ஷாஹின் அப்ரிடி சாதனை வீண்; மில்லர் சிக்ஸர் மழை - பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

By ஆர்.முத்துக்குமார்

கிங்ஸ்மீட்: டர்பனில் நடைபெற்ற முதல் டி20 சர்வதேச போட்டியில் ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை ஹென்ரிச் கிளாசன் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி தொடரின் முதல் போட்டியில் 11 ரன்களில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 28 ரன்கள் என்ற சரிவிலிருந்து டேவிட் மில்லரின் சிக்ஸர் மழையில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் என்று முடிந்தது. டேவிட் மில்லர் 40 பந்துகளில் 4 பவுண்டரிகள் 8 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் தரப்பில் மீண்டும் பார்முக்கு வந்த ஷாஹின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளை 22 ரன்களுக்குக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் முகமது ரிஸ்வான் மட்டுமே சவாலைச் சந்தித்து 74 ரன்களை எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹின் ஷா அப்ரிடி அனைத்து வடிவங்களிலும் குறைந்த வயதில் 100 விக்கெட்டுகளை எட்டிய பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தினார். ஆனால், அந்தச் சாதனையை அவர் கொண்டாட வழியில்லாமல் பாகிஸ்தான் அணி தோல்வி கண்டது. அதாவது 30 வயதை எட்டும் முன்னரே 3 வடிவங்களிலும் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை நிகழ்த்தியுள்ளார் அப்ரிடி. இவருக்கு முன்பாக லஷித் மலிங்கா, டிம் சவுதி, ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் மூன்று வடிவங்களிலும் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் இடது கை பேட்டரும் ஸ்பின்னருமான ஜார்ஜ் லிண்டே 3 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணியில் வந்து 24 பந்துகளில் 48 ரன்களை விளாசியதோடு பவுலிங்கிலும் 4 விக்கெட்டுகளை 21 ரன்களுக்குக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். லிண்டே ஹாட்ரிக் சாதனையையும் நிகழ்த்தியிருப்பார். ஆனால் மூன்றாம் நடுவர் ரிவ்யூ தீர்ப்பு அதற்கு எதிராக அமைந்தது.

முகமது ரிஸ்வான் முதல் 44 பந்துகளில் 36 ரன்கள் என்று சுணங்கிப் போனார், கடைசி ஓவர் வரை நின்றாலும் அவரால் அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை. ஷாஹின் ஷா அப்ரிடி மற்றும் அப்ரார் அகமது ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்காவை சரிவுக்குட்படுத்தினர். இருவரும் வான் டெர் டசன், ரீஸா ஹென்றிக்ஸ், மேத்யூ பிரீட்ஸ்க் ஆகியோரை விரைவில் வெளியேற்றினர். மில்லர் இறங்கி பின்னி எடுத்தார். பாகிஸ்தான் ஸ்பின்னர்களுக்கு பந்துகள் ஒன்றுமே ஆகவில்லை.

பாகிஸ்தான் தரப்பில் ஆஸ்திரேலியாவை என்ன சேதி என்று கேட்ட சயீம் அயூப் 31 ரன்களை 15 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் விளாசினார். பாபர் அசாம் அப்பர் கட் ஆடுகிறேன் பேர்வழி என்று தேர்ட் மேனில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். சயீம் அயூபும் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்கா பிடியை விடாமல் டைட்டாக வைத்திருந்தது. அனுபவமற்ற பாகிஸ்தான் நடுவரிசை ஒற்றை இலக்கத்தில் வெளியேறியது. ஆனால், ரிஸ்வான் மீண்டெழுந்தார். மபாக்கா வீசிய ஓவர் ஒன்றில் 24 ரன்கள் விளாசப்பட்டார். ஆட்நீல் பார்ட்மேனை 3 பவுண்டரிகளை ரிஸ்வான் விளாச கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்று பாகிஸ்தானுக்குச் சாதகமாக ஆட்டம் சற்றே திரும்பியது.

ஆனால், இதே மபாக்கா 20-வது ஓவரில் ரிஸ்வானை வீழ்த்தினார். ஸ்லோ பந்து டாப் எட்ஜ் ஆனது. ஆட்டம் அதோடு பாகிஸ்தானுக்கு சீல் வைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்