நியூஸிலாந்துக்கு எதிராக சற்றும் எதிர்பாராத ஒயிட்வாஷ் 3-0 தோல்வியினால் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது என்றே பொருள். ஏனெனில் ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலிய மண்ணில் இந்த இந்திய அணியை வைத்துக் கொண்டு 4-0 என்று வெற்றி பெற்றால் இறுதிக்குள் நுழையலாம் என்ற நிலை.
147 ரன்களை சொந்த மண்ணில் எடுத்து வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைகிறது என்றால் கவுதம் கம்பீர் உள்ளிட்டோரின் அணுகுமுறை மீது கேள்வி எழுவது நியாயமே.
இந்தத் தோல்வி கண்டு ரசிகர்களின் ஏகோபித்த கோபங்களை புரிந்து கொள்ள முடிகிறது. கம்பீரின் அவசரக்குடுக்கைத் தனமான முதிர்ச்சியின்மை, மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் பேட்டிங்கை மறந்து போனது, அஸ்வின் தன் இறுதிக் கட்டத்தில் பந்தைத் திருப்ப கஷ்டப்படுவது என்று அவர்கள் மீது விரமர்சன தாக்குதல் வருகின்றன. புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அடிப்படையான பிரச்சினை என்ன என்பது குறித்து அவர்களுக்கு நிதானமான பார்வை இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உணர்ச்சிப்பூர்வமாக சிந்திப்பவர்கள். உடனடி முடிவுகளுக்கு வருபவர்கள்.
ஆனால் இந்திய அணியின் பிரச்சினை ஏதோ சில வீரர்களை மாற்றினால் சரியாகி விடும், பயிற்சியாளரை மாற்றினால் சரியாகி விடும் என்பதல்ல. டி20 கிரிக்கெட்டின் தாக்கம் கால் நகர்த்தல்களின் நுணுக்கங்களையும் பொறுமையாக டெக்னிக்குடன் ஆடி ஆதிக்கம் செலுத்துவதையும் காலி செய்து விட்டது. பாட்டம் ஹேண்ட் என்று சொல்லப்படும் வலது கை பேட்டர்களின் ஷாட் ஆடுகையில் வலது கை அழுத்தமும், இடது கை பேட்டர்களின் இடது கை அழுத்தமும் அதிகம் இருப்பதால்தான் ஸ்பின் பந்து வீச்சை எதிர்கொள்வதற்கான டிபன்ஸ் ஆட முடியாமல் போகிறது.
» ‘விவேகம்’ தோல்விக்கான காரணம்: ஒளிப்பதிவாளர் வெற்றி வெளிப்படை
» பழங்கால நாணயங்களுக்கு அதிக விலை; பேஸ்புக்கில் மோசடி - புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை
மேலும், இப்போது டி20 தாக்க பேட்டர்கள் ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்களின் கையைப் பார்த்து ஆடுவதில்லை, பந்து பிட்ச் ஆன பிறகோ அல்லது முன் கூட்டியே தீர்மானித்தோதான் ஆடுகின்றனர். இது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் கோரும் கடின உழைப்புக்கு எதிரானது. ஸ்பின் ஆடும் திறமை காணாமல் போனதற்கு இன்னொரு காரணம், உள்நாட்டுக் கிரிக்கெட்டைப் புறக்கணிப்பதே. ஐபிஎல் போன்ற பணக்கார பொழுதுபோக்கு மூன்றாம் தர கிரிக்கெட்டுக்குத் தரும் முக்கியத்துவத்தை வீரர்கள் உள்நாட்டுக் கிரிக்கெட்டுக்குத் தருவதில்லை. பிசிசிஐ-யும் உள்நாட்டுக் கிரிக்கெட்டை ஒரு டோக்கனிசமாக, அடையாளமாக வைத்திருக்கிறதே தவிர முன்பு போல் உள்நாட்டு சிகப்புப் பந்து கிரிக்கெட்டின் தரமும் பிட்ச்களும் இல்லை.
அடுத்ததாக, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற பெருந்தலைகள், பெருந்தனக்காரர்கள் அணியில் நீடிக்குமாறு ஐபிஎல் ஸ்பான்ஸர்கள் நிர்பந்திப்பதும் ஒன்று என கூறப்படுகிறது. விராட் கோலியின் எம்.ஆர்.எஃப். ஸ்பான்ஸர்ஷிப் 2025 வரை உள்ளது. 2017-லேயே 8 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். 2018-ல் ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் இட்டுள்ளார். 2021-ல் ஹெர்பா லைஃப் தயாரிப்புகளுக்கான விளம்பரதாரராக ஒப்பந்திக்கப்பட்டுள்ளார். அவுடி, வோல்வோலைன் போன்ற நிறுவனங்களும் கோலிக்கு ஸ்பான்ஸர் செய்கின்றன. ஒவ்வொன்றும் மில்லியன் டாலர் ஒப்பந்தம். சும்மா அணியிலிருந்து இவரையோ, ரோஹித் சர்மாவையோ தூக்க முடியுமா? இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
பயிற்சியாளர் கம்பீரின் முதிர்ச்சியின்மை: கவுதம் கம்பீர் பயிற்சிப் பொறுப்புக்குத் தகுதியானவரா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிராக தொடரை இழந்தது இந்திய அணி. இப்போது வரலாறு காணாத டெஸ்ட் முற்றொழிப்புத் தோல்வி. இவர் மெக்கல்லமுடன் சேர்ந்து கொண்டு கேகேஆர்-ல் செய்ததையெல்லாம் ஒரு பெரிய புரட்சி என்று இந்திய டெஸ்ட் அணிக்குப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது ஏன்? இவருக்கு என்ன பயிற்சி அனுபவம் இருக்கிறது?
அனில் கும்ப்ளே போன்ற அர்ப்பணிப்புள்ள பயிற்சியாளரையெல்லாம் விராட் கோலியின் பேச்சைக் கேட்டு ராஜினாமா செய்ய வைத்தது பிசிசிஐ. ரவி சாஸ்திரி பயிற்சியில் வெற்றிகள் பெற்று அணி ஸ்திரமடைந்தாலும் அவர் விராட் கோலியை எந்த வித விமர்சனமும் செய்யாமல், அவரது சேஷ்டைகளைக் கண்டு கொள்ளாமல் விடுத்து அவரது ஈகோவுக்கு தூண்டுகோலராக இருந்ததுதான் நடந்தது. ராகுல் திராவிட் கொஞ்சம் விராட் கோலியின் பேட்டிங்கை டெஸ்ட் பாதைக்குத் திருப்ப முயற்சித்தார். ஆனால், விராட் கோலியெல்லாம் சொல் பேச்சு கேட்கும் டைப் அல்ல என்பது அவரது நடத்தைகளின் வரலாறு மூலம் கண்கூடு. கம்பீர் மட்டும் இவரைக் கட்டுப்படுத்த முடியுமா? மீண்டும் அவரை டெஸ்ட் பேட்டிங் பாதைக்குத் திருப்ப முடியுமா என்பதுதான் கேள்வி.
அனில் கும்ப்ளே கோலியிடம் ஒரு நல்ல கேப்டன்சி திறமையை வளர்த்து விட்டார். இலங்கை தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ரங்கனா ஹெராத்திடம் மடிந்தோம், பிறகு 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றியது கும்ப்ளே பயிற்சிக்காலத்தில்தான். அந்த ரங்கனா ஹெராத் தான் இப்போது நியூஸிலாந்தின் ஸ்பின் ஆலோசகர். பெங்களூரு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சு சாதக ஆட்டக்களம் என்று தெரிந்தும் முதலில் பேட் செய்ய ரோஹித் முடிவெடுத்தாலும் அதை கம்பீர் தடுத்திருக்க வேண்டாமா? ஏனெனில் இவர்தான் பேட்டிங் முடிவையே எடுத்தவர்.
