சர்பராஸ் கான் இன்னும் என்னதான் செய்ய வேண்டும்? - பிசிசிஐ ‘மேட்டிமை’ அணுகுமுறை

By ஆர்.முத்துக்குமார்

சர்பராஸ் கானுக்கு 27 வயதாகிறது. தன் கிரிக்கெட் பேட்டிங்கில் உச்சத்தில் இருந்து வருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்புக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டு மீண்டும் சர்பராஸ் கான் ஓரங்கட்டப்பட்டார்.

சேப்பாக்கத்தில் முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது ஹெல்மெட், கால்காப்பு, மட்டை சகிதம் ‘ஹெச்’ ஸ்டாண்டிற்கு பின் பக்கம் உள்ள வலைக்குப் பயிற்சி செய்ய அவர் வந்த போது அவரது நடை மற்றும் பாவனைகளில் சாதிக்க வேண்டும், அணியில் தன்னை தவிர்க்க முடியாமல் எடுத்தே ஆக வேண்டும் என்ற வெறி தெரிந்தது. ஆனால், நம் கண்களுக்கு தெரியும் அவர் கண்களில் தெரிந்த வெறி, ரோஹித் சர்மாவுக்கும் கவுதம் கம்பீருக்கும் தெரியவில்லை. வங்கதேசத் தொடரில் குறைந்தது ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். ஏனோ அந்த மனசு சர்பராஸ் கானைப் பொறுத்தமட்டில் நம் மேட்டுக்குடி அணி நிர்வாகத்திற்கு இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.

உள்நாட்டுக் கிரிக்கெட் என்றாலே எட்டிக்காயாகக் கசந்து, லண்டனில் போய் உட்கார்ந்து கொள்வதும், சுற்றுப்பயணம் மேற்கொள்வதுமான கோலி, ரோஹித் போன்ற மேட்டுக்குடி கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் தொடர்ந்து உள்நாட்டுக் கிரிக்கெட்டை மதித்து அதன் வழி இந்திய கிரிக்கெட் அணியின் மேட்டுக்குடி நிர்வாகத்தை தன் பக்கம் ஈர்ப்பதை தன் கடமையாகவே கடனாகவே செய்து வருகிறார் சர்பராஸ் கான்.

லக்னோவில் (வங்கதேச அணியென்று வரும் போது கான்பூர் என்ற சொத்தை, பழைய மைதானம், இரானி கோப்பைக்குப் புதிய மைதானமான லக்னோ - மேட்டுக்குடித்தனத்திற்கான இன்னொரு உதாரணம்) நடைபெற்று வரும் இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக சர்பராஸ் கான் 286 பந்துகளில் 25 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 222 ரன்களை விளாசினார். இரானி கோப்பை கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடிக்கும் முதல் மும்பை வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் சர்பராஸ்.

இங்கிலாந்துக்கு எதிராக ராகுல் திராவிட்டின் அழுத்தத்தில் தகுதியான வாய்ப்பைப் பெற்ற சர்பராஸ் ராஜ்கோட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் விரைவு அரைசதங்களை விளாசினார். பிறகு தரம்சலாவில் இன்னொரு அரைசதம் விளாசினார். ஆனால், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இல்லை. 2014-ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து சர்பராஸ் கான் 15 சதங்களையும் 14 அரைசதங்களையும் எடுத்து அசத்தி வருகிறார்.

இந்த 15 சதங்களில் 10 சதங்களை 150+ ஸ்கோராக மாற்றியுள்ளார். இதில் 4 இரட்டைச்சதங்கள். இவரது அதிகபட்ச ஸ்கோர் 301. இன்னும் என்னதான் இவர் செய்ய வேண்டும்? இனி மட்டையினால் நிரூபிக்க ஒன்றுமில்லை. ‘லாபி’-தான் இவர் உள்ளே செல்ல ஒரே வழி. ஆனால், இவருக்கான லாபி கிரிக்கெட் ரசிகர்கள்தானே தவிர உள்ளே கிடையாது. உள்ளே ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், கோலிகளுக்கான மேட்டுக்குடி சங்கமத்தின் செல்வாக்குதான் ஈடேறும்.

ஆஸ்திரேலியா தொடரின் போது இந்த மேல் நிலை வீரர்கள் ‘காயமடைந்தால்’ சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வரும். ஆஸ்திரேலிய மண்ணில், அந்த நெருக்கடியில், அதுவும் பார்டர் - கவாஸ்கர் டிராபியை தங்கள் வசம் கொண்டு வரும் முனைப்பிலும், பாட் கம்மின்ஸின் உத்வேகமான கேப்டன்சியிலும் போடப்படும் அதி அழுத்தத்தை சர்பராஸ் கான் எதிர்கொள்ள வேண்டும். அதில் அவர் ஆடி மீண்டெழுந்து பெரிய வீரராக ஆனாலும் இந்திய அணியில் அவரது இடம் உறுதியாக இருக்குமா என்று தெரியாது. ஏனெனில், அந்த அளவுக்கு மேட்டுக்குடித் தனம் இந்திய அணித்தேர்விலும் அணி நிர்வாகத்திலும் புரையோடிப் போயுள்ளது.

சரி, அவர் ஆஸ்திரேலியாவில் ஆடி தன்னை நிரூபிக்க உற்சாகத்துடனும் வெறியுடனும் இருந்தாலும் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி அணியில் இல்லாமல் போனால்தான் வாய்ப்பு. அப்படி வாய்ப்புக் கிடைத்து இவர் சதம் எடுத்து விடுகிறார் என்றாலும் கூட அடுத்த போட்டியில் காயமடைந்த வீரர் மீண்டும் வந்தால் இவர் வழிவிட்டுத்தான் ஆக வேண்டும். இதென்ன கேலிக்கூத்து? யாரும் எதுவும் கேட்க மாட்டார்களா என்ன? அவர் ஐபிஎல் தொடரில் ஆடாததும் ஒரு காரணம், இந்திய டெஸ்ட் அணியையே ஐபிஎல் வர்த்தகஸ்தர்கள்தான் தேர்வு செய்கின்றன போலும்! வேறு வடிவங்களில் ஆடாமல் டெஸ்ட் போட்டிகளுக்காக சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருபவருக்கு நன்றாகக் காட்டுகின்றனர் வாய்ப்பை!

உள்நாட்டு கிரிக்கெட் குறித்த பிசிசிஐ செயலரின் மிரட்டல் எல்லாம், அப்பாவிகளான ஸ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷனைத் தாண்டி செயல்படாது போலும். பார்மின் உச்சத்தில் இருக்கும் போது கொண்டு சர்பராஸ் கானை கொண்டு வந்தால் வந்தால், 5-6 வருடங்கள் அவர் சரியான பங்களிப்புச் செய்ய முடியும். ஒருவர் பார்மில் இருக்கும் போது மேட்டுக்குடித்தனம் பார்த்து அவரை ஒதுக்கி விட்டு. அவர் பார்மில் இல்லாத போது வாய்ப்புக் கொடுத்து விட்டு, அவர் தோல்வி அடையும் போது, ‘பார்த்தீர்களா இதனால்தான் அவரை முன்னமேயே தயக்கத்துடன் எடுக்காமல் இருந்தோம் இப்போது புரிகிறதா?’ என்று ஊடகங்களை விட்டு எழுதச் சொல்லும் போக்குகள்தான் காணப்படுவது கிரிக்கெட் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்