ஆஸ்திரேலியாவை முடக்கிய ரஹானே-ரவி சாஸ்திரி ‘டெக்னிக்’: இந்த முறை சாத்தியமா?

By ஆர்.முத்துக்குமார்

கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பயணம் செய்த போது விராட் கோலி முதல் டெஸ்ட் அடிலெய்ட் பகலிரவு போட்டியில் 36 ரன்களில் ஆல் அவுட்டுக்குப் பிறகே விடுப்பில் சென்று விட கடினமான சூழ்நிலையில் அஜிங்க்ய ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரது கேப்டன்சி ஆஸ்திரேலிய அணியினரையே பிரமிக்க வைத்தது.

1932-33 ஆண்டுகளில் டான் பிராட்மேன் என்னும் ஒரு மிகப்பெரிய ஆளுமை கிரிக்கெட் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவரையும் அவரது படையான ஆஸ்திரேலிய அணியையும் அடக்கி ஆள இங்கிலாந்தின் அப்போதைய கேப்டன் டக்ளஸ் ஜார்டைன் பயன்படுத்திய ஒரு முறை பிற்பாடு ‘பாடிலைன் அட்டாக்’ என்று புகழ் பெற்றது.

அதாவது வேகப்பந்து வீச்சை வைத்து ரவுண்ட் த விக்கெட்டில் வீசி லெக் திசையில் பீல்டர்களை கொஞ்சம் நெருக்கமாகவும் தேவைப்படும் டீப்பில் பீல்டர்களையும் வைத்து பேட்டர்களின் உடலை நோக்கி ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகளை வீசுவது. இந்த முறை பெரிய அளவில் கைகொடுத்தது. ஆனால் சர்ச்சைகளுக்கும் இடமானது, ஆனால் டக்ளஸ் ஜார்டைன் கவலைப்படவில்லை. ஆஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்தார்.

அந்த வகை உத்தியுடன் ரவி சாஸ்திரி - ரஹானே கூட்டணி பிரமாதமான ஓர் லெக் திசைப் பொறி களவியூகத்தில் ஆஸ்திரேலிய பேட்டர்களை வீழ்த்தினர் என்பதுதான் அந்தத் தொடரின் மிகப்பெரிய சாதனை. ஆஸ்திரேலிய பேட்டர்களின் வலுவான ஆஃப் திசை பேட்டிங்கிற்கு வாகான பந்துகளை கண்களில் காட்டாமலேயே ஆடவைத்து சாதாரண அவர்களது வலுவான ஸ்ட்ரோக்குகளிலெல்லாம் ஆட்டமிழக்கச் செய்து அசத்தினர் இந்திய பவுலர்கள்.

அடிலெய்டில் பகலிரவு போட்டியில் தோற்றாலும், இதிலும் மெல்போர்னிலும் இதே லெக் திசை கள வியூகம் மற்றும் லெக் ஸ்டம்ப் பந்து வீச்சை இந்திய பவுலர்கள் கையாண்டனர். அந்தத் தொடர் முழுதுமே ஆஸ்திரேலிய முக்கிய பேட்டர்கள் ஓய்வு ஒழிச்சலின்றி எல்லா பந்துகளையும் பேட்டில் ஆட நிர்பந்திக்கப்பட்டனர். அப்படி ஆடவைக்கப்படும் போது தவறுகள் இழைக்கும் வாய்ப்பு பெருகும். இந்த ஆட்டமிழப்புகளில் முத்தாய்ப்பாக இரண்டு அவுட்களைக் குறிப்பிடலாம். ஒன்று மார்னஸ் லபுஷேன், சிராஜின் லெக் ஸ்டம்ப் பந்தை பிளிக் ஆட அது நேராக பேக்வேர்ட் ஷார்ட் லெக் திசையில் எளிதான கேட்ச் ஆக முடிந்தது. ஸ்டீவ் ஸ்மித்திற்கு லெக் கல்லி, ஷார்ட் லெக், ஷார்ட் மிட்விக்கெட், பேக்வர்ட் ஷார்ட் லெக் என்று நிறுத்தி அஸ்வின் அவரைக் காலி செய்தார். பும்ராவும் ஒரு முறை ஸ்மித்தின் ஆஃப் ஸ்டம்ப் நோக்கிய நகர்வை ஒன்றுமில்லாமல் செய்ய லெக் ஸ்டம்ப் கில்லியை ஒருமுறைப் பறக்கவிட்டார்.

