வரும் 22-ம் தேதி பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் இல்லாத காரணத்தினால் இந்திய அணி பலவீனமடைந்துள்ளது. இதனை ஜெய்ஸ்வால் தாங்கிப் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுவரை ஜெய்ஸ்வால் தன் திறமையை திறம்பட நிரூபித்து வருகிறார். ஆனால், இந்த பார்டர் கவாஸ்கர் டிராபி அவருக்கான அக்னிப்பரீட்சை என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. முதலில் அவருக்கு அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பது முக்கியமானது.
ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக ஆடும்போது சச்சின் டெண்டுல்கர் 5 டெஸ்ட் போட்டிகள் என்ற அக்னிப்பரீட்சையில் பெரிய வீரராக எழுச்சி பெற்றார். அதே போல்தான் இப்போது ஜெய்ஸ்வாலுக்கும் இது பெரிய சவால். அவரது கரியரைத் தீர்மானிக்கும் டெஸ்ட் தொடர் இது என்றால் அது மிகையாகாது. அவர் இதற்கு முன் 5 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடினார். அதுவும் பிரஷர் தொடர்தான். ஆனால், அந்தத் தொடர் இந்தியாவில் நடந்ததால் அவரது பேட்டிங் உத்திகளுக்குப் பெரிய சவால்கள் ஏற்படவில்லை.
ஆனால், வங்கதேசம் இங்கு வந்த போது சென்னை டெஸ்ட் போட்டியில் அவர் நஹித் ராணாவின் அதிவேகப் பந்துக்கு இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழந்தது, நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் முடங்கியது போன்ற உதாரணங்கள் ஜெய்ஸ்வாலின் போதாமைகளை அம்பலப்படுத்தினாலும் அவர் தடுமாறக்கூடிய வீரர் அல்ல என்பதை அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகள் எடுத்துக்காட்டின. தென் ஆப்பிரிக்காவிலும் இவர் பவுன்ஸ் ட்ராக்குகளில் ஆடினார். அங்கு அவரால் ஆட முடியவில்லை என்பது தெரிந்தது. இந்த முறை அவர் நிச்சயம் தன்னைப் பயிற்சி மூலம் தயார்ப்படுத்திக் கொண்டிருப்பார் என்றே கருதுகிறோம்.
டெஸ்ட் மேட்ச் பேட்டிங் மிகக் கடினமானது. அதுவும் ஆஸ்திரேலியாவில் மிக மிக கடினம். அதை விடவும் பெர்த் பிட்ச் என்பது உலகின் தலைசிறந்த பேட்டர்களுக்கே சவால் அளிப்பது. குகபரா பந்தின் தையல் அகலமானது, அதை பிட்சில் குத்தி எழுப்பி தெறிக்க விடுவார்கள் ஆஸ்திரேலிய பவுலர்கள். அதனால் பந்து புதிதாக இருக்கும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக ஆட வேண்டும். அவர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி வீசி ஒருமாதிரியாக பேட்டர்களை பின் காலுக்கு நகர்த்துவார்கள். பிறகு திடீரென ஃபுல் லெந்தில் ஆஃப் ஸ்டம்பில் வீசி எழுப்பும்போது உடனடியாக முன் காலை நீட்டி ஆட முடியாது. அப்படிப்பட்ட தருணத்தில் மட்டையை பந்தின் மீது தொங்க விட்டு எட்ஜ் ஆவார்கள். அல்லது ட்ரைவ் ஆடுகிறேன் பேர்வழி என்று மட்டையை மட்டும் விடுவார்கள். இந்தியப் பிட்ச்களில் கவர் திசையில், பாயிண்டில் செல்லும் ட்ரைவ்கள் பெர்த்தில் ஸ்லிப், கல்லி திசைக்குச் செல்லும். ஆகவே நல்ல பின் கால் நகர்த்தலும் தேவையான அளவு முன் கால் நகர்த்தலும் சிக்கனமாகப் பயன்படுத்தும் முடிவை விநாடிகளில் எடுக்க வேண்டும், இதுதான் சவால்.
பந்து கொஞ்சம் மென்மையான பிறகு அங்கு ஆடலாம். பேட்டிங் உண்மையில் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். குறைந்தது 30 ஓவர்களாவது ஆகும் பந்து சாஃப்ட் ஆவதற்கு. இதைப் புரிந்து கொள்வது அவசியம். அன்று வக்கா பயிற்சியின் போது ஒரு பந்தை மைதானத்துக்கு வெளியே அடித்துள்ளார் ஜெய்ஸ்வால். இவரை ரொம்பவும் மாற்ற வேண்டியதில்லை, சிறு சிறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் போதும்.
ஆஸ்திரேலிய பவுலர்கள் அச்சப்படும் வீரர்கள் யார் என்றால் புஜாரா, ராகுல் திராவிட் ரக தடுப்பு உத்தி வீரர்கள் அல்லது லஷ்மண், சச்சின் போன்ற இன்னிங்ஸைக் கட்டமைத்து சுமாரான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டுபவர்கள். சேவாக் போன்று ரிச்சர்ட்ஸ் போன்று அவர்களைத் தவிர யாரும் ஆட முடியாது. ஜெய்ஸ்வால், கொஞ்சம் புஜாரா, கொஞ்சம் லஷ்மண் ரக ஆட்டத்தைக் கைகொண்டு புதிய பந்தை நன்றாகத் தேய்த்து விட்டு பழைய பந்தில் அடிக்க ஆரம்பித்தால் நிச்சயம் இந்தத் தொடரின் சவாலை அவர் சந்தித்து வெற்றி வீரராக எழும் வாய்ப்பு உள்ளது.
ஜெய்ஸ்வாலின் 14 டெஸ்ட் போட்டிகளில் 10 டெஸ்ட்கள் இந்தியாவில் ஆடியதே. இதில் ஸ்பின்னுக்கு எதிராக அவரது சராசரி 75, வேகப்பந்து வீச்சில் சராசரி 38.84. ஃபுல் லெந்த்தும் அல்லாமல் ஷார்ட் பிட்சும் அல்லாமல் முக்கால் நிலையில் விழும் பந்துகளுக்கு அவரது ஆட்டம் திருப்திகரமாக இருந்ததில்லை, ஆட்டமிழந்துள்ளார். எனவே இந்த ஒரு இடத்தை அவர் சரி செய்ய வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் பழைய பந்தில்தான் பந்து எழும்பும்போது ட்ரைவ் ஆட முடியும். புதிய பந்தில் பந்து பிட்ச் ஆகும் இடத்திற்கு காலும் மட்டையும் இணைந்து வர வேண்டும் என்கிறார் சஞ்சய் மஞ்சுரேக்கர். எனவே புதிய பந்தில் ட்ரைவ் ஆடிப்பழகிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் எச்சரிக்கையுடன் ட்ரைவ் ஆட வேண்டும் என்கிறார் சஞ்சய். கிரீசில் நிற்கும் ஒவ்வொரு விநாடியும் சவால்தான், சமாளித்து மீண்டு வரும் திறமை ஜெய்ஸ்வாலிடம் இருக்கிறது. வெற்றி வீரராக எழுச்சி பெறுவாரா என்பதைப் பார்ப்போம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago