புனே: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 45.3 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி 79.1 ஓவரில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டேவன் கான்வே 76, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6, ஷுப்மன் கில் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மிட்செல் சாண்ட்னரின் சுழற்பந்து வீச்சில் 45.3 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷுப்மன் கில் 72 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் சாண்ட்னரின் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 9 பந்துகளை சந்தித்து ஒரு ரன் எடுத்த நிலையில் சாண்ட்னர் வீசிய தாழ்வான ஃபுல்டாஸ் பந்தை ஸ்வீப் ஷாட் விளையாட முயன்று போல்டானார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் கிளென் பிலிப்ஸ் பந்தை தடுப்பாட்டம் மேற்கொண்ட பேது பந்து மட்டை விளிம்பில் பட்டு சிலிப் திசையில் நின்ற டேரில் மிட்செல்லிடம் கேட்ச் ஆனது. ரிஷப் பந்த் 19 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் கிளென் பிலிப்ஸ் ஸ்டெம்புக்கு நேராக வீசிய பந்தை விளாச முயன்று போல்டானார்.
சர்பராஸ் கான் 24 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் சாண்ட்னர் பந்தை வலுவில்லாமல் அடிக்க அது மிட் ஆஃப் திசையில் நின்ற வில்லியம் ஓ’ரூர்க்கியிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ரன்களில் சாண்ட்னர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 107 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் சற்று தாக்குப்பிடித்து விளையாடிய ரவீந்திர ஜடேஜாவையும் சாண்ட்னர் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார்.
ஜடேஜா 46 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து ஆகாஷ் தீப் 6, ஜஸ்பிரீத் பும்ரா 0 ரன்களில் சாண்ட்னர் பந்தில் நடையை கட்டினர். வாஷிங்டன் சுந்தர் 18 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து அணி தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 19.3 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 53 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை சாய்த்தார். கிளென் பிலிப்ஸ் 2, டிம் சவுதி ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இந்திய அணியை 156 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் நியூஸிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 53 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 198ரன்கள் எடுத்தது. கேப்டன் டேவன் கான்வே 133 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசிய நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
டேவன் 17, வில் யங் 23, ரச்சின் ரவீந்திரா 9, டேரில் மிட்செல் 18 ரன்களில் நடையை கட்டினர். டாம் பிளண்டெல் 30, கிளென் பிலிப்ஸ் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4, ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது நியூஸிலாந்து அணி.
இந்திய வீரர்கள் சுழற்பந்து வீச்சில் தடுமாறிய நிலையில் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள், ஸ்டிரைக் ரோட்டெட் செய்தபடி இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை மேற்கொண்டு 70 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். இந்த ஷாட்களே நியூஸிலாந்து அணியின் ரன் குவிப்பில் முக்கிய பங்குவகித்தது.
புனே டெஸ்ட் போட்டியில் இன்னும் 3 நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ளது. தற்போது நியூஸிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அந்த அணி முழு அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளது. சுழலுக்கு சாதகமாக அமைந்துள்ள புனே ஆடுகளத்தில் 300 ரன்களுக்கு அதிகமான ரன்களை துரத்தி வெற்றி காண்பது என்பது அவ்வளவு எளிதானது இல்லை.
‘வாஷிங்டன் சுந்தரை பின்பற்றினேன்’ - புனே டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியின் மிட்செல் சாண்ட்னர் 7 விக்கெட்களை வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறந்த பந்து வீச்சாக அமைந்தது. இதற்கு முன்னர் அவர், 34 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றியதே சிறப்பான செயல்பாடாக இருந்தது. மிட்செல் சாண்ட்னர் கூறும்போது, “புனே டெஸ்ட் போட்டியை வெல்லும் நிலையில் இருப்பது சிறந்த உணர்வை கொடுக்கிறது. பார்ட்னர்ஷிப் முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம், அந்த வகையில் நாங்கள் சிறப்பாக செயல்பட முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த ஆடுகளத்தில் எந்த வேகத்தில் பந்துவீச வேண்டும் என நாங்கள் ஆலோசித்தோம். நேரம் செல்லச் செல்ல பந்துகளை மெதுவாக வீசும் போது சுழலத் தொடங்கியது. அதன் பின்னர் சரியான திசையை கண்டறிந்து வீசினோம். பந்து வீச்சு கோணங்களை மாற்றியும், பேட்ஸ்மேன்களை ஷாட்கள் மேற்கொள்ள தூண்டும் வகையிலும் செயல்பட்டோம். வாஷிங்டன் சுந்தர் பந்து வீசியதை பார்த்தேன். அவரைப்போன்றே செயல்பட முயற்சித்தேன். ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக சுழல்கின்றன. எங்களது நாட்டில் இதுபோன்ற ஆடுகளங்கள் கிடைக்காது” என்றார்.
முற்றுப்புள்ளி? - இந்திய கிரிக்கெட் அணி கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழக்காமல் உள்ளது. இந்த வகையில் 18 டெஸ்ட் தொடரை இழக்காமல் இந்திய அணி வலம் வருகிறது. இந்த தொடர்ச்சியான வெற்றிகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகி உள்ளது. ஏனெனில் புனேவில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் நியூஸிலாந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளது.
பறிபோகும் நிலையில் இறுதிப் போட்டி வாய்ப்பு: புனே டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளதால் இந்திய அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியை சந்திக்க நேரிட்டால் அது, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். புனே போட்டிக்கு பின்னர் இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 5 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறுகின்றன. இந்த 6 ஆட்டங்களிலும் இந்திய அணி குறைந்தது 2 போட்டியை டிரா செய்தாலும் மற்ற போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்தால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியான நிலை உருவாகக்கூடும்.
இது ஒருபுறம் இருக்க இந்திய அணியின் மோசமான செயல் திறனால் தென் ஆப்பிரிக்க அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.அந்த அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அங்கு முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி 2-வது டெஸ்ட் போட்டியில் வரும் 29-ம் தேதி விளையாட உள்ளது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியானது பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக தலா 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களையும் தென் ஆப்பிரிக்க அணி தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. இவற்றில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிகளை குவிக்கும் பட்சத்தில் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago