புனே: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
பெங்களூரு டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தது. 2-வது இன்னிங்ஸ் சர்பராஸ் கான் (150), ரிஷப் பந்த் (99) ஆகியோர் பேட்டிங்கில் போராடிய போதிலும் தோல்வியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாமல் போனது. இந்த தோல்வியால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் சில புள்ளிகளை இந்திய அணி இழந்தாலும் தற்போதைக்கு முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
அடுத்த மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கு முன்னதாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக புனேவில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியிலும், மும்பை வான்கடேவில் வரும் 1-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறுவதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். இந்த இரு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு எளிதாக தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பெற முடியும். இல்லாவிட்டால் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் கணிசமான வெற்றிகளை குவித்தாக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்படும்.
» சென்னை - கோவா இன்று பலப்பரீட்சை | ஐஎஸ்எல்
» சென்னை | சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
டாம் லேதம் தலைமையிலான நியூஸிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளதால் கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. டேவன் கான்வேயின் தாக்குதல் ஆட்டம், ரச்சின் ரவீந்திராவின் சதம், டிம் சவுதியின் பின் வரிசை பேட்டிங் மற்றும் மேட் ஹென்றி, வில்லியம் ஓ’ரூர்கி ஆகியோரது வேகப்பந்து வீச்சு பெங்களூரு டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது. வில் யங், டேரில் மிட்செல், டாம் பிளண்டெல், டாம் லேதம் ஆகியோரும் பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை வழங்கினால் புனேவிலும் இந்திய அணிக்கு சவால் கொடுக்கலாம்.
ஆடுகளம் எப்படி? பெங்களூரு ஆடுகளம் மற்றும் குளிர்ந்த வானிலை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் நியூஸிலாந்து அணியின் வில்லியம் ஓ’ரூர்கி, மேட் ஹென்றி, டிம் சவுதி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினர். ஆனால் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள புனே ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஆடுகளத்தில் புற்கள் ஏதும் காணப்படவில்லை. மேலும் கருப்பு மண் ஆடுகளம் பயன்படுத்தப்பட உள்ளது. இது சுழலுக்கே சாதகமாக இருக்கும்.
சுழல் சாதகமும்... எதிர்வினையும்… கடந்த காலங்களில் சொந்த மண்ணில் முற்றிலும் சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்ட ஆடுகளங்களில் இந்திய அணி இரு முறை தோல்வி அடைந்து பின்னடைவை சந்தித்துள்ளது. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புனேவில் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியிருந்தது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ'கீஃப் இரு இன்னிங்ஸையும் சேர்த்து கூட்டாக 12 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
இதேபோன்று கடந்த ஆண்டு சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த இந்தூர் ஆடுகளத்திலும் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த ஆட்டத்தில் நேதன் லயன் கூட்டாக 11 விக்கெட்களை வேட்டையாடி இருந்தார். 2-வது இன்னிங்ஸில் மட்டும் அவர், 8 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். நியூஸிலாந்து அணியிலும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இம்முறை சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணியும் சவால்களை சந்திக்க நேரிடும்.
இரட்டை சதம் விளாசிய விராட்: புனேவில் கடந்த 2019-2020-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 254* ரன்களை விளாசி அசத்தியிருந்தார். சமீபகாலமாக சீரான திறனை வெளிப்படுத்தத் தவறி வரும் அவர், கடந்த வாரம் பெங்களூரு டெஸ்ட் போட்டியில் 70 ரன்கள் சேர்த்து பார்முக்கு திரும்பியிருந்தார். இதனால் புனே டெஸ்ட் போட்டியில் விராட் கோலியிடம் இருந்து சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
கில், பந்த் தயார்.. கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் களமிறங்கவில்லை. அதே வேளையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்துக்கு போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் விக்கெட் கீப்பர் பணியை பதிலி வீரரான துருவ் ஜூரெல் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் ஷுப்மன் கில்லும், ரிஷப் பந்த்தும் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஷுப்மன் கில் அணிக்கு திரும்புவதால் கே.எல்.ராகுல் அல்லது சர்பராஸ் கான் நீக்கப்படக்கூடும். இதில் சர்பராஸ் கான் பெங்களூரு டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் விளாசியிருந்தார். ஆனால் அணி நிர்வாகம் கே.எல்.ராகுலுக்கே ஆதரவாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
ஜெய்ஸ்வால் கூடுதல் கவனம்: பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறையே 13 மற்றும் 35 ரன்களே சேர்த்தார். இந்நிலையில் புனேவில் கடந்த சில தினங்களாக தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்ட அவர், பேட்டிங்கில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதில் கூடுதல் கவனம் செலுத்தினார். புனே டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து கேப்டன் ரோஹித் சர்மா சிறந்த தொடக்கம் அமைத்துக் கொடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
வாஷிங்டன் சுந்தர்… புனே ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3-வது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படக்கூடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago