ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி இந்த சீசனை சிறந்த முறையில் தொடங்கியது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 175 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணி 22 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது.
அந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் கிருணல் பாண்டியா சரியான நேரத்தில் 3 விக்கெட்களை வீழ்த்தி திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா ஆகியோரும் அவருக்கு உதவியிருந்தனர். அதேவேளையில் மட்டை வீச்சில் பில் சால்ட், விராட் கோலி, ரஜத் பட்டிதார் ஆகியோர் அதிரடியாக விளையாடி வெற்றியை விரைவாக எட்ட உதவியிருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
எனினும் சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கேவின் கோட்டையாக இருந்து வருகிறது. இங்கு அந்த அணிக்கு எதிராக ஆர்சிபி 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஆர்சிபி 8 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, இந்த போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி 17 வருட சோகத்துக்கு ஆர்சிபி அணி முடிவுகட்ட வேண்டும் என்று ஆர்சிபி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கு காரணம் சுழற்பந்து வீச்சை அந்த அணி சமாளிக்க முடியாமல் திணறியதுதான். 2008-ம் ஆண்டில் ஆர்சிபி அணியில் விளையாடிய வீரர்களில் தற்போது விராட் கோலி மட்டுமே உள்ளார். ஆனால் இம்முறை அந்த அணி வெற்றி பெறுவதற்கு கூடுதல் முயற்சி செய்யக்கூடும். எனினும் அது ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் சிஎஸ்கேவின் சுழற்பந்து வீச்சை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை பொறுத்தே அமையக்கூடும்.
அனுபவம் வாய்ந்த ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் ஆப்கானிஸ்தானின் ரிஸ்ட் ஸ்பின்னரான நூர் அகமதுவும் தற்போது இணைந்துள்ளார். இந்த மூவர் கூட்டணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தது. இவர்கள் கூட்டாக 11 ஓவர்களை வீசி 70 ரன்களை வழங்கியிருந்தனர். இதில் நூர் அகமது 4 ஓவர்களை முழுமையாக வீசி 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்த நிலையில் 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார்.
ஆடுகள அமைப்புக்கு தகுந்தபடி அவரது பந்து வீச்சு கைகொடுக்கிறது. இன்றைய போட்டிக்கான ஆடுகளமும் சுழலுக்கு கைகொடுக்கும் வகையிலேயே இருக்கக்கூடும். இதனால் சிஎஸ்கேவின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால் விராட் கோலியை உள்ளடக்கிய ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசை தங்களது ஆட்டத்திறனை பலமடங்கு உயர்த்த வேண்டும்.
சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விராட் கோலி பெரிய அளவில் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டது இல்லை. ஆனால் கடந்த இரு வருடங்களாக அவர், பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் ஷாட்களை விராட் கோலி கையாள தொடங்கியுள்ளார். இதை சேப்பாக்கத்தில் வெற்றிகரமாக செயல்படுத்துவதில் அவர், முனைப்பு காட்டக்கூடும்.
சிஎஸ்கேவின் சுழற்பந்து தாக்குதலை விராட் கோலியால் மட்டுமே சமாளிக்க முடியாது. பில் சால்ட், ரஜத் பட்டிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா உள்ளிட்டோரும் கைகொடுக்க வேண்டும். சேப்பாக்கம் ஆடுகளத்தை கொண்டு ஆர்சிபி அணி கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்குவதில் ஆர்வம் காட்டக்கூடும். இந்த வகையில் டிம் டேவிட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல் அல்லது லெக் ஸ்பின்னர் மோஹித் ராதி களமிறக்கப்படக்கூடும். வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் உடற்குதியை எட்டியுள்ளதால் களமிறங்க வாய்ப்பு உள்ளது. அவர், களமிறங்கும் பட்சத்தில் ரஷிக் சலாம் நீக்கப்படக்கூடும்.
சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா அரை சதம் விளாசி அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருந்தனர். அதேவேளையில் டாப் ஆர்டரில் ராகுல் திரிபாதி, நடுவரிசையில் ஷிவம் துபே, தீபக் ஹூடா, சேம் கரண் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இவர்கள் பொறுப்புடன் விளையா டும் பட்சத்தில் அணியின் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும்.
கடந்த ஆட்டத்தில் தோனியின் மட்டை வீச்சை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அவருக்கு 2 பந்துகளை எதிர்கொள்ள மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அவர், ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இம்முறை தோனியிடம் இருந்து சிக்ஸர்கள் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. வேகப்பந்து வீச்சாளர் பதிரனா காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. இதனால் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம்தான்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago