ரோஹித், கோலியின் எதிர்காலம் என்ன? - ஒரு ‘டெஸ்ட்’ பார்வை

By எல்லுச்சாமி கார்த்திக்

பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு இப்போது இம்சையாக அமைந்துள்ளது. இந்தியா 1 - 2 என இந்தத் தொடரில் பின்னிலையில் உள்ள காரணத்தால், அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வழக்கம் போலவே ஃபார்ம் இன்றி தவிக்கும் சீனியர் வீரர்கள் பதம் பார்க்கப்படுகிறார்கள். இதில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்களின் பெயர் உள்ளன.

குறிப்பாக, மோசமான ஃபார்ம் காரணமாக ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. இதன் மூலம் டெஸ்ட் தொடரின்போது ஃபார்ம் காரணமாக நீக்கப்பட்ட முதல் இந்திய கேப்டன் என்ற அடையாளத்தை அவர் பெற்றுள்ளார். இருந்தாலும், அதை இந்திய அணி வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாமல், ‘அவருக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது’ என சிட்னி டெஸ்ட் போட்டியில் அணியை வழிநடத்தும் பொறுப்பை பும்ராவுக்கு அளித்துள்ளது.

இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோரின் ஆட்டத்தை விமர்சித்திருந்தனர். அதோடு இந்திய அணியில் அவர்கள் இடம்பெற்றுள்ளது நியாயமா என கேள்வி கேட்கும் வகையில் அந்த விமர்சனம் இருந்தது.

இந்தச் சூழலில் தான் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ எனச் சொல்லும் வகையில் சீனியர் வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். இத்தனைக்கும் 2024-ல் அவரது டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடு சிறப்பாக இருந்தது. வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இந்தியாவின் வெற்றியில் அஸ்வின் முக்கிய அங்கம் வகித்தார் என்பதை மறுப்பதற்கில்லை.

சொந்த மண்ணில் நியூஸிலாந்து உடனான தொடரை இழந்த நிலையில்தான் ஆஸ்திரேலிய தொடருக்கு இந்தியா புறப்பட்டது. அப்போதே பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வென்று காட்டியது. பும்ரா, ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இரண்டாவது போட்டியில் அவர் அணியுடன் இணைந்தார். அங்கிருந்து தான் இந்தியாவுக்கு சிக்கலும் எழுந்தது.

ரோஹித் என்ற ஒற்றை மனிதரை மட்டும் நாம் பழி சொல்லவில்லை. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் பேட்டிங் மோசமாக இருந்தது. பும்ராவின் பந்து வீச்சு அதை மறக்க செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற செய்தனர். ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் அந்த மேஜிக் நடைபெறவில்லை. பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாதது, தவறான ஷாட் ஆடுவது மற்றும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சும் இதற்கு காரணம்.

கிரிக்கெட் தொடர்களில் ஓர் அணி தோல்வியை தழுவும்போது அந்த அணியின் வீரர்கள் மீது ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் விமர்சிப்பது வழக்கம். அதற்கு அண்மைய கால சிறந்த உதாரணம் கே.எல்.ராகுல். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் பலரும் வலியுறுத்தினர். அதே ராகுல் தான் இப்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களின் ஃபார்ம் இழப்பும், அதிலிருந்து மீண்டெழுந்து ஃபார்முக்கு திரும்புவதும் இயல்பானது தான். ‘இதுவும் கடந்து போகும்’ என கிரிக்கெட் வீரர்கள் அந்த மோசமான கட்டத்தை கடந்து செல்வார்கள்.

ரோஹித்துக்கு என்ன சிக்கல்? - 37 வயதான ரோஹித், கடந்த 2013 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 67 போட்டிகளில் 116 இன்னிங்ஸ் விளையாடி 4,301 ரன்கள் எடுத்துள்ளார். 12 சதங்கள் மற்றும் 18 அரைசதங்களை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சராசரி 40.58. இதில் கடந்த ஆண்டு 14 போட்டிகளில் அவர் விளையாடினார். ஒரே ஆண்டில் அவர் விளையாடிய அதிகபட்ச டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை இது. 2024-ல் மொத்தமாக 619 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதம் மற்றும் 2 அரைசதம் அடங்கும். சொந்த மண்ணில் அதை பதிவு செய்திருந்தார். ஆனால், கடைசியாக விளையாடிய 10 இன்னிங்ஸில் ஓர் அரைசதம் மட்டுமே பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் 5 இன்னிங்ஸில் அவர், மொத்தமாக 31 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதனால்தான் ஆடும் லெவனில் இருந்து அவர் கழட்டி விடப்பட்டுள்ளார்.

ஆஸ்தான தொடக்க ஆட்டக்காரரான ரோஹித்துக்கு பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடருக்கான ஆடும் லெவனுக்கான இந்திய அணியில் இடம்பெறவே வாய்ப்பு இல்லாத சூழலில்தான் அவர் மிடில் ஆர்டரில் விளையாடினார். ஜெய்ஸ்வால் மற்றும் ராகுலின் அபார தொடக்க கூட்டணி அதற்கு காரணமாக அமைந்தது. இருப்பினும், மெல்பர்ன் போட்டியில் மீண்டும் ஓப்பனராக களம் இறங்கினார். அதிலும் சோபிக்காத நிலையில் சிட்னி போட்டியில் ஆடும் லெவனில் ரோஹித் இடம்பெறவில்லை.

அதே நேரத்தில் இளம் வீரர்களின் வருகை, வெற்றி பெற வேண்டுமென்ற நெருக்கடி உள்ளிட்டவை இதற்கான காரணங்களாக அமைந்துள்ளன. ‘இந்திய அணி 10 விக்கெட்டுகளை மட்டுமே கொண்டு விளையாடிக் கொண்டுள்ளது. ரோஹித் சர்மா வாக்கிங் விக்கெட்’ என இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சனம் வைத்திருந்தார். ரோஹித்தின் ஏஜ் ஃபேக்டரும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. கேப்டன் என்ற காரணத்தால் தான் ரோஹித் விளையாடுகிறார் எனவும் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எப்படியும் இந்த ஆண்டு இறுதியில் உள்நாட்டில் நடைபெற உள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அல்லது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி ஓய்வு பெற வேண்டுமென்ற திட்டத்துடன் ரோஹித் இருக்கலாம். அதை காலம்தான் முடிவு செய்யும்.

விராட் கோலி: இன்றைய இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சை கட்டமைத்த மகத்தான முன்னாள் கேப்டன்களில் ஒருவர் கோலி. Fab4 என சொல்லப்படும் தலைசிறந்த கிரிக்கெட் நால்வர்களில் முன்னவர். இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இதில் மற்ற மூன்று பேர்.

இருப்பினும் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடருக்கு முன்னதாக அணியில் கோலிக்கான இடம் குறித்து முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் விமர்சித்தனர். ‘சுமார் ஓராண்டு காலம் சதம் பதிவு செய்யாதவருக்கு அணியில் இடமா?’ என்ற ரீதியில் விமர்சனம் வைத்தனர். ஆனால், பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியில் சதம் பதிவு செய்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் விராட் கோலி. இருந்தாலும், இதே தொடரில் அதற்கடுத்த போட்டிகளில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியில் வீசும் பந்தை ஆட முயன்று ஆட்டமிழந்து வருகிறார். ‘அந்த பந்தை தொட்ட... நீ கெட்ட’ என முன்னாள் வீரர்கள் கோலியை எச்சரித்த சூழலிலும் அதை அவரால் தவிர்க்க முடியவில்லை.

128 போட்டிகள், 208 இன்னிங்ஸ்கள், 9207 ரன்களை எடுத்துள்ள கோலி நிச்சயம் இந்தக் கட்டத்தை கடந்து வருவார் என்றே அவரது ஆட்டம் குறித்து அறிந்தவர்கள் கருத்து சொல்லி வருகின்றனர். இந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் வரை கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஃபிட்டான வீரர் என்பதால் அதற்கு மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு உள்ளது. ரோஹித் இல்லாத பட்சத்தில் அணியை வழிநடத்தும் புதிய கேப்டனுக்கு கோலி போன்றவர் அணியில் இருப்பதும், ஆலோசனை சொல்வதும் அவசியம்.

எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் இந்தியா டெஸ்ட் அணியை கட்டமைக்க வேண்டி உள்ளது. ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சர்பராஸ் கான், துருவ் ஜுரெல், தேவ்தத் படிக்கல், அக்சர் படேல் என இன்னும் ஏராளமான திறன் கொண்ட வீரர்களை இந்தியா கொண்டுள்ளது. பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது என்ன என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்