ஐபிஎல் 2025 தொடர் தொடங்கி 3 போட்டிகள் முடிந்த நிலையில், பொதுவாக எழும் ஒரு சிந்தனைப் பதிவு என்னவெனில், உண்மையில் நடப்பது கிரிக்கெட்டா அல்லது ஐபிஎல் வணிக முத்திரை என்னும் பிராண்டை இன்னும் பிரபலமடையச் செய்து உலகளாவிய ஒரு பிராண்டாக மாற்றுவதா என்ற சந்தேகமே எழுகிறது.
கவி-விமர்சகர் எஸ்ரா பவுண்டு ஒரு கவிதையில் உன்னதங்களின் வீழ்ச்சியை அங்கலாய்க்கும்போது, ‘But a tawdry cheapness Shall outlast our days’ - அற்பத்தனங்களும் மலிவான ரசனையும் பண்பாடும் நம் நன்மதிப்பான நாட்களை அழித்தே விடும் என்கிறார். ஐபிஎல் என்பது இன்றைய மாஸ் மீடியா, அதன் நிகழ்ச்சிகள், அதன் வணிக நோக்கங்கள், அரசியல் கச்சடாத்தனம், சராசரிக்கும் கீழான பொதுப்புத்தியை ஊட்டி உயரியவற்றையும், உயர்ந்த ரசனைகளையும் காலி செய்யும் பல கலாச்சார சீரழிவுப் பொருட்களில் ஒன்றே என்று நம்மை எண்ண வைக்கிறது. பிக்பாஸ் போன்றதுதான் ஐபிஎல் கிரிக்கெட்டும் என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது.
ஐபிஎ 2025-ல் நடந்த மூன்று போட்டிகளில் முதல் போட்டி ஈடன் கார்டனில் கேகேஆர் அணிக்கும் ஆர்சிபி அணிக்கும் இடையில் நடந்தது. அந்தப் போட்டியில் ஆர்சிபியின் பந்து வீச்சும் களவியூகமும் சிக்சர்கள், பவுண்டரிகள் வரட்டும் என்பது போலவே இருந்தன. ஹேசில்வுட் போன்ற ஒரு சில வீரர்கள் இந்த ஐபிஎல் தொடர் என்னும் சரிவடைந்த கிரிக்கெட்டிலும் தங்களது உயரிய தரத்தை பராமரிக்கக் கூடியவர் என்பதால் குவிண்டன் டி காக்கிற்கு அருமையான பந்தை வீசி எடுத்தார்.
அதன் பிறகு ரஹானேயும் சுனில் நரைனும் அடித்தது, வலைப்பயிற்சியில் வீசுவது போலவே இருந்தது. எந்த ஒரு சவாலும் இல்லை. நன்றாக ஹாஃப் வாலி பந்துகளை அடிக்க வாகாக வீசினர். பீல்டர்கள் இல்லாத பகுதியில் பந்துகள் செல்வதற்காகவே பந்துகள் வீசப்பட்டது போல் இருந்தன.
» ‘குட் விஷன்!’ - தோனியின் ஸ்டம்பிங்கை புகழ்ந்த மேத்யூ ஹேடன்
» ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை வாரிக்கொடுத்த பவுலரான ஆர்ச்சர்!
குருணால் பாண்டியா வந்ததும் கொஞ்சம் ஆட்டத்தில் சென்ஸ் வந்தது போல் தெரிந்தது. குறிப்பாக, அவர் வெங்கடேஷ் அய்யர் ஹெல்மெட் போடாமல் ஆடியதால் ஆத்திரமடைந்து ஒரு பவுன்சரை வீச, அது வெங்கடேஷ் அய்யரின் தலையை உரசிக் கொண்டு செல்ல அடுத்த பந்திற்கு ஹெல்மெட்டை வரவழைத்தார் வெங்கடேஷ். ஆனால், அந்த அடுத்த பந்தே பவுல்டு ஆகி வெளியேறினார். இது ஒரு சவாலான தருணம். இப்படி கிரிக்கெட்டுக்கே உரிய போட்டித்தன்மை, உயரிய உத்திகள், சாதுரியம் போன்றவற்றை சல்லடைப் போட்டு சலித்தால்தான் கண்டுப்பிடிக்க முடியும் போல் தெரிகிறது. அந்தப் போட்டி பிறகு கேகேஆரின் நெட் பவுலிங்காக அமைய விராட் கோலி முடித்து வைத்து விட்டார்.
