருந்தார். அதன் பின்னர் அவர், விளையாடிய அடுத்த இரு ஆட்டங்களிலும் குறைந்த ரன்களில் நடையை கட்டியிருந்தார். முழங்கை காயத்தால் தற்போது தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்