பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்: சாம் கான்ஸ்டாஸ் அரைசதம்

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறப் போவது யார் என்பதில் 2 அணிகளுக்கு இடையேயும் கடும் போட்டி எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இதைத் தொடர்ந்து பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் டிராவில் முடிவடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

இந்நிலையில் 4-வது டெஸ்ட் மெல்பர்ன் நகரில் நாளை (26-ம் தேதி) தொடங்குகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ள இந்த ஆட்டம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் போட்டிகள் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வலுவானதாக செயல்படவில்லை. முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், முதல் இன்னிங்ஸில் இரட்டை இலக்கை ரன்களை கூட எட்டாமல் ஆட்டமிழந்தார். பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 161 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஜெய்ஸ்வாலிடம் இருந்து அடுத்த இரு டெஸ்ட் ஆட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை.

இதேபோன்று மற்றொரு தொடக்க வீரர் ஷுப்மன் கில்லின் பேட்டிங்கும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத அவர், அதன் பின்னர் பங்கேற்ற 2 போட்டிகளிலும் கூட்டாக 60 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இது ஒருபுறம் இருக்க கடந்த சுற்றுப்பயணத்தில் மேட்ச் வின்னராக திகழ்ந்த ரிஷப் பந்த் இம்முறை 19.20 சராசரியுடன் 96 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

கே.எல்.ராகுல் 2 அரை சதங்கள் அடித்துள்ள போதிலும் அதை பெரிய அளவிலான ரன் வேட்டையாக மாற்றத் தவறினார். எனினும் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் அவர், சேர்த்த 84 ரன்களும் அவருடன் ஜடேஜா விளாசிய 77 ரன்களும், பின்வரிசையில் ஜஸ்பிரீத் பும்ரா, ஆகாஷ் தீப் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டதும் இந்திய அணியை பாலோ ஆன் ஆவதில் இருந்து பெரிதும் காப்பாற்றியது. டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என நிலையில் உள்ளதால் மெல்பர்ன் போட்டியும், அதைத் தொடர்ந்து சிட்னியில் நடைபெற உள்ள கடைசி போட்டியும் இரு அணிகளுக்குமே முக்கியத்தும் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற வேண்டுமானால் இந்த இரு போட்டியையும் வென்றாக வேண்டும். இது நிகழ்ந்தால்தான் மற்ற அணிகளின் முடிகளுக்காக காத்திருக்காமல் நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும். அதேவேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரை அடுத்து அந்த அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றிகளை குவிக்கும் பட்சத்தில் அந்த அணி இறுதிப் போட்டியில் கால்பதிக்க வாய்ப்பு உள்ளது.

மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு சவால் அளிக்க முடியும். இந்தத் தொடரில் 19 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள ரோஹித் சர்மா மற்றும் ஆஃப் ஸ்டெம்புகளுக்கு வெளியே வீசப்படும் பந்துகளில் எளிதாக சிலிப் திசையில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுக்கும் விராட் கோலி ஆகியோர் பேட்டிங்கில் கூடுதல் பொறுப்புடன் செயல்பட்டு அணியை முன்னின்று நடத்தினால் கணிசமான அளவில் ரன்கள் சேர்க்கலாம்.

இதேபோன்று வேகப்பந்து வீச்சிலும் இந்திய அணி உத்வேகம் பெற வேண்டியது அவசியம். பெர்த் டெஸ்ட் போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அடுத்த இரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர்.

ஜஸ்பிரீத் பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தாலும் அவருக்கு உறுதுணையாக செயல்படுவதில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் தேக்கம் அடைகின்றனர். அநேகமாக மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகாஷ் தீப் நீக்கப்பட்டு ஹர்ஷித் ராணா மீண்டும் சேர்க்கப்படக்கூடும். மேலும் நித்திஷ் ரெட்டிக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி அதன் பின்னர் பகலிரவு டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை வசப்படுத்தியது. பிரிஸ்பன் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும் மழை காரணமாக போட்டி டிராவில் முடிவடைந்திருந்தது. அந்த அணியின் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் பிரதான வீரராக திகழ்கிறார். இந்திய அணியின் பந்துவீச்சுக்கு எதிராக அவர், மேற்கொள்ளும் தாக்குதல் ஆட்டம் அணியின் பலமாக உள்ளது. 2 சதம், ஒரு அரை சதம் என 409 ரன்கள் வேட்டையாடி உள்ள அவர், மீண்டும் ஒரு முறை இந்திய பந்துவீச்சுக்கு சவால் அளிக்கக்கூடும்.

பிரிஸ்பன் போட்டியில் சதம் விளாசி பார்முக்கு திரும்பி உள்ள ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். முதல் 3 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கிய நேதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளதால் அவரது இடத்தில் 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக களம் கண்டுள்ளார். இதேபோன்று காயம் காரணமாக விலகி உள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் விளையாடுகிறார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் 1 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களை அந்த அணி குவித்தது. தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசினார் தொடக்க ஆட்டாக்காரரான சாம் கான்ஸ்டாஸ். 65 பந்துகளில் 60 ரன்களை அவர் விளாசினார். 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா 38 மற்றும் லபுஷேன் 12 ரன்கள் எடுத்திருந்தனர்.

மெல்பர்னில் இந்தியா… மெல்பர்ன் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இந்திய அணி 4 வெற்றி, 8 தோல்வி, 2 டிராவை பதிவு செய்துள்ளது. எனினும் கடைசியாக இங்கு விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை. 2014-ல் நடைபெற்ற போட்டியை டிராவில் முடித்த இந்திய அணி அதன் பின்னர் 2018-ல் நடைபெற்ற போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்திலும், 2020-ல் நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றியை வசப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கும் ரோஹித்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6-வது வீரராக களமிறங்கி வந்த கேப்டன் ரோஹித் சர்மா, மெல்பர்ன் போட்டியில் மீண்டும் தொடக்க வீரராக விளையாடவுள்ளார். அடிலெய்டு, பிரிஸ்பன் டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 6-வது வீரராக பின்வரிசையில் களமிறங்கிய ரோஹித் சர்மா, 3 இன்னிங்ஸ்களில் 19 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட்டானார்.

இதைத் தொடர்ந்து அவர் மெல்பர்ன் போட்டியில் தொடக்க வீரராக களத்துக்குள் வரவுள்ளார். இதனால், கே.எல். ராகுல் 3-வது வீரராக களமிறங்குவார் என அணி வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்