கேப்டனுக்கு உத்திகளை வகுத்துக் கொடுப்பதுதான் பயிற்சியாளரின் வேலை, அதையெல்லாம் செய்யாமல், எல்லோரையும் அடித்து ஆடு என்று பொத்தாம் பொதுவாக ஒரு கட்டளையிட்டால் எப்படி உருப்படும்? உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ரிச்சர்ட்ஸ், ஒரு சச்சின், ஒரு லாரா, ஒரு சேவாக், ஒரு ஜெயசூர்யா, ஒரு கில்கிறிஸ்ட் ஒரு காலிஸ், ஒரு பாண்டிங், ஒரு ரிஷப் பந்த் தான் இருக்க முடியும். அனைவரையும் அப்படி ஆடப்பணிக்கக் கூடாது. சர்பராஸ் கான் எல்லாம் பாவம் கிரிக்கெட் கனவுகளைச் சுமந்து கொண்டு எங்கிருந்தோ வந்து இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் பல இடையூறுகளைக் கடந்து இடம் பிடித்துள்ளார். அவரை செட்டில் ஆக விடாமல், டவுன் ஆர்டர்களை இஷ்டத்துக்கு மாற்றுவது என்று செய்தால் என்ன பொருள்? பாவம் ஃபுல்டாஸைப் போய் ஸ்வீப் ஆடப்போய் கேட்ச் ஆகி அவர் வெளியேறுகிறார்.
இங்குதான் தோனி போன்ற ஒரு சுயநலம் தேவை. ஆரம்பக் காலத்தில் தோனியை வைத்து இப்படி ஆக்ரோஷம் காட்ட நினைத்த கேப்டன்களுக்கெல்லாம் தோனி செவி சாய்க்கவில்லை, ‘இது என் கிரிக்கெட் கரியர்! இதில் நான் நீடிக்க வேண்டும்.. உங்கள் கற்பனைகளுக்கும் எண்ணங்களுக்கும் நான் ஆட முடியாது’ என்பதில் தெளிவாக இருந்தார். அப்படித்தான் இப்போது ஜெய்ஸ்வாலும், சர்பராஸ் கானும் இருக்க வேண்டும். ஜெய்ஸ்வால் ரிஷப் பந்த் ஆக முடியாது, சர்பராஸ் கான் சச்சின் டெண்டுல்கர் ஆக முடியாது.
கம்பீரின் முதிர்ச்சியற்ற அணுகுமுறையினால் வேகப்பந்து வீச்சு, ஸ்பின் பவுலிங் இரண்டிற்கும் எதிராக உடைந்து நொறுங்கக் கூடிய அணியாக இந்திய அணி இப்போது உள்ளது. இவர் போய் ஆஸ்திரேலியாவில் என்ன செய்ய முடியும்? இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. புஜாரா, ரஹானே போன்றவர்கள் இன்னமும் நன்றாகத்தான் ஆடி வருகின்றனர், அவர்களை மீண்டும் அழைத்தால் ஒன்றும் பிற்போக்குக் கிடையாது. வாஷிங்டன் சுந்தரிடம் இருக்கும் தன்னம்பிக்கையான ஆட்டம் இந்திய மூத்த வீரர்களிடத்தில் ஏன் இல்லாமல் போனது?
பயிற்சியாளர் என்பவர் ஒரு சிறந்த அணியையும் அதற்கான தலைமைத்துவ வீரர்களையும் உருவாக்க வேண்டும். அதுதான் அவர் வேலை. ஆக்ரோஷமாக ஆடுவதா, சூழ்நிலைக்கேற்ப ஆடுவதா என்பதெல்லாம் களத்தில் வீரர்கள் தங்கள் அனுபவத்தின் வாயிலாக எடுக்கும் முடிவைச் சார்ந்தது. ஒரு நபர் எடுக்கும் முடிவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒரு அணியை வழிநடத்துவது வீழ்ச்சியில்தான் போய் முடியும். அத்தகைய வீழ்ச்சிதான் இது.
பிசிசிஐ செய்ய வேண்டியது என்ன? முதலில் சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லஷ்மண், அனில் கும்ப்ளே தலைமையில் ஒரு குழுவை அமைத்து ‘Performance Scrutiny' செய்ய வேண்டும். ஒவ்வொரு தொடர் முடிவிலும் இவர்கள் அளிக்கும் அறிக்கையின் படி அடுத்தத் தொடருக்கு அணித்தேர்வு அமைய வேண்டும். அணித்தேர்வில் முதலில் கம்பீர் வந்து அமருவதைத் தடுக்க வேண்டும். பயிற்சியாளரின் அணுகுமுறையை பகுத்தாய்ந்து அவருக்கு சிலபல ஆலோசனைகளை இந்தக் குழு வழங்க வேண்டும். முதலில் நல்ல ஸ்பின் பவுலிங் பயிற்சியாளரை அணியில் சேர்க்க வேண்டும்.
அணியில் மரபு ஸ்பின் பவுலிங்கை வீசும் ஆஃப் ஸ்பின்னர், லெக் ஸ்பின்னர், இடது கை ஸ்பின்னர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஸ்பின் பந்து வீச்சை சிறப்பாகக் கையாளும் ஃபுட் வொர்க்கை பயிற்சி அளிக்கும் பேட்டிங் பயிற்சியாளர்கள் தேவை.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போல் ஒரு தனித்த டி20 அணியை உருவாக்க முயற்சிகள் செய்ய வேண்டும். அதில் டெஸ்ட் வீரர்கள் இடம்பெறக்கூடாது. ஒருநாள் போட்டிகளுக்கு கலவையான அணியை உருவாக்க வேண்டும், டெஸ்ட் வீரர்கள் என்று ஒரு தனித்த அணியை உருவாக்க வேண்டும். இந்திய அணியில் இருந்த ஒரே டெஸ்ட் வீரர் புஜாராவை ஏதோ பழைய பஞ்சாங்கம் என்று வெறுத்து ஒதுக்கியதுதான் இன்றைய பிரச்சனைகளுக்குக் காரணம்.
பாகிஸ்தானுடன் நடுநிலை மைதானங்களிலாவது டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடும் முடிவை எடுத்தால்தான் வீரர்களின் திறமையைச் சோதித்து சீர்தூக்கிப் பார்க்க முடியும். வீரர்களுக்கும் பாகிஸ்தானுடன் ஆடும் அழுத்தம் அவர்களை ஒரு சிறந்த டெஸ்ட் வீரர்களாக உருவாக்கும் சாத்தியம் அதிகமாகும். இது இரண்டு அணிகளுக்குமே நல்லது. இப்போது இலங்கை அணி ஓரளவுக்கு மீண்டு வருகிறது, ஆனால் ஆதிக்கத்திலிருந்த இந்திய அணி சரியத் தொடங்கி வருகிறது. இந்தச் சரிவு தொடர்கதையாகி விடாமல் தடுக்க ஐபிஎல் கிரிக்கெட், அதன் ஸ்பான்சர்கள், வீரர்களுடனான அவர்களது நெக்சஸ் ஆகியவற்றை உடைத்தெறிய வேண்டும்.
உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்த அதில் நன்றாக ஆடும் வீரர்களுக்குத்தான் டெஸ்ட்டில் வாய்ப்பளிக்க வேண்டும். ஐபிஎல் பணமுதலைகளுக்குச் சார்பாக டெஸ்ட் அணியைத் தேர்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். ஐபிஎல் தொடரில் இருக்கும் ஃபார்மை, ரன்களை, விக்கெட்டுகளைக் கொண்டு டெஸ்ட் அணியைத் தேர்வு செய்வது பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.
உதாரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சரை ஒரு வீரர் ஒரே ஓவரில் 3 சிக்சர்களுடன் 25 ரன்களை அடித்து விடுகிறார் என்றால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சரை ஆடத் தகுதியுடையவர் ஆவாரா? என்பதுதான் கேள்வி. அங்கு 25 ரன்களை ஒரே ஒவரில் எடுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோப்ரா ஆர்ச்சர் ஹெல்மெட்டைப் பதம் பார்த்து 2 பந்துகளில் வீழ்த்தி விடும் சாத்தியம்தான் அதிகம். ஆகவே ஐபிஎல் கிரிக்கெட் ஒரு தனி ரகம் என்று விட்டு விட வேண்டும், சர்வதேச கிரிக்கெட் வேறு ஒரு ரகம் என்று தரம்பிரித்துப் பார்க்கப் பழக வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago