2-வது இன்னிங்ஸில் இந்திய அணி போராட்டம்: நியூஸிலாந்து அணி 402 ரன் குவித்து ஆட்டமிழப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ரச்சின் ரவீந்திரா சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து போராடி வருகிறது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணிமுதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து சொந்த மண்ணில் மோசமான சாதனையை படைத்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 20, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்கள் சேர்த்தனர். 5 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்திருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5, வில்லியம் ஓ’ரூர்கி 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. டேவன் கான்வே 91, வில் யங் 33, டாம் லேதம் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரச்சின் ரவீந்திரா 22, டேரில் மிட்செல் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது.

டேரில் மிட்செல் 18 ரன்களில் முகமது சிராஜ் பந்தில், கல்லி திசையில் நின்ற யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய டாம்பிளண்டெல் 5 ரன்களில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் நடையை கட்டினார். கிளென் பிளிப்ஸ் (14), மேட் ஹென்றி (8)ஆகியோர் ரவீந்திர ஜடேஜா பந்தில் போல்டானார்கள். 233 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய டிம் சவுதி, ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.

ரச்சின் ரவீந்திரா 124 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் தனது 2-வது சதத்தை விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய டிம் சவுதி 57 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். 8-வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை முகமது சிராஜ் பிரித்தார்.

டிம் சவுதி 73பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தை தூக்கி அடித்த போது கவர் திசையில் நின்ற ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து களறமிங்கிய அஜாஸ் படேல் 4 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அபாரமாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா 157 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் வெளியேற நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 91.3 ஓவர்களில் 402 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். முகமது சிராஜ் 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதையடுத்து 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஜோடி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. ஜெய்ஸ்வால் 52 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் அஜாஸ் படேல் பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து விளையாட முயன்றபோது ஸ்டெம்பிங் ஆனார்.

முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா ஜோடி 17.1 ஓவர்களில் 72 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து விராட் கோலி களமிறங்கினார். சீராக ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மா 59 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் தனது 18-வது அரை சதத்தை கடந்தார். சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 63 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் அஜாஸ் படேல் பந்தில் போல்டானார். அஜாஸ் படேல் வீசிய பந்தை ரோஹித் சர்மா தடுப்பாட்டம் மேற்கொண்ட நிலையில் பந்து மட்டையில் பட்டு தரையில் உருண்டு சென்று ஸ்டெம்பை பதம் பார்த்தது.

இதன் பின்னர் விராட் கோலியுடன் இணைந்த சர்பராஸ் கான் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு ரன்கள் சேர்த்தார். மட்டையை சுழற்றிய சர்பராஸ் கான் 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். இது அவரது 4-வது அரை சதமாக அமைந்தது.

மறுமுனையில் நிதானமாக பேட் செய்த விராட் கோலி 70 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் தனது 31-வது அரை சதத்தை கடந்தார். அபாரமாக விளையாடி வந்த விராட் கோலி,கிளென் பிலிப்ஸ் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 102 பந்துகளை சந்தித்து ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் விராட் கோலி 70 ரன்கள் சேர்த்தார். 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலி-சர்பராஸ் கான் ஜோடி 136 ரன்கள் சேர்த்தது.

நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 49 ஓவர்களில், 3 விக்கெட்கள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. சர்பராஸ்கான் 78 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க 125 ரன் பின்தங்கிய நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டத்தைஎதிர்கொள்கிறது இந்திய அணி.

விராட் கோலி 9 ஆயிரம் ரன்கள்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர், 53 ரன்களை எடுத்திருந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் (15,921 ரன்கள்), ராகுல் திராவிட் (13,265 ரன்கள்) மற்றும் சுனில் கவாஸ்கர் (10,122 ரன்கள்) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்