நார்டிக் நாடு என அழைக்கப்படும் 3,30,000 மக்கள் தொகையைக் கொண்ட ஐஸ்லாந்து அணி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறை. இதன் மூலம் குறைந்த மக்கள் தொகையை கொண்ட நாடு ஒன்று முதன்முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பெருமையை பெற்றுள்ளது. ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த அந்த அணி தகுதி சுற்றில் 10 ஆட்டங்களில் 7 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்விகளுடன் 22 புள்ளிகள் குவித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து ரஷ்ய உலகக் கோப்பைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. தகுதி சுற்று ஆட்டங்களில் அந்த அணி 16 கோல்கள் அடித்த நிலையில் 7 கோல்கள் வாங்கியது.
தனது அசாத்திய திறனால் தகுதி சுற்றில் முதன்மை அணியாகக் கருதப்பட்ட பலம் வாய்ந்த குரோஷியா அணியையே பிளே ஆஃப் சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளியது ஐஸ்லாந்து. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி கால்பந்து உலகுக்கே அதிர்ச்சி கொடுத்திருந்தது ஐஸ்லாந்து அணி.
அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ஐஸ்லாந்து அணியின் வெற்றிக்கு கால் இறுதியில், பிரான்ஸ் அணி முட்டுக்கட்டை போட்டிருந்தது. ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் ஐஸ்லாந்து அணி கடினமான ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் அர்ஜென்டினா, நைஜீரியா, குரோஷியா அணிகள் உள்ளன. ஒருவகையில் ஐஸ்லாந்து அணி இடம் பெற்றுள்ள பிரிவு ‘டெத் ஆப் குரூப்’ என்றே சொல்லலாம். அந்த அணி முதல் சுற்றை கடந்தால் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியை சந்திக்கக்கூடும். பலம் பொருந்திய பிரான்ஸ் அணி, யூரோ கால்பந்து தொடரில் ஐஸ்லாந்து அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்லாந்து அணி 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை நூலிழையில் நழுவ விட்டிருந்தது. தனது பிரிவில் 2-வது இடம் பிடித்த ஐஸ்லாந்து அணி பிளே ஆஃப் சுற்றில் குரோஷியாவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருந்தது. ஆனால் இம்முறை தகுதி சுற்றில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது.
ரஷ்ய உலகக் கோப்பை தொடருக்கான ஐஸ்லாந்து அணியில், யூரோ கோப்பையில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் கில்பி சிகுர்ட்ஸன், அரோன் குனர்சன். தாக்குதல் ஆட்டம் மேற்கொள்வதில் அசத்தும் நடுகள வீரரான கில்பி சிகுர்ட்ஸன் (28), கடந்த மார்ச் மாதம் எவர்டன் கிளப் அணிக்காக விளையாடிய போது முழங்காலில் காயம் அடைந்தார். எனினும் உலகக் கோப்பை தொடரில் ஜூன் 16-ம் தேதி அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக அவர், முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என அணி நிர்வாகம் நம்பிக்கைக் கொண்டுள்ளது.
மக்கள் தொகைக்கும் திறமைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என நிரூபித்துள்ள ஐஸ்லாந்து அணி சர்வதேச கால்பந்து உலகில் தன்னை வலுவாகவே நிலைப்படுத்திக் கொண்டுள்ளது. அந்த அணியானது தனிப்பட்ட வீரர்களின் திறனை மட்டும் எப்போதும் சார்ந்திருப்பதில்லை. அந்த அணியின் முக்கிய வலிமையே வீரர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவதுதான்.
இந்த பிணைப்பு வீரர்களுக்குள் மட்டும் இல்லை அதை தாண்டி ரசிகர்கள் மட்டத்திலும் உள்ளது. கால்பந்து வீரர்களை உற்சாகப்படுத்துவதில் அந்நாட்டு ரசிகர்களுக்கு நிகர் யாருமில்லை என்றுதான் கூற வேண்டும்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு யூரோ கால்பந்து தொடரில் ஐஸ்லாந்து அணி வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அந்நாட்டு ரசிகர்கள் சுமார் 33 ஆயிரம் பேர் போட்டி நடைபெற்ற பிரான்ஸ் நாட்டுக்கு படையெடுத்தனர். இது அந்நாட்டு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் ஆகும். மைதானத்தில் அவர்கள் எழுப்பும் ‘வைகிங் கிளாப்’ மிகவும் பிரபலமானது. யூரோ கோப்பைக்கே அப்படி என்றால் இம்முறை உலகக் கோப்பைத் தொடருக்கு சொல்லவா வேண்டும்..
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago