தொலைந்து போன இந்திய அணியின் தற்காப்பு ஆட்டம்!

By பெ.மாரிமுத்து

நியூஸிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-0 என முழுமையாக இழந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

பெங்களூரு ஆடுகளத்தில் வானிலையும், டாஸில் எடுத்த முடிவும் எதிர்வினையாக அமைந்ததாக தோல்விக்கான காரணத்தை கற்பித்தது இந்திய அணி. தொடர்ந்து புனே டெஸ்ட் போட்டியில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான மிட்செல் சாண்ட்னரிடம் இந்திய அணி சரணடைந்தது. அப்போது ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை மேற்கொண்டால் மட்டுமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற காரணம் முன்வைக்கப்பட்டது. ஆனால் மும்பையில் அடைந்த தோல்விக்கு எந்த சாக்குப் போக்கும் கூறமுடியவில்லை.

அதேவேளையில் நினைத்துப் பார்க்க முடியாத சாதனையை நியூஸிலாந்து நிகழ்த்தி காட்டியுள்ளது. இந்திய மண்ணில்எந்த அணியும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது இல்லை. இந்த வரலாற்று சாதனை நியூஸிலாந்து அணிக்கு என்றைக்கும் பசுமை மாறாமல் இருக்கும். அந்த அணி கையில் எடுத்தது இரு ஆயுதங்கள் மட்டுமே. ஒன்று பேட்டிங்கில் ஸ்வீப், ரிவர்ஸ்ஸ்வீப் ஷாட்களை திறம்பட மேற்கொண்டுரன்கள் சேர்த்தது. மற்றொன்று இந்திய அணி பேட்டிங்கை எந்த கண்ணோட்டத்தில் விளையாடுகிறது என்பதற்கு தகுந்தவாறு சுழற்பந்து வீச்சை கையாண்ட விதம்.

இந்தத் தொடர் முழுவதுமே இந்திய அணியின் பேட்ஸ்மேன்களிடம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அணுகும் பாரம்பரியமானதற்காப்பு ஆட்டம் எந்த ஒரு கட்டத்திலும் வெளிப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை. கடந்த பல தசாப்தங்களாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சில் அபாரமாக விளையாடி வந்துள்ளனர். சுழற்பந்து வீச்சுக்குஎதிராக அவர்களது ஆட்ட நுணுக்கங்களும், கால் நகர்வுகளும் நேர்த்தியாகவும், ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமையும். ஆனால் இந்த நிலைமை சமீபகாலமாக தலைகீழாக மாறி உள்ளது.

கேப்டன் ரோஹித் சர்மா, குறுகிய வடிவிலான போட்டியில் விளையாடுவது போன்றே 6 இன்னிங்ஸிலும் பேட்டிங் செய்தார்.அதற்கான பலனை அவர், அனுபவித்துள்ளார். மற்றொரு சீனியரான விராட் கோலி, சுழற்பந்து வீச்சில் தடுமாறியதை என்னவென்று சொல்வது? கே.எல்.ராகுல் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த சர்பிராஸ் கான் பொறுப்பின்றி செயல்பட்ட விதம் அலட்சிய போக்கை பிரதிபலித்தது.

இந்திய அணியின் டாப் ஆர்டர், மிடில்ஆர்டர், பின் வரிசை என அனைத்து பேட்ஸ்மேன்களும் சொந்த மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பந்துகள் திரும்புவதை கணித்து விளையாட முடியாமல் போனது ஏன்? என்ற கேள்விகள் இன்னும் தொடர்கின்றன. இதற்கு காரணம் அணியில் உள்ள முன்னணி வீரர்கள் சர்வதேச போட்டிகளில் நீண்ட காலம் விளையாடாமல் இருந்துவிட்டு பின்னர் ஒன்றிரண்டு வலை பயிற்சியில் கலந்து கொண்டு நேரடியாக போட்டியில் பங்கேற்பதுதான் என்ற கருத்தும் உள்ளது.