பொதுவாக 2 ஸ்லிப் ஒரு சில்லி மிட் ஆஃப், ஷார்ட் லெக் வைத்து ஆஃப் ஸ்பின் வீசுவார்கள், ஆனால் ரஹானே லெக் கல்லி, ஷார்ட் லெக், பேக்வர்ட் ஷார்ட் லெக், ஷார்ட் மிட்விக்கெட் என்று நிறுத்தி எல்லா பந்துகளையும் ஆஸ்திரேலிய பேட்டர்கள் ஆடியே ஆக வேண்டும் என்ற உத்தியை அவர்களிடம் வற்புறுத்தினார். அதில் அவர்கள் சிக்கினர். கோச் ரவி சாஸ்திரி, ‘அவர்கள் பேட்டர்களிடமிருந்து ஆஃப் திசையை பறித்து விடுங்கள்’ என்றார்.

எப்படி டக்ளஸ் ஜார்டைனின் பாடிலைன் பிரமாதமாக இங்கிலாந்துக்கு கைகொடுத்ததோ அதே போல் ரஹானேவுக்கு ரவிசாஸ்திரி ஆலோசனையின் படி அட்டகாசமான லெக் திசை கள வியூகத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் வாய்ப்பு கை கூடியது. இதுதான் ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணில் இருமுறை தொடரை வெல்ல கைகொடுத்த உத்தியாகும்.

நடப்பு தொடர்… நடப்புத் தொடரில் அத்தகைய உத்தி சாத்தியமா என்று தெரியவில்லை, ஏனெனில் ஆஸ்திரேலிய பேட்டர்கள், ஸ்மித், லபுஷேன் பிற்பாடு இந்த இந்திய லெக் சைடு உத்தியைப் புரிந்து கொண்டனர். அதாவது தங்களை வீழ்த்த எதிரணியினர் புதிது புதிதான யோசனைகளுடன் வந்து செயல்படுத்துகின்றனர் என்பதைப் புரிந்து கொண்டனர்.

எனவே இந்த முறை லெக் திசை பொறி வைத்துப் பிடித்தல் உத்தி எடுபடுவதன் சாத்தியம் குறைவே. மேலும் கம்பீரும் அத்தகைய உத்திகளை வகுத்தெடுக்கும் பயிற்சியாளருக்கே உரிய திறமை உடையவரா என்பது நியூஸிலாந்து தொடரிலேயே நமக்கு 0-3 முற்றொழிப்பில் தெரிந்து விட்டது. இந்த முறை கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோரின் பேட்டிங் பார்மும் ஐயத்துக்கிடமாகியுள்ளது. ராகுல் தேறுவது கடினம் என்று தெரிகிறது. மற்றபடி அனைவரும் புது வீரர்கள்.

விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தும் திறன் உள்நாட்டிலேயே காலியாகி வருவதை நியூஸிலாந்து தொடரில் பார்த்தோம், இந்த முறை ஆஸ்திரேலியாவில் நிச்சயம் அதை விடவும் கடினமாகவே இருக்கும். ஓர் இளம் அணியை வழிநடத்த ரஹானே போன்ற தலைவர் தேவை. எப்போது ரோஹித் சர்மா இல்லையோ அப்போதே விராட் கோலியை கேப்டனாக்கியிருக்க வேண்டும். விராட் கோலி மீது அப்படி என்ன வன்மமோ தெரியவில்லை. பும்ராவுக்கு கேப்டன்சி பொறுப்புச் சுமையை ஏற்றக் கூடாது. ஏற்கெனவே இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டனில் 378 ரன்களை விரட்டி இங்கிலாந்து பாஸ்பால் அதிரடியில் வென்ற போது பும்ரா ஒன்றும் புரியாமல் விழித்ததைப் பார்த்தோம். குறைந்தது அஸ்வினிடமாவது கேப்டன்சியைக் கொடுக்க வேண்டும்.

இந்த முறை ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை ஒருகைப் பார்ப்பது என்ற முடிவில் திட்டவட்டமாக இருக்கின்றனர், அத்தகைய திட்டமிடலையும் திண்ணத்தையும் உடைக்கும் அதிசய வீரர் யாராவது இந்தத் தொடரில் இந்தியாவில் உருவாக வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தால்... கொஞ்சம் கடினமாகத்தான் உள்ளது. இருப்பினும் பொறுத்திருந்து பார்ப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்