பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா - நியூஸிலாந்து முதல் டெஸ்டில் இன்று மோதல்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

டாம் லேதம் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றிருந்தது. அதேவேளையில் நியூஸிலாந்து அணியானது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என இழந்திருந்தது.

வங்கதேச தொடரில் இந்திய அணி பேட்டிங்கில் அதிரடி பாணியை கையாண்டு இருந்தது. 2-வது டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக இரண்டரை நாட்கள் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தியிருந்தது. இந்தத் தொடரில் மட்டை வீச்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், அஸ்வின், ரிஷப் பந்த்,ஜடேஜா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தங்களது திறனுக்கு தகுந்தபடியிலான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனினும் தேவையான பங்களிப்பை வழங்கினர்.

ரோஹித் சர்மா இந்த ஆண்டில் 8 டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்கள், ஒரு அரை சதம் என சராசரி 35 உடன் 497 ரன்கள் சேர்த்துள்ளார். அதேவேளையில் விராட் கோலி இந்த ஆண்டில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு அரை சதத்தை கூட எட்டவில்லை. 35 வயதான அவர், பேட்டிங்கை சிறப்பாக தொடங்குகிறார். ஆனால் அதை பெரிய அளவில் மாற்ற முடியாமல் ஆட்டமிழப்பது தொடர் கதையாக உள்ளது. இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி 46 ரன்களிலும், வங்கதேச அணிக்கு ஏதிராக 47 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தார். சமீப காலமாக விராட் கோலி சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழப்பது தொடர் கதையாக உள்ளது. நியூஸிலாந்து அணியில் அஜாஸ் படேல், ரச்சின் ரவீந்திரா ஆகிய இரு இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்கள், விராட் கோலிக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். இதில் அஜாஸ் படேல் கடந்த முறை இந்திய சுற்றுப்பயணத்தின் போது ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.

நியூஸிலாந்து அணியை பொறுத்தவரையில் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டு துறையிலும் சுணக்கத்தை கண்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான தொடரில் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் தடுமாற்றம் அடைந்தனர். இதனால் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது சுழற்பந்து வீச்சு, நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் தரக்கூடும். வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் கூட்டாக 20 விக்கெட்களை வேட்டையாடி இருந்தனர்.

சின்னசாமி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கக்கூடும் என்பதால் மீண்டும் ஒரு முறை அஸ்வின், ஜடேஜா சுழல் கூட்டணி அசத்த ஆயத்தமாக உள்ளது. இவர்களுடன் வங்கதேச டெஸ்ட் தொடரில் 11 விக்கெட்களை வீழ்த்திய ஜஸ்பிரீத் பும்ரா, இளம் வீரரான ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோரும் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரக்கூடும்.

கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடையாததால் இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவில்லை. மேலும் வேகப்பந்து வீச்சாளரான பென் ஷியர்ஸ் முழங்கால் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக அறிமுகவீரராக ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சில் மேட் ஹென்றி, வில்லியம் ஓ‘ரூர்கி, அனுபவம் வாய்ந்த டிம் சவுதி ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். பேட்டிங்கில் அனுபவம் வாய்ந்த டாம் லேதம், ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகியோர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். இதற்கிடையே போட்டி நடைபெறும் பெங்களூரு பகுதியில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்படக்கூடும்.

அணிகள் விவரம் - இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன்கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

நியூஸிலாந்து: டாம் லேதம் (கேப்டன்), டேவன் கான்வே, கேன் வில்லியம்சன், மார்க் சாப்மேன், வில் யங், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர், ரச்சின் ரவீந்திரா, டாம் பிளண்டெல், அஜாஸ் படேல், மேட் ஹென்றி, டிம் சவுதி, வில்லியம் ஓ’ரூர்கி, ஜேக்கப் டஃபி

நேரம்: காலை 9.30, நேரலை: ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா

ஷுப்மன் கில் காயம்: இந்திய கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் கழுத்து வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் நியூஸிலாந்து அணிக்கு எதிராக பெங்களூருவில் இன்றுதொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவது சந்தேகம் என கூறப்படுகிறது. ஒருவேளை அவர், களமிறங்காவிட்டால் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

9 ஆயிரம் நெருங்கும் கோலி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 115 போட்டிகளில் விளையாடி 48.89 சராசரியுடன் 8,947 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் விராட் கோலி 9 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 53 ரன்களே தேவையாக உள்ளன. இதை அவர், பெங்களூரு டெஸ்ட் போட்டியில் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்