கான்பூர்: இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளும் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இன்று மோதுகின்றன. சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டராக ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தியிருந்தார். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய அவர், 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை வேட்டையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.
இதேபோன்று ரவீந்திர ஜடேஜாவும் பேட்டிங்கில் 86 ரன்கள் விளாசியதுடன் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து பந்து வீச்சில் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதேவேளையில் 2-வது இன்னிங்ஸில் ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோர் சதம் விளாசி மிரளச் செய்திருந்தனர். இவர்களுடன் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சிறந்த பார்மில் உள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதம் விளாசிய அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
» எம்சிசி-முருகப்பா கோப்பை ஹாக்கி: இந்தியன் ரயில்வே - ஒடிசா அணிகள் அரை இறுதியில் நாளை பலப்பரீட்சை
» செந்தில் பாலாஜி முன்பு துரோகி, இப்போது தியாகியா? - தமிழிசை, சீமான் விமர்சனம்
அதேவேளையில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா 11 ரன், விராட் கோலி 23 ரன் மட்டுமே சேர்த்தனர். வங்கதேச அணிக்கு எதிரான தற்போதைய டெஸ்ட் போட்டியையும் சேர்த்து இந்திய அணி இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கணிசமான அளவில் ரன்கள் குவிப்பது அவசியம். இது ஒருபுறம் இருக்க கே.எல்.ராகுல் நெருக்கடியுடன் களமிறங்குகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் அவரிடம் இருந்து பெரிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் சீராக ரன்கள் குவித்தாக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் கே.எல்.ராகுல் உள்ளார்.
நஜ்முல் ஹொசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணி முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சிறந்த திறனை வெளிப்படுத்த தவறியது. முதல் இன்னிங்ஸில் தரமான இந்திய வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஆட்டம் கண்ட வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் 2-வது இன்னிங்ஸில் அஸ்வினின் சுழலில் சிக்கினர். இதனால் பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக அணியில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் வங்கதேச அணியும் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கக்கூடும். அநேகமாக நஹித் ராணா நீக்கப்பட்டு தைஜூல் இஸ்லாம் அல்லது நயீம் ஹசன் சேர்க்கப்படக்கூடும்.
ஆடுகளம் எப்படி? கான்பூர் கிரீன் பார்க் ஆடுகளம் கருப்பு மண் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மந்தமாக செயல்படும் இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும். எனினும் தொடக்க நாட்களில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். நேரம் செல்லச் செல்ல ஆடுகளத்தின் தன்மை மந்தம் அடையும். இதனால் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கக்கூடும். அநேகமாக ஆகாஷ் தீப் அல்லது முகமது சிராஜ் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேல் சேர்க்கப்படக்கூடும்.
வானிலை எப்படி? கான்பூர் ஆடுகளம் எப்போதுமே டெஸ்ட் போட்டிக்கு சிறப்பானதாக இருந்துள்ளது. ஆனால் இம்முறை வானிலை இடையூறு இருக்க வாய்ப்பு உள்ளது. போட்டி நடைபெறும் முதல் 3 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
9000 நெருங்கும் கோலி: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 9 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 129 ரன்களே தேவையாக உள்ளது. இதை அவர், கான்பூர் டெஸ்ட் போட்டியில் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை விராட் கோலி 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்கள், 30 அரை சதங்களுடன் 8,871 ரன்கள் குவித்துள்ளார்.
சாதனையை நோக்கி ஜடேஜா: இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,122 ரன்களும், 299 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார். வங்கதேச அணிக்கு எதிராக இன்று தொடங்கும் கான்பூர் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, ஒரு விக்கெட் கைப்பற்றும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விரைவாக 300 விக்கெட்களையும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களையும் குவித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்த வகையில் இங்கிலாந்தின் இயன் போத்தம் (72 ஆட்டங்களில்) முதலிடத்தில் உள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு இந்த மைதானத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக விளையாடிய போது இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றிருந்தனர். அஸ்வின், ஜடேஜா ஆகியோருடன் அக்சர் படேல் களமிறங்கியிருந்த அந்த டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிராவில் முடித்திருந்தது. முன்னதாக 2016-ம் ஆண்டு இதே மைதானத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டி 5 நாட்கள் முழுமையாக நடைபெற்றிருந்தது.
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரீத் பும்ரா, யாஷ் தயாள்.
வங்கதேசம்: நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகீர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஸ்பிகுர் ரகிம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன், தைஜூல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் கலீத் அகமது, ஜாகர் அலி அனிக்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago