பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களும், ஆஸ்திரேலியா 104 ரன்களும் எடுத்தன. 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161, விராட் கோலி 100, கே.எல்.ராகுல் 77 ரன்கள் விளாசினர். இதையடுத்து 534 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்தது.
நேதன் மெக்ஸ்வீனி 0, பாட் கம்மின்ஸ் 2, மார்னஷ் லபுஷேன் 3 ரன்களில் நடையை கட்டினர். உஸ்மான் கவாஜா 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 58.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உஸ்மான் கவாஜா 4 ரன்களில் முகமது சிராஜ் பந்தை புல் ஷாட் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு ரிஷப் பந்திடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய மார்னஷ் லபுஷேன் (3), ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 60 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில், ரிஷப் பந்த்திடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். 79 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து மிட்செல் மார்ஷ் மட்டையை சுழற்றினார். சிறப்பாக விளையாடி பந்த டிராவிஸ் ஹெட் 101 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவின் பந்தில், ரிஷப் பந்த்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
» சென்னை | விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவி பறிமுதல்: ஆந்திரா இளைஞர் போலீஸில் ஒப்படைப்பு
» கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை வந்துள்ள ‘ஐஎன்எஸ் டெல்லி’ போர்க் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு
இதைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் 67 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் நித்திஷ் குமார் ரெட்டி பந்தில் போல்டானார். இதன் பின்னர் மிட்செல் ஸ்டார்க் (12), நேதன் லயன் (0) ஆகியோர் வாஷிங்டன் சுந்தர் பந்தில் வெளியேறினர். கடைசி வீரராக அலெக்ஸ் கேரி 58 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷித் ராணா பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் மிகப்பெரிய அளவிலான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர் 1977-ம் ஆண்டு மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
பெர்த் டெஸ்ட் போட்டியின் வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக ஜஸ்பிரீத் பும்ரா தேர்வானார். அவர், இரு இன்னிங்ஸையும் சேர்த்து கூட்டாக 8 விக்கெட்களை கைப்பற்றினார். 2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டு நகரில் தொடங்குகிறது. இந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுகிறது. இதில் ‘பிங்க்‘ பந்து பயன்படுத்தப்படும்.
புள்ளிகள் பட்டியலில் முதலிடம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி 61.11 வெற்றி சராசரியுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 57.69 வெற்றி சராசரியுடன் 2-வது இடம் வகிக்கிறது.
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற வேண்டுமானால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் எஞ்சியுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் 3-ல் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில் ஆஸ்திரேலி அணி எஞ்சியுள்ள உள்ள 6 டெஸ்ட் போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம். அந்த அணி இந்தியாவுக்கு எதிரான தொடரை அடுத்து இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுடன் இலங்கை (55.56 வெற்றி சராசரி), நியூஸிலாந்து (54.55 வெற்றி சராசரி), தென் ஆப்பிரிக்கா (54.17 வெற்றி சராசரி) ஆகிய அணிகளும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வரிசையில் உள்ளன.
ஜஸ்பிரீத் பும்ரா: தொடரை வெற்றியுடன் தொடங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல் இன்னிங்ஸில் நாங்கள் அழுத்தத்தில் இருந்தோம், ஆனால் அதன் பிறகு நாங்கள் பதிலளித்த விதம் மிகவும் பெருமையாக இருந்தது. 2018-ம் ஆண்டு இங்கு விளையாடி உள்ளோம். 2018-ம் ஆண்டு இங்கு விளையாடியிருந்தோம். அப்போது இருந்த ஆடுகளத்தைவிட தற்போது விளையாடிய ஆடுகளம் சற்று வேகம் குறைந்ததுதான். நாங்கள் நன்றாக தயாராகி இருந்தோம். ஒவ்வொருவரிடமும் தங்களது செயல் முறையிலும், திறன் மீதும் நம்பிக்கை வைக்குமாறு கூறினேன். குறிப்பிட்ட நாளில் அனுபவம் முக்கியம். ஆனால் நம்பிக்கையுடன் செயல்பட்டால் சிறப்பாக ஏதேனும் செய்ய முடியும்.
ஜெய்ஸ்வால் தனது டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு சிறந்த தொடக்கத்தை அமைத்துள்ளார். இது அவரது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸாக இருக்கலாம். அவருக்கு தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளும் திறன் இயல்பாகவே உள்ளது, ஆனால், அவர் பந்துகளை நன்றாக விட்டுவிட்டு நீண்ட நேரம் விளையாடினார். விராட் கோலி, பார்மில் இல்லை என்று நான் பார்க்கவே இல்லை. சவாலான ஆடுகளத்தை பொறுத்தவரை, ஒரு பேட்ஸ்மேன் ஃபார்மில் இருக்கிறாரா என்பதை தீர்மானிப்பது கடினம்” என்றார்.
பாட் கம்மின்ஸ்: போட்டியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. சிறப்பாக தயாராகி இருந்ததாகவே நாங்கள் நினைத்தோம். எந்த வாய்ப்பையும் நாங்கள் பெறவில்லை. முதல் நாள் ஆட்டத்தின் பிற்பகுதியை நாங்கள் சிறப்பாக கடந்திருந்தால் 2-வது நாளில் விஷயங்கள் வேறுவிதமாக இருந்திருக்கும். இந்த கோடையில் நாங்கள் அதிக அளவிலான போட்டிகளில் விளையாட உள்ளோம். அதில் இந்த போட்டி சிறிய அளவுதான். இனிமேல் அதிக உரையாடல்களும், அதிக பயிற்சி நேரமும் இருக்கும்” என்றார்.
முதல் முறையாக வீழ்ச்சி: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இங்கு 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருந்தன. இதில் 2018-ல் இந்திய அணியையும், 2019-ல் நியூஸிலாந்தையும், 2022-ல் மேற்கு இந்தியத் தீவுகளையும், 2023-ல் பாகிஸ்தானையும் ஆஸ்ரேலியா வென்றிருந்தது. தற்போது முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
29 mins ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago