குல்தீப் ‘ஆறு’க்குப் பிறகு ரோஹித்தின் ‘நூறு’: 481 ரன்கள் மயக்கதில் வீசிய இங்கிலாந்து?- இந்தியா மிகப்பெரிய வெற்றி

By இரா.முத்துக்குமார்

நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ்வின் 6 விக்கெட்டுகளில் 268 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி பேட்டிங் முன் கட்டிப்போட்டப் பசுவாகப் பந்து வீச இந்திய அணி 40 ஓவர்களில் 269/2 என்று மிகப்பெரிய வெற்றி பெற்றது.

விரட்டல் மன்னன் விராட் கோலி மிக அழகான 75 ரன்களை 82 பந்துகளில் சாதித்தார். 7 பவுண்டரிகளில் 2 கோலி ஸ்பெஷல் ராஜகவர் டிரைவ்களூம் அடங்கும். ரோஹித் சர்மா 82 பந்துகளில் சதம் கண்டு பிறகு 114 பந்துகளில் 15 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 137 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். சவாலில்லாத இங்கிலாந்தின் பந்து வீச்சில் இந்தியா மிக எளிதான ஒரு விரட்டலை 40.1 ஓவர்களில் சாதித்து 8 விக்கெட்டுகளில் இங்கிலாந்தைப் பொடி செய்தது. இதே மைதானத்தில்தான் இங்கிலாந்து 481 ரன்கள் குவித்தது, ஒரு வேளை அந்த இலக்கை மனதில் வைத்து வீசினார்களோ என்னவோ? ஒரு அவசரமோ, பதற்றமோ இங்கிலாந்து பவுலிங்கில் இல்லை, மாறாக அவுட் ஆகும் அவசரமும் பதற்றமும் அவர்கள் பேட்டிங்கில் இருந்தது.

டாஸ் வென்ற விராட் கோலி, இங்கிலாந்தின் ‘பேட்டிங் பவர்’ என்பதை மாயையாக்கினார். ஏனெனில் இங்கிலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தார். நல்ல தொடக்கம் கண்ட இங்கிலாந்து பிறகு குல்தீப் யாதவ் பந்து வீச வந்தவுடன் பதற்றமடைந்து குழப்பத்தில் சரிவடைந்தது, ஜோஸ் பட்லர், ஸ்டோக்ஸ் ஆகியோர் முற்றிலும் மாறான இரண்டு அரைசதங்களை முறையே எடுத்தாலும் இருவரும் நின்று பின்னால் அடித்துத் தூள்பரத்தும் வாய்ப்பையும் குல்தீப் பறித்தார், கடைசியில் மொயின் அலி, அடில் ரஷீத்தின் சிறு அதிரடியில் இங்கிலாந்து 268 ரன்களை எட்டியது.

சமீப காலங்களாக மட்டைப் பிட்ச்களில் 350-400 என்று இலக்கை வைத்துக் கொண்டு பந்து வீசிய இங்கிலாந்து வீச்சாளர்களுக்கு திடீரென 268 என்பது பழக்கமில்லாத ஒன்றாக மாறிவிட்டது. இந்தியா இலக்கை நெருங்க நெருங்க இன்னும் ஏதோ 200 ரன்களை இந்தியா எடுக்க வேண்டும், அது முடியாது என்ற நினைப்பில் இங்கிலாந்து பந்து வீச்சாளார்கள் வீசியது விசித்திரமாக இருந்தது. கலீவர்ஸ் ட்ராவல்ஸ் நாவலில் வரும் கதாபாத்திரம் குள்ளர்கள் (லிலிபுட்டன்ஸ்) வசிக்கும் தேசத்துக்குச் சென்று அங்கு இவரை பெரிய ராட்சதனாகக் குள்ளர்கள் பார்த்ததால் லண்டனுக்கு வந்த பிறகும் தான் ஒரு பெரிய ஜெயண்ட் என்பது போல் நடந்து கொண்டு சாட்டையடி வாங்குவார். அது போல் இங்கிலாந்து எப்போதோ தாங்கள் அடித்த 400 ரன்கள் நினைவில் நேற்றும் பந்து வீசியது, கடைசியில் ரோஹித் சர்மா, ராகுல் கிளவ்வைக் கழற்றி கைகுலுக்க வரும்போதுதான் ஓஹோ 268தான் அடித்துள்ளோம் என்ற எதார்த்த நிலைக்கு விழித்தது இங்கிலாந்து. ஏன் இவ்வாறு நினைக்க வேண்டியிருக்கிறது என்றால் இதே மைதானத்தில்தான் இங்கிலாந்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவைப் புரட்டி எடுத்து 481 ரன்கள் எடுத்தது. ஒருவேளை அதே நினைப்பில் ஆடியிருக்கலாமோ என்னவோ?

ஒன்றுமேயில்லாத இங்கிலாந்து பந்துவீச்சு; ரோஹித், கோலி ‘விளையாட்டு’ ஆட்டம்

இங்கிலாந்துடன் போய் சீரியசாக ஆடுவதா என்று மனதுக்குள் கேள்வி எழுப்புவது போல் ஆடினர் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும்.

ஏன் ஷிகர் தவண். 27 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் என்று புரட்டி எடுத்து கடைசியில் வேஸ்டாக மொயின் அலி பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று பாயிண்டில் கேட்ச் ஆகி வெளியேறியிருக்காவிட்டால் நோ-லாஸ் வெற்றிதான் இந்தியாவுக்கு!! தொடக்கத்தில் தவண் டேவிட் வில்லேயை கவர் டிரைவ், ஆஃப் டிரைவ், பிளிக் என்று 3 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசினார். பிறகு மார்க் உட்டையும் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார்.

ரோஹித் சர்மா தன் முதல் பவுண்டரியை 6வது ஓவரை வீசிய மொயின் அலி பந்தில்தான் அடித்தார். ஆனால் மார்க் உட் வீசிய ஃபுல் லெந்த் பந்தை காலைப்போட்டு லாங் ஆஃபில் அடித்த சிக்ஸ் உண்மையில் திகைக்கவைக்கும் அனாயாச அதிரடி சிக்ஸ். கோலி இறங்கியவுடன் மார்க் உட் மிக அழகாக அவருக்கு ஒரு ஓவர் பிட்ச் பந்தை வீச ராஜகவர் டிரைவ் சிக்கியது, பவுண்டரி. இதே ஓவரில் ரோஹித் அடித்த ஸ்கொயர் ட்ரைவ் வெங்சர்க்காரை நினைவு படுத்தியது, பிறகு மீண்டும் ஒரு ஆஃப் திசை பஞ்ச் பவுண்டரி  என்று ரோஹித் வெளுத்துக் கட்டத் தொடங்கினார். கோலி மீண்டும் ஸ்டோக்ஸின் ஆஃப் வாலி பந்தை ஒரு கோலி ஸ்பெஷல் ராஜகவர் டிரைவ் அடித்தார்.

ஸ்டோக்ஸ் வீசிய பந்தை பொறிபறக்கும் கட் ஷாட்டில் பவுண்டரிக்கு விரட்டி 54 பந்துகளில் ரோஹித் அரைசதம் கண்டார். அரைசத மகிழ்ச்சியை அடில் ரஷீத்தை 2 பவுண்டரிகள் விளாசிக் கொண்டாடினார் ரோஹித். மார்க் உட் மீண்டும் 25வது ஓவரில் வர உள்ளே வந்த பந்தை கோலி மிக அலட்சியமாக கவர் பவுண்டரி அடித்து 55 பந்துகளில் அரைசதம் கண்டார். பிறகு ரோஹித் சர்மா அடில் ரஷீத்தை ‘அந்த இடத்தில் போடாதே’ என்று நேராக ஒரு சிக்ஸ் விளாசினார். அடுத்த பந்தே லாங் ஆஃபில் ஒரு தூக்கி அடித்த பவுண்டரி. 76 பந்துகளில் 92 என்று இருந்த போது ரோஹித் சர்மா, லியாம் பிளெங்கெட் பந்தை கட் செய்தார் பாயிண்டில் ஜேசன் ராய் வலது புறம் ஒரு டைவ் முயற்சி செய்தார் பந்து கையில் பட்டு கீழே விழுந்தது, தப்பினார் ரோஹித்.

பிறகு அடில் ரஷீத்தை நேராகத் தூக்கி எதிரேயிருந்த கட்டிடத்துக்கு சிக்ஸ் அடித்து ரோஹித் 82 பந்துகளில் சதம் கடந்தார். சதமடித்த பிறகு ஒரு கையில் ரஷீத்தை சிக்ஸ் அடித்தார் ரோஹித். இடையில் ஒரு ரஷீத் கான் பந்தை அடில் ரஷீத் வீச கோலி ஷண நேர மயக்கத்தில் அது ரஷீத் கான் தானோ என்று ஸ்டம்ப்டு ஆகி 75 ரன்களில் இங்கிலாந்தைப் போனால் போகிறது என்று விட்டுவிட்டு பெவிலியன் திரும்பினார்.

ராகுல் இறங்கி 9 நாட் அவுட், ரோஹித் சர்மா 137 நாட் அவுட். இந்தியா 40.1 ஓவர்களில் இலக்கை எட்டியது, 481 மயக்கத்தில் இருந்த இங்கிலாந்து என்ன ஆட்டம் முடிந்து விட்டதா? நாம தோத்துட்டோமா? எது? ரோஹித் செஞ்சுரியா என்ற விழிபிதுங்கலுடன் பெவிலியன் திரும்பியது. ஆட்ட நாயகன் வேறு யார்? குல்தீப் யாதவ்தான். இங்கிலாந்தில் ஓரளவுக்கு நன்றாக வீசியவர் லியாம் பிளெங்கெட் மட்டும்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்