இதை சச்சின் டெண்டுல்கரும் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில், “நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் 3-0 என தோல்வி அடைவதை ஏற்றுக்கொள்வது கடினம்தான். எனினும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது போட்டிக்கு தயாராவதில் தேக்க நிலையா, மோசமான ஷாட் தேர்வா அல்லது போட்டிக்கான பயிற்சி இல்லாததா?. என்ற கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை எப்படி பாதுகாத்துக் கொண்டு ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதை அறியாமல் செயல்பட்டனர். அனைவரும் விரைவுகதியில் ரன்கள் சேர்ப்பதிலேயே முழு கவனம்செலுத்தினர். டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில் அதிரடி ஆட்ட அணுகுமுறைஎல்லா நேரங்களிலும் கைகொடுக்காது. இந்தஅணுகுமுறையை கையில் எடுத்த இங்கிலாந்து அணி தனக்கு தானே சூடுவைத்துக் கொண்டதை அனைவரும் அறிவார்கள்.

பாரம்பரியம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து அணி அதன் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் மண்ணிலும் படுதோல்விகளை சந்தித்தது. இந்திய அணியும் இந்த நிலையை நோக்கி பயணிக்கிறதோ? என்ற அச்சமும் தற்போது எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது பெரிய அளவிலான பாதிப்பை உருவாக்கியது. கடந்த 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்காமல் ஆதிக்கம் செலுத்தி வந்ததில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது சுழற்பந்து வீச்சு பிரதான பங்கு வகித்தது.

ஆனால் இம்முறை இவர்களது சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் கணிசமான அளவில் ரன்கள் சேர்த்து பதிலடி கொடுத்தனர். இதற்கு விடை கண்டறிய இந்திய சுழற்பந்து வீச்சு கூட்டணி தவறியது. அஸ்வின் இந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக கைப்பற்றியது 9 விக்கெட்கள் மட்டுமே. அதேவேளையில் நியூஸிலாந்து அணியின் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான கிளென் பிலிப்ஸ் 8 விக்கெட்களை சாய்த்திருந்தார்.

மாறாக வாஷிங்டன் சுந்தர் 16 விக்கெட்களை கைப்பற்றி ஆறுதல் அளித்தாலும் அவரது செயல் திறன் வெற்றிக்கான பங்களிப்பை கொடுக்கவில்லை. இது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு வியூகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இது புறம் இருக்க பெங்களூரு மைதானத்தில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சாதித்த நிலையில் பும்ரா, சிராஜ் ஆகியோரால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாதது சோகமாக அமைந்தது.

கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற 2-வது டெஸ்ட் தொடரிலேயே கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். கடந்த மாதம் இலங்கை மண்ணில் நடைபெற்ற ஒரு நாள் போட்டித் தொடரை இழந்த நிலையில் தற்போது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் படுதோல்விகளை சந்தித்துள்ளது கூடுதல் அழுத்தத்தை உருவாக்கி உள்ளது.

ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர் மற்றும் அணியில் உள்ள மற்ற சீனியர் வீரர்கள் அனைவருக்கும் அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் கடும் சோதனைக் களமாக இப்போதே மாறியுள்ளது. ஏனெனில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தோல்விகளால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவது கடினமாகி உள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடைபெற உள்ள 5 டெஸ்ட் போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இறுதிப் போட்டியில் கால்பதிக்க முடியும்.

இதில் ஒரு ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தாலும் இந்திய அணி மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க நேரிடும். இதனால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இந்திய அணி நெருக்கடியுடனே அணுகுகிறது. அநேகமாக இந்தத் தொடர் இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்களின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவு செய்யக்கூடியதாக கூட இருக்கலாம். ஏனெனில் இந்தத் தொடருடன் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியை நிறைவு செய்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகால சுழற்சி ஜூன் மாதத்துக்கு பிறகே தொடங்கும்.

இதில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் விளையாடுவது சந்தேகம்தான். ஏனெனில் ரோஹித் சர்மாவுக்கு தற்போது 37 வயதாகிறது. அஸ்வின் 38 வயதை கடந்துவிட்டார். விராட் கோலி 36 வயதை தொட்டுவிட்டார். ரவீந்திர ஜடேஜா 35 வயதை கடந்துள்ளார். ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாத சூழ்நிலை உருவானால் சீனியர்கள் வீரர்கள் தங்களது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்கால வாழ்க்கை தொடர்பாக முக்கிய முடிவை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படக்கூடும்.

ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர் மற்றும் அணியில் உள்ள மற்ற சீனியர் வீரர்கள் அனைவருக்கும் அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் கடும் சோதனைக் களமாக இப்போதே மாறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்