அதன்பின், ஹைதராபாத்தில் நடந்த எஸ்.ஆர்.எச். - ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி உண்மையில் ஆங்கிலத்தில் farce என்று சொல்வார்களே, அந்தக் கேலிக்கூத்து ரகத்தைச் சேர்ந்தது. ஜோஃப்ரா ஆர்ச்சர் 10 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 4 ஓவர்களில் 76 ரன்களை வாரி வழங்கினார். சமீபத்திய 50 ஓவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் 10 ஓவர்களில் கூட ஆர்ச்சர் இவ்வளவு ரன்களை விட்டுக் கொடுக்கவில்லை. இங்கு வந்து இப்படி வீசுகிறார் என்றால் பிராண்டிங் நோக்கிய ஐபிஎல்-லின் வணிக நோக்கமே காரணம்.
கேகேஆர் - ஆர்சிபி போட்டி நெட் பவுலிங்கின் காட்சி என்றால், இந்தப் போட்டி தெரு கிரிக்கெட்டின் தரத்தைக் கூட எட்டாத பந்து வீச்சாக இருந்தது. களவியூகமும் வேண்டுமென்றே பந்துகள் எங்கு அடிக்கிறார்களோ அங்கு பீல்டர்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு இருந்தது. சன் ரைசர்ஸ் 300-க்கு 14 குறைவு. ஏற்கெனவெ இந்த ஐபிஎல் தொடரில் 300 ரன்கள் நிச்சயம் எட்டப்படும் என்று கூறிவந்தார்கள். நேற்று கிட்டத்தட்ட நடந்தேயிருக்கும்.
மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் விரட்டி 242 ரன்களை விளாசுகின்றனர். அப்போது சன் ரைசர்ஸ் பவுலிங்கின் லட்சணம், எப்படி, கள வியூகம் எப்படி என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. பாட் கமின்ஸ் 60 ரன்களைக் கொடுக்கிறார் என்றால் இது என்ன கிரிக்கெட்டா அல்லது வெறும் பிராண்ட் பிரபலமாக்கமா என்ற கேள்வி எழுவதே நியாயம்.
சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மேட்ச் அப்படியே தலைகீழ். மும்பை இந்தியன்ஸின் பேட்டிங் கேலிக்கூத்து. சாதாரண சிஎஸ்கே பவுலிங்கில் விக்கெட்டுகளை விட்டுக்கொண்டே இருந்தனர். நூர் அகமதுவுக்கு எதிரான ஷாட் தேர்வு அத்தனையும் அபத்தமே. 155 ரன்கள் இலக்கை சிஎஸ்கே 19.1 ஓவரில் வெற்றி பெறுகிறது, அதுவும் சிஎஸ்கேவின் மட்டுமல்லாமல் ஐபிஎல் என்னும் பிராண்டின் பிரம்மாண்ட முன்னிலை தனித்துவ வணிக முத்திரையான தோனி இறங்க வேண்டும் என்பதற்காகவே இழுத்தது போல் தெரிந்தது என்று போட்டியைப் பார்த்த பலரும் அபிப்ராயப்படுகின்றனர்.
ஆகவே, ஐபிஎல் பிராண்டிங் கட்டுமானமே பிரதானம் என்றால், இதில் காட்டப்படும் வீரர்களின் திறனை சர்வதேசப் போட்டிகளின் தேர்வுக்கான உரைகல் (touchstone) ஒரு போதும் பார்க்கக் கூடாது என்பதே நம் கோரிக்கை. இந்தத் தொடர் முடிவதற்குள் இன்னும் எத்தனை எத்தனை கேலிக்கூத்துக்களைப் பார்க்க வேண்டி வருமோ? பார்ப்போம்.
இடையிடையே இந்த வணிக பிராண்டிங் சலசலப்புகளுக்கெல்லாம் சமரசம் செய்து கொள்ளாத வீரர்களின் தனிப்பட்ட ஆட்டம் மிகவும் அரிதாக இருந்தாலும் அப்படிப்பட்ட இன்னிங்ஸ்களை அடையாளம் கண்டே உண்மையான கிரிக்கெட் ரசிகர் தன் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago