ஜோகன்னஸ்பர்க்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெபர்காவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பதிலடி கொடுத்த தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசி மற்றும் 4-வது போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. 3-வது ஆட்டத்தில் 3-வது வீரராக களமிங்கிய இந்திய அணியின் இளம் நட்சத்திரமான திலக் வர்மா 56 பந்துகளில் 107 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். அபிஷேக் சர்மாவும் இழந்த பார்மை மீட்டெடுத்திருந்தார். அவர், 25 பந்துகளில், 50 ரன்களை விளாசி சிறந்த தொடக்கம் அமைத்துக் கொடுத்திருந்தார்.
அதேவேளையில் முதல் போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக 2 முறை ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி உள்ளார். கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோரிடம் இருந்து மட்டை வீச்சில் குறிப்பிடும்படியான செயல் திறன் வெளிப்படவில்லை. இதில் ரிங்கு சிங் 3 ஆட்டங்களிலும் கூட்டாக 28 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.
» ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் பி.வி.சிந்து தோல்வி
» அதிபர் தேர்தலுக்கு பிறகு அமெரிக்காவில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்
பேட்டிங்கில் அவரை சுழற்சி முறையில் 6 அல்லது 7-வது இடத்தில் களமிறக்கப்படுவதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. எனினும் தற்போதைய தொடரில் அவர், 34 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். டி 20 வடிவில் அதிலும் இறுதிக்கட்ட பகுதியில் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு ரன் சேர்க்க வேண்டிய நிலையில் ரிங்கு சிங்குவின் செயல் திறன் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும். இதனால் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும். பந்து வீச்சை பொறுத்தவரையில் 3-வது ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறியது. 219 ரன்களை குவித்த போதிலும் கடைசி வரை போராடியே வெற்றியை வசப்படுத்த முடிந்திருந்தது.
கடைசி 4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 77 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மார்கோ யான்சன் இந்திய அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கி கடும் அச்சுறுத்தல் கொடுத்தார். ரவி பிஷ்னோய் வீசிய 17-வது ஓவரின் கடைசி இருபந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்ட அசத்திய மார்கோ யான்சன், ஹர்திக் பாண்டியா வீசிய 19-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 26 ரன்களை வேட்டையாடினார்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு நம்பிக்கை துளிர்விட்டது. அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 2-வது பந்தை சிக்ஸருக்கு விளாசிய மார்கோ யான்சன் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர், 17 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் விளாசிய 54 ரன்கள் இந்திய அணிக்கு இறுதிக்கட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியது. மார்கோ யான்சன் ஆட்டமிழந்த பின்னர்தான் இந்திய அணியின் உறுதி செய்யப்பட்டது. எஞ்சி 3 பந்துகளில் 6 ரன்கள் சேர்த்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் 50 ரன்களுக்கு மேல் தாரைவார்த்திருந்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். போட்டி நடைபெறும் வாண்டரர்ஸ் மைதானம் இந்திய அணிக்கு கடந்த காலங்களில் பல்வேறு வெற்றிகளை கொடுத்துள்ளது. 2007-ம் ஆண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
கடந்த 2023-ம் ஆண்டு இங்கு நடைபெற்ற இருதரப்பு டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை இந்தியா வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் விளாசிய சதத்தின் உதவியுடன் இந்திய அணி 201 ரன்கள் குவித்திருந்தது. இந்த இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்க அணி 95 ரன்கள் ஆட்டமிழந்தது. இந்த வெற்றியால் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 1-1 என டிரா செய்திருந்தது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago