சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபப்யணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரில் 4 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி அதன் பின்னர் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியிலும், மெல்பர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியிலும் எந்த ஒரு கட்டத்திலும் பேட்டிங்கில் போராட்ட குணத்தை வெளிப்படுத்தாமல் தோல்வி அடைந்தது. பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்திருந்தது.
இந்நிலையில் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று (3-ம் தேதி) தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபியை தக்கவைத்துக் கொள்ளும். மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கும். மாறாக இந்த ஆட்டத்தை டிரா செய்தால் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலிய அணி ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபியை கைப்பற்றும். அதேவேளையில் ஆஸ்திரேலிய அணி சிட்னி டெஸ்ட் போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்தால் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதனால் இந்த டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் பார்ம் இந்தத் தொடரில் சிறப்பானதாக இல்லை. 5 இன்னிங்ஸில் அவர், கூட்டாக 31 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். மோசமான பார்மை கருத்தில் கொண்டு அவர், சிட்னி டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஒருவேளை அவர், விளையாடினாலும் ஆட்டத்தின் முடிவை பொறுத்து தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய முடிவை ரோஹித் சர்மா எடுக்கக்கூடும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை.
டெஸ்ட் தொடரின் போது மோசமான பார்ம் காரணமாக நீக்கப்பட்ட முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான பெயரை அவர் பெற்றுள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடாத சூழலில் ரோஹித் சர்மா நிச்சயம் ஓய்வு அறிவிப்பை வெளியிடக்கூடும். ரோஹித் சர்மா இல்லாத சூழ்நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக அணியை வழிநடத்துகிறார். இது ஒருபுறம் இருக்க மெல்பர்ன் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் ஓய்வு அறையில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், வீரர்களை கடிந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இதன் தாக்கம் சிட்னி டெஸ்ட் போட்டியில் பிரதிபலிக்கக்கூடும். கடந்த சுற்றுப்பயணத்தில் மேட்ச் வின்னராக திகழ்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், இம்முறை மோசமான ஷாட்களை விளையாடி எளிதாக தனது விக்கெட்டை பறிகொடுப்பது அணியின் பலவீனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அநேமாக அவர், நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் நேற்றைய வலை பயிற்சியின் போது மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்தார்.
ரோஹித் சர்மா விளையாடாத காரணத்தால் கே.எல்.ராகுல் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கினார். மேலும் கடந்த போட்டியில் நீக்கப்பட்ட ஷுப்மன் கில் மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் முதுகு வலி காரணமாக சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் விளையாடுகிறார்.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய தொடரை தோல்வியுடன் தொடங்கிய போதிலும் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன் ஆகியோர் பார்முக்கு திரும்பி இருப்பது அணியின் பலத்தை அதிகரிக்கச் செய்யக்கூடும். கடந்த டெஸ்டில் முறையே 0, 1 ரன்களில் ஆட்டமிழந்த டிராவிஸ் ஹெட் மீண்டும் மட்டையை சுழற்றுவதில் முனைப்பு காட்டக்கூடும். மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தனது ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்களால் கவர்ந்த சாம் கான்ஸ்டாஸின் மட்டை வீச்சுக்கும், பும்ராவின் பந்து வீச்சுக்கும் இடையிலான மோதல் மீண்டும் ஒரு முறை ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கக்கூடும்.
7 இன்னிங்ஸ்களில் பேட்டிங்கில் 73 ரன்களும், பந்து வீச்சில் 3 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றிய ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ், சிட்னி டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவரது இடத்தில் மற்றொரு ஆல்ரவுண்டரான பியூ வெப்ஸ்டர் அறிமுக வீரராக களமிறங்குவார் எனவும் கேப்டன் பாட்கம்மின்ஸ் நேற்றை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
அதேவேளையில் மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் விலா எலும்பு பகுதியில் காயம் அடைந்த முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் உடல் தகுதியுடன் இருப்பதாகவும் சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர், கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்னி ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என பாட் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு துறை மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும்.
சிட்னி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ராகுல், ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் முதல் நாள் ஆட்டத்தின் உணவு நேர இடைவேளைக்கு முன்பாகவே அட்டமிழந்தனர். இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago