3-வது டி20 ஆட்டத்தில் இன்று மோதல்: பதிலடி தரும் முனைப்பில் இந்திய அணி

By செய்திப்பிரிவு

செஞ்சூரியன்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் நகரில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. டர்பன் நகரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து கெபர்ஹாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுத்தது. 125 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் டி20 தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று இரவு செஞ்சூரியன் நகரில் உள்ள சூப்பர் ஸ்போர்ட்பார்க் மைதானத்தில் 3-வது டி20 ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த மைதானத்தில் இந்திய அணி இதற்கு முன்னர் ஒரே ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடிய உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.

அந்த ஆட்டத்தில் விளையாடி வீரர்களில் ஹர்திக் பாண்டியா மட்டுமே தற்போதைய இந்திய அணியில் உள்ளார். கெபர்கா ஆடுகளம் போன்றே சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஆடுகளத்திலும் பந்துகள் விரைவாகவும், நன்கு பவுன்ஸ் ஆகிவரும் என கூறப்படுகிறது. 2-வது போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். இதனால் முதல் போட்டியில் 202 ரன்களை வேட்டையாடிய இந்திய அணியால் 2-வது போட்டியில் 124 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. கெபர்கா ஆடுகளத்தின் தன்மையே சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஆடுகளமும் கொண்டிருக்கக்கூடும் என்பதால் இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கக்கூடும்.

இந்திய அணியின் பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளது. முதல் ஆட்டத்தில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன் 2-வது ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, பார்மின்றி தவிப்பது அணியின் பலவீனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரிடம் இருந்தும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டைவீச்சு வெளிப்படவில்லை. ஹர்திக் பாண்டியா கடந்த ஆட்டத்தில் 45 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார்.

பவர் ஹிட்டரான அவர், 28 பந்துகளை சந்தித்த பிறகே முதல் பவுண்டரியை அடித்தார். தொடர்ந்து கடைசி 6 பந்துகளிலும் அவரிடம் இருந்து அதிரடியான செயல்பாடு இல்லாமல் போனது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டுமானால் இவர்கள் 3 பேருடன் தொடக்க பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோரும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

இதேபோன்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சும் எழுச்சி காண வேண்டியது அவசியம். முதல் போட்டியில் 25 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றிய இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், 2-வது ஆட்டத்தில் 41 ரன்களை தாரைவார்த்தார். அதிலும் 2-வது ஆட்டத்தில் இறுதிக்கட்டத்தில் 2 ஓவர்களை வீசிய அவர், 28 ரன்களை விட்டுகொடுத்தது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அநேகமாக இன்றைய ஆட்டத்தில் யாஷ் தயாள் அல்லது வைஷாக் விஜயகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.

சுழற்பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதில் வருண் சக்கரவர்த்தி முதல் போட்டியில் 3 விக்கெட்களையும், 2-வது போட்டியில் 5 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார். அதேவேளையில் ரவி பிஷ்னோய் இரு ஆட்டங்களிலும் கூட்டாக 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

இந்த சுழல் கூட்டணி மீண்டும் ஒரு முறை தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யக்கூடும். கடந்த ஆட்டத்தில் இறுதிக்கட்ட ஓவர்களில் அக்சர் படேலை சுழற்பந்து வீச்சில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சரியாக பயன்படுத்தவில்லை. இது விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இன்றைய ஆட்டத்தில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படக்கூடும்.

தென் ஆப்பிரிக்க அணியிலும் பேட்டிங் பிரச்சினை உள்ளது. சீனியர் வீரர்களான கேப்டன் எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன் ஆகியோரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை.

2-வது ஆட்டத்தில் இறுதிக்கட்ட ஓவர்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜெரால்டு கோட்ஸி ஆகியோர் பொறுப்புடன் விளையாடியதன் காரணமாக வெற்றியை பெறமுடிந்தது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதில் தென் ஆப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை கவனம் செலுத்தக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்