செயிண்ட் கிட்ஸில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியிலும் மேற்கு இந்தியத் தீவுகள் வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு இந்தியத் தீவுகள் வங்கதேசத்தை ஒருநாள் தொடரில் வீழ்த்தியுள்ளது.
டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தார். மேற்கு இந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் தனது ஒருநாள் கரியரில் ஆகச்சிறந்த பந்துவீச்சை வீசி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வங்கதேசம் 45.5 ஓவர்களில் 227 ரன்களுக்குச் சுருண்டது. மஹ்முதுல்லா அதிகபட்சமாக 62 ரன்களையும் தன்ஜித் ஹசன் 46 ரன்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 36.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளுக்கு 230 என்று அதிரடி வெற்றி பெற்றது. தொடக்க வீரர் பிராண்டன் கிங் 76 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 82 ரன்களை விளாசினார்.
ஆனால் சீல்ஸ் விக்கெட்டுகளை எடுக்கும் முன் வங்கதேசத்தின் தொடக்க வீரர் தன்ஜித் ஹசன் மே.இ.தீவுகளின் அறிமுக பவுலர் மார்க்கினோ மிண்ட்லேயை 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை விளாசி அதிரடி தொடக்கம் தந்தார். ஆனால் அதன் பிறகு சீல்ஸ் புகுந்தார், முதலில் சவுமியா சர்க்கார் மிட் ஆனில் கேட்ச் ஆனார். முதல் பவர் ப்ளே முடிவதற்குள் லிட்டன் தாஸ் (4), மெஹதி ஹசன் மிராஸ் (1) ஆகியோரை சீல்ஸ் வெளியேற்றினார். பொதுவாக அதிரடியாக ஆடும் லிட்டன் தாஸ் நேற்று முடங்கி 18 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பி புல் ஷாட்டில் அவுட் ஆனார். கேப்டன் மெஹதி இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார்.
ஜஸ்டின் கிரீவ்ஸை 2 பவுண்டரி அடித்த தன்ஜித் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அஃபீப் நன்றாகத் தொடங்கினார். 4 பவுண்டரிகளை சடுதியில் விளாசினார். அதில் 2 பவுண்டரி பவுலர் ரொமாரியோ ஷெப்பர்ட் தலைக்கு மேலும் ஒன்று கவருக்கு மேலும் பறந்தது. ஆனால் இவரும் 24 ரன்களில் மோட்டியிடம் வெளியேறினார்.
இவர்களுக்கு அடுத்து ஜாகிர் அலி, நிஷாத் ஹுசைன் விரைவு கதியில் பெவிலியன் திரும்பினர். 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 என்று வங்கதேசம் தடுமாறிய போது ஆபத்பாந்தவன் மஹ்முதுல்லா வந்தார். மஹமுதுல்லாவுடன் இணைந்து தன்சிம் ஹசன் 82 ரன்கள் கூட்டணி அமைத்தார். தன்சிம் 62 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 45 எடுக்க மஹமுதுல்லா 92 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்தார்.
ராஸ்டன் சேஸ் தன்சிம்மை காலி செய்ய மஹமுதுல்லாவை சீல்ஸ் வீழ்த்தினார் வங்கதேசம் 227 ரன்களை ஒருவாறு தேற்றியது.
இலக்கை விரட்டும்போது பிராண்டன் கிங் 5 பவுண்டரிகளை முதல் 7 ஓவர்களில் விளாசினார். இவரும் எவின் லூயிஸும் சதக் கூட்டணி அமைத்து வலுவான அடித்தளம் அமைக்க, நீண்ட நேரம் அமைதி காத்த எவின் லூயிஸ் கடைசியில் தன்சிம் ஓவரில் ஒரு லாங் லெக் சிக்ஸருடன் 2 பவுண்டரிகளை விளாசினார். பிறகு மெஹதி ஹசனை ஒரு மிகப்பெரிய சிக்ஸர் அடித்த எவின் லூயிஸ் கேட்ச் ஒன்றை கொடுக்க அதை வங்கதேச வீரர் நழுவ விட்டார். பிராண்டன் கிங் 16-வது ஓவரில் அரைசதம் கண்டார்.
எவின் லூயிஸ் மெஹதியை மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால் லூயிஸ் ஒருமுறை அதிவேக பவுலர் நவேத் ரானாவிடம் எக்கச்சக்கமான இடத்தில் அடி வாங்கினார், ஆனால் அவரை சிக்சர் விளாசி பழிதீர்த்தார். 62 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் எவின் லூயிஸ் 49 ரன்கள் எடுத்து ரிஷாத் ஹுசைனிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். கே.சி. கார்ட்டி ஒருமுனையில் பவுண்டரிகள் விளாச பிராண்டன் கிங்கும் இவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்காக 66 ரன்களைச் சேர்த்தனர்.
அப்போதுதான் பிராண்டன் கிங் 82 ரன்களில் அதிவேக பவுலர் நஹித் ரானாவின் சற்றும் எதிர்பாராத அதிவேக யார்க்கரில் மிடில் ஸ்டம்ப் பறக்க வெளியேறினார். ஷாய் ஹோப் 17 ரன்களும், கடந்த போட்டி சத நாயகன் ஸ்டெபானி ருதர்போர்ட் 24 ரன்களையும் எடுக்க மேற்கு இந்தியத் தீவுகள் 37-வது ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago