ஜெய்ஸ்வால் மோசடி தீர்ப்பு: மவுனம் கலைத்த பிசிசிஐ!

By ஆர்.முத்துக்குமார்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பெரிய காரணமாக எழுந்திருப்பது ஜெய்ஸ்வாலுக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த டிவி அம்பயர் செய்கத் ஷர்ஃபுத்தவ்லா கொடுத்த மோசடி தீர்ப்பே காரணம் என்று கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ‘காட்சிப்பிழை’யில் ஏற்பட்ட மோசடி என்று கடுமையாகச் சாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது.

உதாரணத்துக்கு சூழ்நிலையை மாற்றி யோசிப்போம், கள நடுவர் அவுட் கொடுக்கிறார்... ஜெய்ஸ்வால் ரிவ்யூ செய்கிறார். அப்போது என்ன செய்திருப்பார் இந்த மூன்றாம் நடுவர்? ஸ்னிக்கோ மீட்டரில் ஆதாரங்கள் இல்லை எனவே கள நடுவர் தீர்ப்புக்கு விட்டு விடுகிறோம் என்றுதானே சொல்லியிருப்பார். கள நடுவர் நாட் அவுட் என்று கூறியதை வலுவான ஆதாரமின்றி மாற்றியமைக்கக் கோரி பந்து கிளவ்வில் பட்டு திசை மாறியது என்று அவுட் கொடுத்தது இந்திய அணியின் டெஸ்ட் ட்ரா வாய்ப்பையே காலி செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி ஒன்றும் செய்ய முடியாத பட்சத்தில் நடுவர் தீர்ப்பைத் தங்களுக்குச் சாதகமாகத் திருப்பி மோசடி வெற்றிகளைப் பெற்றிருப்பதன் நீள்நெடும் வரலாறுகள் உள்ளன. நமக்கு தெரிந்த வரையில் 1981 தொடரில் கவாஸ்கருக்கு மட்டையில் பட்ட பந்துக்கு எல்.பி. தீர்ப்பளித்து கவாஸ்கர் சவுகானையும் பெவிலியனுக்கு அழைத்துச் சென்றது நினைவிருக்கலாம். மைக்கேல் ஹோல்டிங் இளம் பவுலராக இருந்த போது ஆஸ்திரேலிய நடுவர்களின் செயல்பாட்டில் விரக்தியடைந்து மைதானத்தில் அழுததும் நடந்தேறியுள்ளது.

அதே தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் கிரெக் சாப்பலுக்கு அவுட் கொடுக்காமல் அவர் இரண்டு இரட்டைச் சதங்களை அடித்ததையும் குறிப்பிடலாம். எப்படியோ அந்தத் தொடரில் கபில்தேவின் அற்புத ஸ்பெல்லில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இதே மெல்பர்னில் தொடரை சமன் செய்துள்ளோம். 1985-86ல் கபில் தலைமையில் சென்ற போது மாற்றத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி ஆலன் பார்டர் தலைமையில் முழுக்க முழுக்க நடுவரை நம்பியே மோசடி தீர்ப்புகளை வழங்கி தொடரை 0-0 என்று சமன் செய்ததும் நினைவுக்கு வருகிறது. ஆலன் பார்டருக்கு அப்போது அவுட் தர மாட்டார்கள். கபில்தேவ் கடும் கோபத்துடன் மீசை நுனியை பல்லால் கடித்தபடி நின்றிருப்பார். அதன் பிறகு கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி 2008 தொடரில் ஆஸ்திரேலியா சென்ற போது சிட்னி டெஸ்ட் போட்டியை மறக்க முடியுமா? நடுவர் ஸ்டீவ் பக்னரின் மோசடிகளை மறைத்துக் காக்க ஹர்பஜன் சிங் ‘மன்கி கேட்’ (Monkey Gate) என்று ஒன்றை உருவாக்கி விவகாரத்தைத் திசைத்திருப்பினர்.

ஒருமுறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக 369 ரன்கள் வெற்றி இலக்கு. 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் என்று ஆஸ்திரேலியா தட்டுத் தடுமாறி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஜஸ்டின் லாங்கர், ஆடம் கில்கிறிஸ்ட் ஆடி வந்த போது ஸ்கோர் 210 இருக்கும். அப்போது வக்கார் யூனிசிடம் கில்கிறிஸ்டும் சக்லைன் முஷ்டாக்கிடம் லாங்கரும் எட்ஜ் வாங்கி ஆட்டமிழந்தது அப்பட்டம். ஆனால், கள நடுவர் நாட் அவுட் என்பார். பார்த்த நமக்கோ அதிர்ச்சி. அனைத்தையும் விட வேதனை 238 ரன்கள் கூட்டணியில் வெற்றிக்கு இட்டுச் சென்றது. அப்போதெல்லாம் குற்ற உணர்வு ஏற்படாத கில்கிறிஸ்ட் ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு அவுட் கொடுக்கப்படவில்லை எனும் போது மனவேதனையடைந்து இனி அவுட் ஆனால் நான் நடுவர் தீர்ப்பை எதிர்பார்க்காமல் செல்வேன் என்று முடிவெடுத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எப்போதுமே தனக்கு வந்தா ரத்தம் மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னிதான். மேதை ஸ்பின்னர் ஷேன் வார்ன் எடுத்த 700 விக்கெட்டுகளில் கிட்டத்தட்ட 150 விக்கெட்டுகள் மோசடி தீர்ப்புகளால்தான் கிடைத்ததே. இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்நிலையில், ஜெய்ஸ்வால் அவுட் பெரும் சர்ச்சைக்குள்ளானதையடுத்து பிசிசிஐ மவுனம் கலைத்துள்ளது. பிசிசிஐ துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா, “அது நிச்சயமாக நாட் அவுட். டிவி அம்பயர் தொழிலிநுட்பம் என்ன அறிவுறுத்தியதோ அதன்படிதான் தீர்ப்பு வழங்க வேண்டும். மூன்றாம் நடுவரே தீர்ப்பு வழங்க வலுவான ஆதாரங்கள் நீக்கமற தெளிவாக இருக்க வேண்டும்” என்றார்.

சுனில் கவாஸ்கரும், ‘மூன்றாம் நடுவர் பந்தில் பார்த்த பாதை மாற்றம் அவரது காட்சிப்பிழை. எதற்காக தொழில்நுட்பத்தை வைத்திருக்கிறீர்கள்? இதைப் பயன்படுத்தத் தானே? கண்ணால் கண்டது ஆப்டிக்கல் இல்யூஷன். காட்சிப்பிழை, இதை வைத்துக் கொண்டு தொழில்நுட்பத்தைப் புறக்கணிக்கலாமா?” என்று சாடியுள்ளார்.

ஐசிசி முன்னாள் நடுவர் சைமன் டாஃபல் மட்டும்தான் மூன்றாவது நடுவர் தீர்ப்பு சரிதான் என்று வக்காலத்து வாங்கியுள்ளார். இன்னொரு மோசடி வெற்றியைத்தான் ஆஸ்திரேலியா பெற்றுள்ளது என்றே கூற வேண்டியுள்ளது என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேறு சில தரப்பினர் இந்திய அணி தோல்வியடையத் தகுதியானது தான் என்று பதிவிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்