ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஜெய்ஸ்வாலின் ரன் அவுட்: இந்திய அணி 164 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாற்றம்

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தின் சதம் மூலம் 474 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 86 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. அறிமுக வீரரான சாம் கான்ஸ்டாஸ் 60, உஸ்மான் கவாஜா 57, மார்னஷ் லபுஷேன் 72, டிராவிஸ் ஹெட் 0, மிட்செல் மார்ஷ் 4, அலெக்ஸ் கேரி 31 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்டீவ் ஸ்மித் 68, பாட் கம்மின்ஸ் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 122.4 ஓவர்களில் 474 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அபாரமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 167 பந்துகளில், 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார். இது அவருக்கு 34-வது சதமாக அமைந்தது. மட்டையை சுழற்றிய ஸ்டீவ் ஸ்மித் 197 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 140 ரன்கள் விளாசிய நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் போல்டானார்.

அவருக்கு உறுதுணையாக விளையாடிய பாட் கம்மின்ஸ் 49, மிட்செல் ஸ்டார்க் 15 ரன்களில் வெளியேறினர். கடைசி விக்கெட்டாக நேதன் லயன் 13 ரன்களில் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட்களையும், ஜடேஜா 3 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது.

ரோஹித் சர்மா 3 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தை அடித்து விளையாட முயன்ற போது மிட் ஆன் திசையில் எளிதாக ஸ்காட் போலண்டிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார். இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 15-வது ஓவரில் 50 ரன்களை எட்டியது.

கே.எல்.ராகுல் 42 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி பொறுமையாக விளையாட மறுமுனையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டையை சுழற்றினார். அவர், 81 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் தனது 9-வது அரை சதத்தை கடந்தார். அபாரமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால், ஸ்காட் போலண்ட் வீசிய 41-வது ஓவரின் கடைசி பந்தை மிட் ஆன் திசையில் தட்டிவிட்டு ரன் சேர்க்க ஓடினார்.

மறுமுனையில் விராட் கோலி கிரீஸை விட்டு சிறிது தூரம் வந்த நிலையில் பின்வாங்கினார். ஆனால் அதற்குள் பாட் கம்மின்ஸ் பந்தை சேகரித்து விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரிக்கு கொடுக்க அவர், ஜெய்ஸ்வாலை ரன் அவுட் செய்தார். ஜெய்ஸ்வால் 118 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 82 ரன்கள் விளாசியிருந்தார். அப்போது இந்திய அணி 153 ரன்களை சேர்த்து வலுவான நிலையில் இருந்தது. ஜெய்ஸ்வால், விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 102 ரன்களை சேர்த்திருந்தது.

இதன் பின்னர் இந்திய அணி ஆட்டம் கண்டது. விராட் கோலி 86 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்காட் போலண்ட் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தை தொட முயன்ற போது மட்டையில் உரசி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய ஆகாஷ் தீப் 13 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஸ்காட் போலண்ட் பந்தில் நடையை கட்டினார். இந்த 3 விக்கெட்களும் 4 ஓவர்கள் இடைவேளையில் வீழ்ந்திருந்தது.

2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 46 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் 6, ரவீந்திர ஜடேஜா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. பாலோ ஆனை தவிர்ப்பதற்கு இந்திய அணி மேற்கொண்டு 111 ரன்கள் சேர்க்க வேண்டும்.

கோலியை பார்த்து கூச்சலிட்ட ரசிகர்கள்: மெல்பர்ன் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வீரரான சாம் கான்ஸ்டாஸ் மீது விராட் கோலி மோதியது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இந்நிலையில் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் விராட் கோலி 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர், ஆடுகளத்தை விட்டு வெளியே வந்த போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூச்சலிட்டனர்.

சிறிது தூரம் உள்ளே சென்ற விராட் கோலி ஆஸ்திரேலிய ரசிகர்களின் கூச்சலை கேட்டனதும் வெளியே வந்து ரசிகர்களை முறைத்து பார்த்தார். அவர்களுடன் விராட் கோலி வாக்குவாதம் செய்ய தயாரான நிலையில் அங்கிருந்த ஆடுகள பாதுகாவலர் விரைந்து வந்து கோலியை அழைத்து சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

கருப்புபட்டை அணிந்த வீரர்கள்: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மெல்பர்ன் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் கருப்பு பட்டையை அணிந்து விளையாடினார்கள். இதபோன்று வடோதராவில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க இந்திய மகளிர் அணியினரும் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்