ஐசிசி ‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்னும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்கா லெஜண்ட் ஏ.பி.டிவில்லியர்ஸ் சேர்க்கப்பட்டதை அடுத்து விராட் கோலி அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அக்கடிதம் வருமாறு: ஐசிசி-யின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் வரிசைக்கு உங்களைச் சேர்த்ததையடுத்து என்னை இந்தக் கடிதத்தை எழுத தேர்வு செய்தமை எனக்கு கிடைத்த கவுரவம். இதற்கு தாங்கள் முழுதும் தகுதி உடையவர். கிரிக்கெட் ஆட்டத்தில் நீங்கள் ஏற்படுத்திய தனித்துவமான தாக்கத்திற்கான பிரதிநிதித்துவமே இது.
உங்கள் திறமையைப் பற்றி நிறைய பேசிக்கொண்டிருப்பார்கள். அது சரிதான். நான் ஆடியதிலேயே நீங்கள் தான் உண்மையில் திறமையான வீரர். நீங்கள்தான் நம்பர் ஒன்.
ஆனால், எனக்கு உங்களிடம் தனித்துத் தெரிவது என்னவெனில் உங்கள் திறமை மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. களத்தில் நீங்கள் நினைத்ததை செயல்படுத்த முடியும் என்ற உங்களது அபார நம்பிக்கை உங்களிடம் உள்ளது. எப்போதும் அதைச் செய்தும் வந்திருக்கிறீர்கள்.
2016-ம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக உங்களுடன் ஆடிய போது நடந்த ஒன்று என் நினைவை விட்டு நீங்கவில்லை. 184 ரன்கள் இலக்கை விரட்டினோம், எதிரணியில் மோர்னி மோர்கெல், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் இருந்தனர். ஸ்கோர் 70 இருக்கும் போது என்னுடன் களத்தில் நீங்கள் இணைந்தீர்கள். சுனில் நரைன் பந்துகளில் ஓரிருமுறை பீட்டன் ஆனீர்கள். அப்போது டைம் அவுட்டின் போது என்னிடம், ‘அவரது பந்து வீச்சை சரியாகக் கணிக்கவில்லை’ என்று கூறினீர்கள்.
அப்போது நான் ஸ்ட்ரைக்கை என்னிடம் கொடுங்கள் நான் சிலபல பவுண்டரிகளை அடிக்கிறேன் என்று உங்களிடம் கூறியதாக நினைவு. டைம் அவுட் முடிந்த பிறகு நரைன் முதல் ஓவரை வீசினார். நான் எதிர்முனையில் நீங்கள் சிங்கிள் எடுத்து என்னிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுப்பீர்கள் என்று காத்திருந்தேன், ஆனால் நீங்கள் லெக் திசையில் ஒதுங்கினீர்கள் அவர் பந்தும் உங்களை துரத்தியது. ஆனால், நீங்கள் மண்டியிட்டு அந்தப் பந்தை ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்ஸ் விளாசினீர்கள். 94 மீ சிக்ஸ்.
டைம் அவுட்டில் உங்களுக்கு என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. அந்த சிக்ஸருக்குப் பிறகு நான் உங்களிடம் ‘You are a Freak’ என்று கூறியது நினைவில் உள்ளது. எனக்கு ஒருவர் பந்தை ஆட முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்றால் நான் ஸ்ட்ரைக்கிலிருந்து விலகி அவரைத் தவிர்க்கவே விரும்புவேன். ஆனால் நீங்கள் 94 மீட்டர் சிக்ஸர் அடிக்கிறீர்கள். இது ஒன்றே அனைத்தையும் சொல்லி விடுகிறது.
எங்கள் மனத்தில் நாங்கள் புரோசஸ் செய்வதற்கு தயாராகாத விஷயங்களை நீங்கள் செய்து முடித்து விடுவீர்கள். அப்போது அனைவரும் நினைப்பார்கள் ‘என்னதான் நடந்தது?’ என்று.
உங்களுடன் ஆடியதில் இந்த இனிய நினைவு பல இனிய நினைவுகளில் ஒன்று. நான் கிரிக்கெட் களத்தில் அனுபவித்த கேளிக்கைத் தருணங்களில் உங்களோடு ஆடிய தருணங்கள்தான் ஆக்கிரமிக்கின்றன. அதே போல் நாம் இருவரும் ரன் ஓடும் போது நாம் அழைக்கவெல்லாம் மாட்டோம். அது ஒரு ஃபீல் அவ்வளவுதான். இதை விளக்க முடியாது. நாம் பேட்டிங் செய்யும் போது பீல்டர்களுக்குத்தான் நெருக்கடி. உங்களுடன் ஓடும் போது 2 ரன்களை எடுக்காமல் விட்டதாக நினைவில் இல்லை. அதே போல் ரன் அவுட் ஆகும் நிலையும் ஏற்பட்டதில்லை. நமக்கான புரிதல் அப்படி.
கடினமான தருணங்களில் உங்கள் அணியை எத்தனை முறை காப்பாற்றியிருக்கிறீர்கள். அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற உங்கள் உந்துதல் எனக்கெல்லாம் ஒரு பெரிய பாடம். உங்களிடம் கற்று கொண்டது என்னவெனில் கடந்த 4 போட்டிகளில் என்ன செய்தோம் என்பதல்லாமல் இந்தப் போட்டியில், இன்று என்ன செய்யப்போகிறோம் என்ற அணுகுமுறையே. எப்போதும் பாசிட்டிவ் ஆக சிந்திப்பது ஒன்றுதான் உங்கள் வழி.
அனைவரும் உங்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை மெச்சுவார்கள். ஆனால் டெல்லியில் ஒருமுறை 297 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டத்தை ட்ரா செய்ய கடும் முயற்சி எடுத்தீர்கள். அதாவது சூழ்நிலைக்கேற்ப மாறுவது என்பது இதுதான். 200 பந்துகள் எதிர்கொண்டு விட்டோம் ஒரு பவுண்டரி அடித்தால் என்னவென்று எனக்கெல்லாம் இயல்பாகத் தோன்றும். ஆனால். நீங்கள் அப்படியல்ல. சூழ்நிலையின் தேவைகளுக்கேற்ப உங்களுக்கு நீங்களே பூட்டுப் போட்டுக் கொண்டி விடுகிறீர்கள்.
பைத்தியகாரத்தனமாக காட்டடி அடிப்பது, விசித்திரமான ஷாட்களை ஆடுவதில் மட்டுமில்லை உங்கள் நம்பிக்கை, தடுப்பாட்டத்திலும் நீங்கள் உங்கள் திறமையை நம்புவதுதான் உங்களது தனிச்சிறப்பு. தென் ஆப்பிரிக்க அணி நீங்கள் அப்படி ஆட வேண்டும் என்று கூறும்போது நீங்கள் அப்படி ஆடுகிறீர்கள். இது ஒன்றே போதும் நீங்கள் எப்படி அணிக்கான வீரர் என்பதை நிரூபிக்க!!
நிறைய வீரர்களின் புள்ளிவிவரங்கள் கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால், பார்ப்பவர்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்துவது ஒரு சில வீரர்களே. கிரிக்கெட் வீரராக இந்தத் தன்மைதான் உங்களின் பெருமதிப்புக்குரியதாகிறது. இதுதான் உங்களை சிறப்பானவராக உயர்த்திக் காட்டுகிறது. ஆட்டத்தில் நீங்கள் விட்டுச் சென்ற தாக்கத்துக்காக ஹால் ஆஃப் ஃபேமில் நுழைந்துள்ளீர்கள். இதை விட ஒரு பெரிய கவுரவம் வேறு என்ன வேண்டும்.
வாழ்த்துக்கள் பிஸ்கோட்டி. கிரிக்கெட் ஆட்டத்தின் மிகப்பெரிய வீரர்களில் எப்போதும் நீங்கள் ஒருவர். இவ்வாறு விராட் கோலி கடிதம் எழுதியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago