ஆஸ்திரேலியாவின் இளம் அறிமுக தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ், பும்ராவிடம் தொடக்கத்தில் தட்டுத்தடுமாறி, பிறகு மரபுவழுவிய ஆட்டம் மூலம் பும்ராவின் புதுப்பந்து அச்சுறுத்தலை ஓரளவுக்கு முறியடித்து ஆஸ்திரேலியாவின் நோக்கத்தை நிறைவேற்றினாலும், அதன்பின்னர் பும்ரா மீண்டெழுந்து ஆஸ்திரேலியாவின் டாப் பேட்டர்களான கவாஜா, ஹெட், மார்ஷ் ஆகியோரை பெவிலியன் அனுப்பி பதிலடி கொடுத்தார்.
சாம் கான்ஸ்டாஸ் ஏதோ நல்ல தடுப்பு உத்தியை வைத்துக் கொண்டு பும்ராவை காலி செய்ய வேண்டும் என்று இப்படி ஆடவில்லை. சாம் கான்ஸ்டாஸிடம் அப்படிப்பட்ட தடுப்பாட்ட உத்தியே இல்லை என்பதுதான் விஷயம். ஏனெனில் அவர் ரிவர்ஸ் ஸ்கூப், ஸ்கூப், லாஃப்டட் ஷாட்களை பும்ராவுக்கு எதிராக ஆடி அந்த ஷாட்கள் மட்டையில் சிக்குவதற்கு முன் அவர் தட்டுத் தடுமாறி 21 பந்துகளில் 2 ரன்களையே எடுத்து ஏகப்பட்ட பீட்டன்கள் ஆனார் என்பதுதான் விஷயம்.
அவரிடம் தடுப்பு உத்தி இல்லை. அவர் இதே போன்று தொடர்ந்து ஆடினால் சிலபல ‘டக்’குகளை எடுக்க வேண்டி வரும். பாசிட்டிவ் ஆக ஆடுவது என்பது மரபு வழுவுதல் ஆட்டம் அல்ல, மரபு உத்திகளுடன் அடிக்க வேண்டிய பந்துகளை அடிப்பதும், சிலபல வேளைகளில் மிகவும் டைட்டாக வீசும்போது கொஞ்சம் மரபுவழுவி சில ஷாட்களை ஆடி பவுலர்களின் லைன் அண்ட் லெந்த்தைக் காலி செய்வதும் தான் சாதுரியமான பேட்டிங். இதைக் கற்றுக் கொண்டால் அவர் சிறந்த பாதையில் முன்னேறி நட்சத்திர வீரராக உருமாறுவார். அல்லது இதே பாதையில் சென்றால் இவரால் மற்ற வீரர்கள் பிழைப்பார்கள், இவரது கதி அதோகதிதான்.
ஆனால், இன்று பும்ராவின் புதிய பந்து ஆக்ரோஷங்களை இவர் அடித்து ஆடி விக்கெட்டுகள் விழாமல் தடுத்தது உஸ்மான் கவாஜாவுக்கு ரன்களையும் எல்லாவற்றிற்கும் மேலாக மார்னஸ் லபுஷேன் தன் ஃபார்மை மீட்டுக் கொள்வதற்கும் உதவியது. ஸ்மித்தும் இப்போது ‘டச்’சிற்கு வந்து விட்டார். இப்படி ஆஸ்திரேலிய நோக்கத்தை கான்ஸ்டாஸின் அல்ட்ரா மாடர்ன் அக்ரஷன் நிறைவேற்றியிருக்கலாம்.
ஆனால் பும்ரா மீண்டு வந்து ஆஸ்திரேலியாவைச் சாய்த்ததுதான் முக்கியம். ஏனெனில் இத்தகைய அதிரடித் தொடக்கத்துக்குப் பிறகே 500 ரன்களை எடுக்க ஆஸ்திரேலியா ஆட முடியவில்லை என்பதே பரிதாபகரமான உண்மை. எப்படியும் நாளை 350க்குள் சுருண்டால், கான்ஸ்டாசின் இத்தகைய தொடக்கம் வீண் தான். கான்ஸ்டாஸுக்கு ஸ்பின் பந்துகளையும் அவ்வளவு சரளமாக ஆட வரவில்லை, ரவீந்திர ஜடேஜாவிடம் 65 பந்து 60 ரன்கள் எடுத்த பிறகு எல்.பி.ஆகி வெளியேறினார்.
ஆகாஷ் தீப் அட்டகாசமாக வீசினார். ஆனால் கடந்த டெஸ்ட்டிலும் இந்த டெஸ்ட்டிலும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. கிட்டத்தட்ட 33 முறை அவர் ஆஸ்திரேலிய பேட்டர்களிடமிருந்து தவறான ஷாட்களைத் தூண்டினார். உஸ்மான் கவாஜாவிற்கு அந்த புல் ஷாட்டைத் தவிர மற்ற ஷாட்கள் வரவில்லை. அவர் எப்படியோ 57 ரன்களை கான்ஸ்டாஸின் அட்டாக்கிங்கினால் எடுத்தார், ஆனால் கடைசியில் பும்ராவிடம் அதே புல்ஷாட்டில் வீழ்ந்து இந்தத் தொடரில் அவரிடம் 5வது முறையாக ஆட்டமிழந்தார்.
ட்ராவிஸ் ஹெட், உண்மையில் இந்திய அணியின் பெரிய அச்சுறுத்தலான இவர் பும்ராவின் பெரிய இன்ஸ்விங்கரை ஆடாமல் விட்டு போல்டாகி டக் அவுட் ஆனார். மிட்செல் மார்ஷிற்கு பும்ரா என்ன வீசுகிறார் என்பது புரிய இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்றே தெரிகிறது அவரை ஒர்க் அவுட் செய்து வீழ்த்தினார் பும்ரா.
அலெக்ஸ் கேரி நன்றாக ஆடும் அபாய விக்கெட் கீப்பர்/பேட்டர், அவரை ஆகாஷ்தீப் அட்டகாசமான பந்தின் மூலம் எட்ஜ் செய்ய வைத்து வீட்டுக்கு அனுப்பினார். கான்ஸ்டாஸின் தாக்குதல் ஆட்டத்தினால் புதிய பந்தை சந்திக்க வேண்டி வராத கவாஜா, லபுஷேன், ஸ்மித் என்று முதல் 4 வீரர்கள் அரைசதம் எடுத்தனர். 2022-ற்குப் பிறகு அதாவது ராவல்பிண்டிக்குப் பிறகு ஆஸ்திரேலிய டாப் 4 அரைசதம் எடுக்கின்றனர். முகமது சிராஜிடம் கோபம் இருக்கும் அளவுக்கு பந்தில் வேகம் இல்லை. புதிய பந்தில் சிலபல பந்துகளை நன்றாக வீசுகிறார் அதன் பிறகு அடிக்க ஆரம்பித்தால் அவருக்கு பும்ரா போல் மீண்டெழ முடிவதில்லை.
மார்னஸ் லபுஷேன் 72 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்தை மேலேறி வந்து ஆடிக்க முயன்று மிட் ஆஃபில் கோலியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆட்ட முடிவில் ஸ்டீவ் ஸ்மித் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 68 ரன்களுடனும் பாட் கமின்ஸ் 8 ரன்களுடனும் உள்ளனர். ஆஸ்திரேலியாவை நாளை 370 ரன்களுக்கு மிகாமல் சுருட்டினால், இந்தப் பிட்சில் நிச்சயம் இந்திய பேட்டர்கள் நன்றாக ஆட மிகச்சிறந்த வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
6 days ago