முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

By செய்திப்பிரிவு

டர்பன்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றிருந்தது.

இந்த தொடரின் கடைசி ஆட்டத்தில் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 111 ரன்களை விளாசி அசத்தியிருந்தார். இதனால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். அதேவேளையில் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா நெருக்கடியுடன் களமிறங்குகிறார். ஏனெனில் கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்திய அபிஷேக் சர்மா, அதன் பின்னர் பங்கேற்ற 6 ஆட்டங்களில் முறையே 0, 10, 14, 16, 15, 4 ரன்களில் நடையை கட்டினார்.

அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் அபிஷேக் சர்மா. இதே நிலையில் தான் திலக் வர்மாவும் உள்ளார். 2023-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது அறிமுக தொடரில் கவனம் ஈர்த்த திலக் வர்மாவிடம் இருந்து அதன் பின்னர் பெரிய அளவிலான பங்களிப்பு வெளிப்படவில்லை. கடைசியாக விளையாடிய 12 ஆட்டங்களில் திலக் வர்மா ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கிய திலக் வர்மா அதன் பின்னர் தற்போதுதான் சர்வதேச டி20-ல் விளையாட உள்ளார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா, வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் 5 விக்கெட்களை கைப்பற்றிய வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கும் தென் ஆப்பிரிக்க தொடர் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. அதேவேளையில் அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், விஜயகுமார் வைஷாக் மற்றும் யாஷ் தயாள் ஆகியோரை உள்ளடக்கிய புதிய வேகப்பந்து வீச்சு குழு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதை தேர்வுக்குழுவினர் உன்னிப்பாக கவனிக்கக்கூடும்.

இதில் அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஏற்கெனவே விளையாடி வருகின்றனர். விஜய்குமார் வைஷாக், யாஷ் தயாள் ஆகியோர் உள்ளூர் போட்டியில் வெளிப்படுத்திய உயர்மட்ட செயல் திறனை தற்போது சர்வதேச அரங்கில் பிரதிபலிக்கச் செய்ய ஆயத்தமாக உள்ளனர். ஆல்ரவுண்டரான ராமன்தீப் சிங் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

சூர்யகுமார் யாதவ், ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகியோர் மட்டுமே சீனியர் வீரர்களாக அணியில் உள்ளனர். நியூஸிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என படு தோல்வி அடைந்திருந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்த தோல்வியின் காயங்களுக்கு மருந்து போடும் அளவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் தீவிரம் காட்டக்கூடும்.

அதேவேளையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவிடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் ஆப்பிரிக்க அணி செயல்படக்கூடும்.

நேரம்: இரவு 8.30; நேரலை: ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்