மின்னல் ரொனால்டோ அசத்தல் ஹாட்ரிக்; ஸ்பெயினுக்கு வெற்றியை மறுத்தார்; உலகக்கோப்பை ஆரம்பத்திலேயே ஓர் இறுதிப் போட்டி!

By இரா.முத்துக்குமார்

உலகக்கோப்பையின் ஆரம்பத்திலேயே ஒரு இறுதிப் போட்டியைக் கண்டது போன்ற த்ரில் போட்டி நேற்று போர்ச்சுக்கல் ஸ்பெயின் இடையே நடைபெற்றது, இதில் போர்ச்சுக்கல் நாயகன் மின்னல் ரொனால்டோ ஹாட்ரிக் சாதனை புரிந்தார், ஆனாலும் ஸ்பெயின் விடாப்பிடியாக விளையாடி 3-2 என்று முன்னிலை பெற்றிருந்த போது ரொனால்டோ ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருக்கும் போது அற்புத ஃப்ரீ கிக் கோலை அடிக்க ஆட்டம் 3-3 என்று த்ரில் ட்ரா ஆனது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் ரொனால்டோ பெனால்டி கிக்கில் முதல் கோலை அடித்து முன்னிலை பெற ஸ்பெயின் ஒரு கோல் அடித்து சமன் செய்தது, பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் போக்குக்கு எதிராக ஒரு எதிர்த்தாக்குதல் ஆட்டத்தில் மிக அருமையாக 2வது கோலை அடிக்க ஸ்பெயின் சமன் செய்தது, இந்த 2 கோல்களையும் அடித்தவர் ஸ்பெயினின் டீகோ கோஸ்டா ஆவார். பிறகு 58வது நிமிடத்தில் பெர்ணாண்டஸ் நாச்சோ ஸ்பெயினுக்காக 3வது கோலை அடித்து ஸ்பெயின் 3-2 என்று முன்னிலை வகிக்க ஆட்டம் விறுவிறுப்பாக இறுதிப் போட்டியைப் போல் உச்சத்திற்குச் சென்றது அப்போது 88வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் ஒன்றை மிக அற்புதமாக கோலாக மாற்ற எதிர்பாராத ஒரு த்ரில் போட்டி எதிர்பாராத ட்ராவாக முடிந்தது.

4வது நிமிடத்திலேயே பெனால்டி கிக்

ஸ்பெயின் ஸ்பெயினாக ஆடியது, ரொனால்டோ ரொனால்டோவாக ஆடினார். ஸ்பெயின் தொடக்கத்தில் 4-2-3-1 என்ற வியூகத்தில் இறங்க போர்ச்சுக்கல் 4-4-2 என்று இறங்கியது. தொடக்கத்தில் கார்வால்ஹோ நடுக்களத்தில் அருமையாக ஆடினார். 4வது நிமிடத்தில் பந்து போர்ச்சுக்கள் வசம் திகழ ரொனால்டோவிடம் வந்தப் பந்தை அவர் விறுவிறுவென ஸ்பெயின் கோல் பகுதியான பாக்ஸிற்குள் அனாயசமாகக் கொண்டு சென்றார். ஆனால் ஸ்பெயின் வீரர் நாச்சோ பெர்னாண்டஸ் வேண்டுமென்றே செய்யாவிட்டாலும், ரொனால்டோவின் மின்னல் வேகம் கோலாக மாறிவிடும் என்ற பதற்றத்தில் தன் காலை ரொனால்டோவின் கால்களிடையில் விட்டுத் தடுத்தார், பெனால்டி பகுதியில் இது நடந்தது, கிறிஸ்டியானோ ரொனால்டோ விழுந்தார், நடுவர் பெனால்டி என்றார். ஆனால் விட்டிருந்தால் கூட முழுதும் ஸ்பெயினின் வெள்ளைத் தடுப்பை மீறி ரொனால்டோ கோல் அடித்திருப்பது கஷ்டம்தான், நாச்சோ தவறாக ஃபவுல் செய்ய அதற்குரிய தண்டனையாக பெனால்டி கிக் கொடுத்தார்.

ஸ்பெயின் கோல் கீப்ப்ர் டி ஜியா பதற்றத்துடன் தயாரானார், அவரைப் புறக்கணிக்குமாறு ரொனால்டோ வலையின் வலது புறம் அடித்து கோலாக மாற்றினார். ஸ்பெயின் அதிர்ச்சியடைந்தது.

