ஜெய்ஸ்வாலுக்கு ‘மோசடி’ தீர்ப்பு, தேவையற்ற அவுட்கள் - ஆஸி.யிடம் இந்திய அணி வீழ்ந்தது எப்படி?

By ஆர்.முத்துக்குமார்

மெல்பர்ன் டெஸ்ட் போட்டி பரபரப்பான முறையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பினால் இன்று ஆஸ்திரேலிய வெற்றியில் முடிந்தது. இந்திய அணி 121/3 என்று இருந்த நிலையில், ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற ஷாட்டினால் இந்திய அணி 34 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, பின்னர் 79.1 ஓவர்களில் 155 ரன்களுக்குச் சுருண்டு 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்று முன்னிலை பெற்றது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் ஓர் அதியற்புதமான இன்னிங்ஸை ஆடி போட்டியை டிராவுக்கு நகர்த்திச் சென்று கொண்டிருக்கும்போது கமின்ஸின் ஓசி பந்தைப் போய் ஹூக் ஷாட் ஆடப்போய் லெக் திசையில் கேட்ச் ஆனார். ஆனால், இந்த அவுட் கடுமையான சர்ச்சைகளைக் கிளப்பக் கூடியது. இதுபோன்ற மோசடி தீர்ப்புகள் போட்டியையே ஆஸ்திரேலியா பக்கம் திருப்பிவிட்டதால் இந்தத் தீர்ப்பை நிச்சயம் ரசிகர்கள் எதிர்க்கவே செய்வார்கள்.

2-வது இன்னிங்ஸை இன்று தொடர்ந்து ஆஸ்திரேலியா ஆடியபோதே அவர்கள் இந்திய அணியின் விரட்டும் திறனைக் கண்டு அஞ்சி நடுங்கியது அனைவராலும் உணரப்பட்டது. ஆனால், ‘நாங்கள் அப்படியல்ல’ என்று ரோஹித் சர்மாவும் நேற்று முதல் கடைசி விக்கெட்டை வீழ்த்தாமல் இழுத்தடித்து வந்தார். காரணம், நேற்றே கடைசி விக்கெட்டை இன்னும் கொஞ்சம் முன்னால் வீழ்த்தியிருந்தல் 10 ஓவர்களை விளையாட நேரிட்டு 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து விடும் என்று கொஞ்சம் கூட தைரியமும் பொறுப்புமில்லாத கேப்டனாக கடைசி விக்கெட்டை வீழ்த்தாது மேலே போக விட்டார்.

சரி, நம்பிக்கை இருந்திருந்தால் கமின்ஸ் டிக்ளேர் செய்திருக்கலாமே என்று கேட்கலாம். அவருக்கும் அதே பயம்தான். 300-க்கும் கீழ் இலக்கு வைத்துக் கொடுத்தால் இந்தப் பிட்சில் இந்திய அணியின் ஸ்ட்ரோக் மேக்கர்கள் வென்று விடுவார்களோ என்று அஞ்சினார். மொத்தத்தில் இரண்டு பயந்தாங்கொள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித் சர்மா பயந்தாங்கொள்ளி, கமின்ஸ் பயந்தாங்கொள்ளியிடம் வெற்றியைத் தாரை வார்த்தார் என்றே கூற வேண்டும்.

பொறுப்பில்லாத ஷாட்கள், தேவையற்ற அவுட்கள்: இந்தியா 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியபோதே மிகவும் நெர்வசாக, எதிர்மறையாக டிரா மனநிலையில் தொடங்கினர். இப்படி ஆடினால் அது ஆஸ்திரேலிய அஸ்திரத்திற்கு பலியாவதற்குச் சமம் என்பது ரோஹித் சர்மா போன்ற பலவீனமான கேப்டனுக்குத் தெரிய நியாயமில்லை.

சரி, அவர் என்ன ஷாட் ஆடினார்? பந்தை கடைசி வரை பார்க்காமல் உள்ளே வருவதாக நினைத்து ஆஃப் வாலி பந்தை பிளிக் ஆடப் போனார், ஆனால் பந்து லேட் ஆக வெளியே ஸ்விங் ஆக லீடிங் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார். தேவையில்லாத ஆக்ரோஷ ஷாட், அதுவும் தப்பும் தவறுமாக ஆடி இந்தத் தொடரில் சராசரி 6 என்று படுமோசமாக ஆடி வருவதை நிரூபித்துள்ளார்.

கே.எல்.ராகுல் பந்தை நன்றாகப் பார்த்தார். சரி, ஆடாமல் விடுவதற்கான போதிய அவகாசம் இருந்தது. ஆனாலும் மட்டையை பந்தின் லைனில் வெறுமனே தொங்க விட்டு எட்ஜ் ஆகி வெளியேறினார். லீவ் பண்ணியிருக்கலாம். ஒன்றும் முதல் இன்னிங்ஸ் போல் ஆட முடியா பந்து அல்ல இது. விராட் கோலி எத்தனை முறை ஆட்டமிழந்தாலும் அந்தப் பந்தை ஆடாமல் அவரால் தவிர்க்க முடியவில்லை எனும்போது ஓய்வு அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றுதான் பொருள்.

5 ரன்களில் அவர் ஒன்றுமில்லாத பிட்ச்சில் ஸ்டார்க் வெளியே வீசி, அதுபாட்டுக்குச் செல்லும் பந்தை மீண்டும் ஒருமுறை டிரைவ் ஆடப் போய் வெறுமனே புஷ் செய்ய எட்ஜ் ஆகி வெளியேறினார். இது என்ன ஷாட்? ஆகவே ராகுலை மன்னித்தாலும் கூட கோலி, ரோஹித் சர்மா ஷாட் தேர்வுகளை மன்னிக்க முடியாது.

ரிஷப் பண்ட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உணவு இடைவேளைக்குப் பிறகு தேநீர் இடைவேளை வரை கமின்சின் எந்த ஒரு முயற்சிக்கும் சளைக்காமல் தடுத்தாடும் உத்தியைக் கடைப்பிடித்து தேநீர் இடைவேளையின் போது 54 ஓவர்கள் 112/3 என்று வலுவாகவே இருந்தனர்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலியா ஓவர் ரேட்டில் பின் தங்கியிருப்பதால் புள்ளிகளை இழந்து விடுவோம் என்று அஞ்சி டிராவிஸ் ஹெட், நேதன் லயன் மூலம் தொடங்கினர். ஹெட் விக்கெட் வீழ்த்துபவர் அல்ல. சேஞ்ச் பவுலர், ஆஸ்திரேலியாவும் விக்கெட் எடுப்பார் என்று இவருக்கு பந்து வீச்சை அளிக்கவில்லை.

பண்ட்டின் பொறுப்பற்ற ஷாட்: இந்தத் தருணத்தில்தான் ரிஷப் பண்ட் 104 பந்துகள் ஆடி 30 ரன்கள் என்று பண்ட்டின் தன்மைகளுக்கு மூட்டைக்கட்டி வைத்து ஆடி வந்தவர், பொறுத்தது போதும் பொங்கி எழடா என்று டிராவிஸ் ஹெட் வீசிய அரைக்குழிப் பந்தை தூக்கி அடிக்கிறேன் பேர்வழி என்று பெரிய மைதானத்தில் பவுண்டரி அருகே கேட்ச் ஆனார். இப்பகுதியில் கிளியர் செய்ய முடியாது.

மிக மிக பொறுப்பற்ற ஷாட். முதல் இன்னிங்சில் இப்படித்தான் ஒரு ரேம்ப் ஷாட் சிக்கவில்லை, சரி வரவில்லை என்று உஷார் ஆகியிருக்க வேண்டும். ஆனால் அடுத்த பந்தே அதே போல் அடித்து ஆட்டமிழந்தார். அப்போது பாலோ ஆன் வாங்கியிருப்போம், வாஷிங்டனும், நிதிஷ் ரெட்டியும் காப்பாற்றினர்.

ஆனால், இன்று பண்ட் அவுட் ஆனது பெரிய சரிவை உண்டாக்கி, தோல்வியில் போய் முடிந்துள்ளது. அவர் செய்த தவறுகளுக்காக அவர் ஓரிரு போட்டிகளில் தண்டனையாக உட்கார வைத்தால்தான் அடங்குவார். ரெட்டி ஆபத்பாந்தவராக எத்தனை முறைதான் இருப்பார்? லயன் பந்தில் எட்ஜ் ஆனார். ரவீந்திர ஜடேஜா உண்மையில் போலண்டின் எதிர்பாரா பாடிலைன் எகிறு பந்திற்கு தானும் எம்பி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இருக்கும் ஒரே நம்பிக்கை யஷஸ்வி ஜெய்ஸ்வால்தான். அவர் 208 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில் கமின்ஸ் வீசிய லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பவுன்சரை ஹூக் ஆட முயன்று பந்து எதில் பட்டது என்று சொல்ல முடியவில்லை, கேரி கேட்ச் என்று அப்பீல் செய்ய கமின்ஸ் குரல் கொடுக்க, களநடுவர் நாட் அவுட் என்றார்.

கமின்ஸ் ரிவியூ செய்தார். ரிவியூவில் எத்தனை முறை காட்டியபோதும் பந்து மட்டையைக் கடக்கும்போது லேசாக அதன் கோணம் மாறியது போல் தெரிந்ததே தவிர ஸ்னிக்கோ மீட்டர் சப்தத்தை எடுக்கவில்லை. எனவே, ஸ்னிக்கோ மீட்டர் படி நாட் அவுட்தான். ஆனால் மூன்றாம் நடுவர் பந்து கிளவ்வில் பட்டதைத் தான் பார்த்ததாக அவுட் என்று தீர்ப்பளித்து விட்டார். உண்மையில் அவுட் என்பதற்கான நிரூபணம் வலுவாக இல்லாதபோது சந்தேகத்திற்கிடமாகும் போது களநடுவர் தீர்ப்புக்குத்தான் விடுவார்கள். ஆஸ்திரேலியாவாயிற்றே, தேர்ட் அம்பயர் தானே அவுட் கொடுக்கிறார்.

மிகவும் முக்கியமான கட்டங்களில் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஆஸ்திரேலியாவில் மோசடி செய்துதான் போட்டியை வெல்வார்கள். இது தெரிந்த கதை. ஒரு முக்கியமான அவுட்டிற்கு மோசடி செய்து விடுவார்கள். இந்த டெஸ்ட்டை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று மிகவும் விரக்தியின் உச்சத்தில் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி தன் வேலையை ஜெய்ஸ்வால் அவுட்டில் காட்டி விட்டது.

பெர்த்தில் கே.எல்.ராகுலுக்கும் இப்படித்தான் அவுட் கொடுத்தார்கள். ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகே எல்லாம் முடிந்து விட்டது. ஆனால், மோசடி தீர்ப்பு என்பதற்காக ஜெய்ஸ்வாலின் ஷாட் தேர்வு மீது விமர்சனம் வைக்காமல் இருக்க முடியாது. ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் யாரையும் தொந்தரவு செய்யாமல் விக்கெட் கீப்பரிடம் செல்லும் பந்தை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும், அதுவும் 15 ஓவர்கள் ஆடினால் டிரா எனும்போது இந்த ஷாட் தேவையா? எனவே, ரிஷப் பண்ட் ஆரம்பித்து வைத்த தேவையில்லாதா ஷாட்டினால் உண்டான சரிவை ஜெய்ஸ்வால் தன் தேவையற்ற ஷாட்டினால் முடித்து வைத்தார்.

பும்ரா அட்டகாசமாக வீசி ஆஸ்திரேலிய அணியிடத்தில் கிலியை ஏற்படுத்தி, அவர்களே வெற்றிக்கு ஆடாமல் ஒரு முடிவை ஏற்றுக் கொண்டு ஆடும்போது தேவையில்லாத ஷாட்கள் மூலம் இந்திய அணி அவர்களுக்கு போட்டியைத் தாரை வார்த்தது என்பதுதான் வருத்தமானது. பாட் கமின்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ரோஹித் சர்மா தன் மோசமான கேப்டன்சி மற்றும் பேட்டிங்கினால் போட்டியை ஆஸ்திரேலியாவுக்குத் தாரை வார்த்தார் என்று நாம் முதல் இன்னிங்சின் போது கூறியது சிலருக்கு கோபத்தை வரவழைத்திருக்கலாம், ஆனால் நடந்தது என்னவோ நாம் எழுதியதுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்