இந்தக் கோலை போர்ச்சுக்கள் அடித்தாலும் அடித்தது, அதன் பிறகு ஸ்பெயின் முழு வேகத்துடனும் வெறியுடனும் ஆடியது, ஆனால் துல்லியம் இல்லை, பந்து ஸ்பெயின் காலிலேயேதான் இருந்தது, 10வது நிமிடத்தில் இடது புறம் சில்வா, இஸ்கோ அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்த, இஸ்கோ இடது ஓரத்திலிருந்து அடித்த ஷாட் கோஸ்டாவுக்கு வர அதனை அவர் சில்வாவுக்கு அடிக்க சில்வா அடித்த ஷாட் பாருக்கு மேல் சென்றது, கோலை நோக்கி அடிக்கும் போது பேலன்ஸ் தவறினார் சில்வா இதனால் துல்லியம் இல்லாமல் போனது, ஒரு கோல் வாய்ப்பு நழுவல்.

போர்ச்சுகலும் ஸ்பெயினின் முழுத்தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து ஆடியது, சில வேளைகளில் எதிர்த்தாக்குதல் வாய்ப்பும் கிடைத்தது அப்படிப்பட்ட வாய்ப்பில்தான் 18வது நிமிடத்தில் கோலுக்கு 20 அடி தூரத்தில் ரொனால்டோ ப்ரீ கிக் பெற்றார், ஆனால் அவர் நேராக அதனை வீரர்கள் சுவரில் அடித்தார். பயனில்லை. 21வது நிமிடத்தில் மீண்டும் இடது புறம் இனியெஸ்டா, கோஸ்டா, சில்வா சேர்க்கை வெளுத்துக் கட்ட இனியெஸ்டா இடது புறம் போர்ச்சுக்கல் கோல் எல்லைக்குள் அதிரடியாக நுழைந்தார் தடுப்பாட்டக் காரர்களை போக்குக் காட்டி டேவிட் சில்வாவுக்கு அடித்தார். அவர் ஷாட் தட்டி விடப்பட்டது. இது நடந்து முடிந்த உடன் போர்ச்சுக்கள் எதிர்த்தாக்குதல் ஆட்டம் ஆடியது. ஸ்பெயினின் கார்னர் ஷாட்டிலிருந்து பந்தைப் பெற்ற பெர்ணாண்டஸ் பந்தை ரொனால்டோவுக்குக் கொடுக்க அதனை மின்னல் வேகத்தில் ஸ்பெயின் கோல் பகுதியை நோக்கி நகர்த்திச் சென்றார் ரொனால்டோ, ஆனால் கடைசியில் கியூடேஸுக்குப் பந்தை லேசாகத் தட்டி விட்டார், இவர் ஓங்கி அடித்திருக்க வேண்டும், மாறாக தொட்டார், உடனடியாக ஸ்பெயின் வீரர் அல்பா பந்தை தன் வசமாக்கினார், அருமையான வாய்ப்பு நழுவவிடப்பட ரொனால்டோ வெறுப்பில் கையை உதறினார்.

கோஸ்டாவின் அபார கோல்:

ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்க 24வது நிமிடத்திற்கு சில விநாடிகளுக்கு முன் பஸ்குவெட்ஸ் அடித்த லாங் பால் மேலே வர பெபே அதனை எம்பி தலையால் எதிர்கொண்டார், கோஸ்டா இவரை முறியடித்தார் தளர்வான பந்தை கோஸ்டா பந்தைத் திறம்பட எடுத்துச் செல்ல ஜோஸ் ஃபாண்ட், செட்ரிக் சோயாரெஸ் ஆகிய தடுப்பாட்ட வீரர்கள் கோஸ்டாவை நெருங்க அவர்களைப் புறக்கணித்து கோல் அடிக்கும் நிலைக்கு பந்தை வொர்க் செய்து கொண்டு 12 அடியிலிருந்து தாழ்வாக ஒரு ஷாட்டை கோலுக்குள் திணித்தார். உண்மையில் கோஸ்டாவுக்கு எதிராக 2 தடுப்பாட்ட வீரர்கள் நெருக்கமாக, அவர்களை கடைந்து எடுத்த திறமை அபாரமானது, கண்கொள்ளாக் காட்சியானது பெபேயை ஃபவுல் செய்தாரா கோஸ்டா என்று நடுவர்கள் சரிபார்த்தனர். அது இல்லை என்றவுடன் கோல் என்று முடிவானது 1-1 சமன்.

 

இஸ்கோ, இனியெஸ்டா, ஜோர்டி ஆல்பாவின் ஆட்டம் சூடுபிடிக்க இடது புறத்திலிருந்து ஓய்வு ஒழிச்சலற்ற தாக்குதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் கொஞ்சம் ஆடித்தான் போனது. இஸ்கோவின் ஷாட் ஒன்று கோல் பாரில் பட்டு கீழே விழுந்து கோல் போல் சென்றது, அது கோல் லைனைத் தாண்டியது என்றே ஸ்பெயின் நினைத்தது, ஆனால் ரீப்ளேயில் கோல் லைனுக்கு மேல் இருந்தது பந்து இதனால் கோல் இல்லை.

மீண்டும் கோஸ்டா, இனியெஸ்டா, ஆல்பா, இஸ்கோ கூட்டணி மீண்டும் நெருக்கடி கொடுக்க இனியெஸ்டா மிக அருமையாகப் பந்தை உள்ளே கொண்டு வந்து ஆல்பாவிடம் அளிக்க ஆல்பா மீண்டும் இனியெஸ்டாவிடம் அடிக்க இனியெஸ்டாவின் ஷாட் வெளியே சென்றது.

ஆட்டத்தின் போக்குக்கு எதிரான ரொனால்டோவின் 2வது கோலும் ஸ்பெயின் கோல் கீப்பர் செய்த தவறும்:

ஸ்பெயின் கடும் தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்த, தவறுகள் நிகழ்வது சகஜம் அப்படிப்பட்ட எதிர்த்தாக்குதல் கணத்தை போர்ச்சுகல் வீரர்களான கியுடெஸ், சில்வா, ரொனால்டோ ஆகியோர் அபாரமாகப் பயன்படுத்தினர், ஸ்பெயின் பந்துடைமையைத் தவறவிட இவர்கள் மூவரும் புகுந்தனர். ரொனால்டோ அருகில் ஓடி வர ஸ்பெயி கோல் பகுதிக்கு அருகில் கியூடெஸ் பந்தைக் கட்டுப்படுத்தி ரொனால்டோவிடம் அளிக்க ரொனால்டோ அதனை கோலை நோக்கி சாதாரணமாகவே அடித்தார், ஸ்பெயின் கோல் கீப்பர் டி ஜியா பந்தை எதிர்கொண்டு மேலேறி வந்து உதைத்து வெளியே தள்ளாமல் மண்டியிட்டு ரொனால்டோ ஷாட்டைப் பிடிக்க நினைத்துத் தவறிழைத்தார். இதனால் பந்து கையிலிருந்து பந்து நழுவி கோலுக்குள் சென்றது, போர்ச்சுக்கல் 2-1 என்று முன்னிலை வகித்தது.

ஆட்டத்தில் ஸ்பெயின் ஆதிக்கம் உச்சத்திலிருந்த போது எதிர்த்தாக்குதலில் ரொனால்டோவின் ஜீனியஸ் ஒரு புறமும் கோல் கீப்பர் டிஜியாவின் மோசமான முடிவினாலும் போர்ச்சுக்கல் முன்னிலை பெற்றது. உடனடியாக மீண்டும் 2 நிமிடங்களில் இடது புறத்திலிருந்து இனியெஸ்டா, கோஸ்டா, இஸ்கா கூட்டணி நெருக்கடியை அதிகரித்தது பந்து நாச்சோவிடம் கோல் பகுதிக்குள் வந்தது. ஆனால் அவர் ஷாட் கோலாக மாறவில்லை. இடைவேளையின் போது போர்ச்சுகல் 2-1 என்று முன்னிலை வகித்தாலும் வெற்றிக்கான உறுதிப்பாடு இல்லை என்பதை அறிந்திருந்தனர்.

நாச்சோ பெர்னாண்டஸின் திகைப்பூட்டிய கோல்:

இடைவேளைக்குப் பிறகு டீகோ கோஸ்டோ ஸ்பெயினுக்கு சமநிலை கோலை அடித்தார். ஃப்ரீ கிக் ஒன்று முக்கால் தூரத்திலிருந்து போர்ச்சுக்கல் கோல் பகுதிக்குள் அடிக்கப்பட்ட இஸ்கோ அதனை தலையில் வாங்கி உள்ளே செலுத்த டீகோ கோஸ்டா மிக அருகிலிருந்து கோலாக மாற்றினார், போர்ச்சுகல் தடுப்பாட்ட வீரர்கள் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது 2-2 என்று சமன் ஆனது. இதற்கு 3 நிமிடங்கள் கழித்து நாச்சோ பெர்ணாண்டஸ் ஸ்பெயினுக்காக திகைப்பூட்டும் அந்த கோலை அடித்து முன்னிலை கொடுத்தார். கடும் நெருக்கடியில் இருந்தது போர்ச்சுக்கல். ஒரு பந்தை அது தூக்கி வெளியே அடிக்க முயன்றது ஆனால் ஷாட் கார்வால்ஹோ மேல் பட்டு ரீபவுண்ட் ஆனது இது பாக்ஸின் எல்லையில் நடக்கிறது, பந்து ஸ்பெயின் வீரர் நாச்சோ பெர்னாண்டஸுக்குக் கிடைக்க விரைவில் அதனை சற்றும் எதிர்பாராத வகையில் கிடைத்த சிறிய இடைவேளியில் கண் மூடிக் கண் திறக்கும் முன் சக்தி வாய்ந்த தரை ஷாட்டில் கோலாக மாற்றினார், ஸ்பெயின் 3-2 என்று முன்னிலை பெற்றது.

ரொனால்டோவின் அழகு ஃப்ரீகிக் கோல்:

freekickjpg100 

அதன் பிறகு போர்ச்சுக்கலின் மற்ற வீரர்களின் துல்லியமின்மை ரொனால்டோவை வெறுப்பேற்றியது. கடைசியில் ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் பகுதியிலிருந்து வந்த ஒரு நீண்ட வானளாவிய ஷாட் ஒன்றிற்கு ஸ்பெயின் வீரர்கள் இருவர் ரொனால்டோ போட்டி போட, ஸ்பெயின் வீரர்கள் தங்கள் கோலுக்கு 25 அடி முன்னால் ரொனால்டோவைக் கீழே தள்ளினர், இதனால் 25 அடியிலிருந்து மையத்தில் ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது, போர்ச்சுகல் ரசிகர்கள் கடவுளைப் பிரார்த்தித்தனர், சற்றும் பதற்றமடையா ரொனால்டோ ஸ்பெயின் வீரர்கள் சுவரை ஒரு பொருட்டேயல்ல என்று மிக அருமையாக கண்களில் ஒத்திக் கொள்ளும் ஒரு வளைந்த ஷாட்டைத் தூக்கி அடிக்க அப்பழுக்கில்லாமல் யார் மீதும் படாமல் டி ஜியா வேடிக்கைப் பார்க்க கோலானது, ஆட்டம் 3-3 என்று சமன். ஸ்பெயினுக்கு வெற்றியை மறுத்தார் மின்னல் ரொனால்டோ.

பிறகு காய நேரத்தில் ஆட்டத்தின் 92வது நிமிடத்தில் குரேஸ்மா போர்ச்சுகலுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்திருப்பார், குறுக்காக வந்த பந்தை இடதுபுறம் பெற்ற குரேஸ்மா, இரண்டு வீரர்களை அருமையாகக் கடந்து ஒரு தாழ்வான ஷாட்டை கொல் நோக்கி அடிக்க சரிந்து வந்த ஸ்பெயின் வீரர், பஸ்கெட்ஸாக இருக்கலாம், அதனை தடுத்தார். போர்ச்சுக்கல் வெற்றி வாய்ப்பை ஸ்பெயின் முறியடித்தது, இல்லையில்லை ஸ்பெயின் வெற்றி வாய்ப்பை ரொனால்டோ முறியடித்தார்... இல்லையில்லை அபாரமான கால்பந்தாட்டம் ஸ்பெயின், போர்ச்சுக்கல் இரு அணிகளையுமே முறியடித்தது, 3-3 ட்ரா. இறுதிப் போட்டி கூட இவ்வளவு விறுவிறுப்பாக இருக்காது. ரொனால்டோவுக்கான போட்டியாகும் இது. ஹாட்ரிக் கோல்களை தன் முதல் போட்டியிலேயே அடித்தார் ரொனால்டோ, என்ன இது வெற்றியாக முடிந்திருந்தால் அவரைக் கையில் பிடித்திருக்க முடியாது, ஆனால் கோஸ்டாவின் பிரில்லியன்ஸ், நாச்சோவின் திகைப்பூட்டும் எதிர்பாரா 3வது கோல் ஆகியவை இந்த ஆட்டத்தின் சிறப்பம்சங்கள். ஆனால் அனைத்திற்கும் மேலாக ரொனால்டோவின் தன்னம்பிக்கை!!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்