ஏமாற்றினார் ரச்சின் ரவீந்திரா: பிரபாத் ஜெயசூர்யா அபாரம் - இலங்கை வெற்றி!

By ஆர்.முத்துக்குமார்

இலங்கையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவரும் நியூஸிலாந்து அணி காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்று தோல்வி கண்டது. 275 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து நேற்றைய ஸ்கோரான 207/8 என்ற நிலையில் இன்று களமிறங்கிய நியூஸிலாந்து இன்று 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி கண்டது.

இதன் மூலம் இலங்கை 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. நேற்று நியூஸிலாந்தின் வெற்றி நம்பிக்கைகளுக்கு உயிரூட்டிய ரச்சின் ரவீந்திரா 91 ரன்களுடன் இன்று களமிறங்கினார். அவர் எப்படியும் ஒரு அதிரடி இன்னிங்ஸை ஆடி இலங்கை வயிற்றில் புளியைக் கரைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அற்புத இடது கை ஸ்பின்னர் பிரபாத் ஜெயசூர்யா மிடில் அண்ட் லெக்கில் ஒரு பந்தை தூக்கி வீசி சரியான லெந்தில் இறக்க தவறான லைனில் ஆடிய ரச்சின் ரவீந்திரா எல்பி ஆனார். இவரது ரிவ்யூவும் விரயமானது.

கடைசி பேட்டரான ரூர்கேயை வைட் ஆஃப் த கிரீசிலிருந்து வீசிய பந்தின் மூலம் பவுல்டு செய்த ஜெயசூரியா 5 விக்கெட்டுகளை 68 ரன்களுக்குக் கைப்பற்றியதோடு இந்த மேட்சில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

நியூஸிலாந்து அணி இந்த டெஸ்ட் போட்டியை வென்றிருக்கக் கூடிய வாய்ப்புகள் நிறையவே இருந்தது. 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் என்று இருந்த இலங்கையை 305 ரன்கள் வரை செல்ல நியூஸிலாந்து அனுமதித்தது. கமிந்து மெண்டிஸ் அற்புதமான சதம் ஒன்றை எடுத்தார். குசல் மெண்டிஸ் 50 ரன்களை விளாசினார். திரும்பி ஆடிய நியூஸிலாந்து 340 ரன்களை எடுத்து 35 ரன்கள் முன்னிலையும் பெற்றது. ஆனால், சிக்கல் என்னவெனில் 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் என்ற நிலையிலிருந்து அடுத்த 8 விக்கெட்டுகளை 143 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் பறிகொடுத்து முன்னிலையை இன்னும் விரிவுபடுத்தத் தவறி விட்டது.

400 ரன்களை எடுத்திருந்தால் 2-வது இன்னிங்ஸில் வெற்றி இலக்கு எட்டும்படியாக அமைந்து இன்று வெற்றி பெற்றிருக்கலாம். 2-வது இன்னிங்ஸில் இலங்கை பேட்டர்கள் அற்புதமாக ஆடினர். கருண ரத்னே 83, சண்டிமால் 61, மேத்யூஸ் 50, தனஞ்ஜய டி சில்வா 40 என்று ஸ்கோரை 309 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

இந்த ஸ்பின் பிட்சில் அதுவும் இலங்கையில் 4, 5-ம் நாள் ஆடுவது சுலபமல்ல என்ற நிலையில் 275 ரன்கள் இலக்கை எதிர்த்து நியூஸிலான்து மடமடவென விக்கெட்டுகளை இழந்து 68/3, பிறகு 96/4 என்று முடங்கியது. ரச்சின் ரவீந்திரா தனிமனிதராகப் போராடி பல்வேறு சிறு சிறு பார்ட்னர்ஷிப்கள் மூலம் ஸ்கோரை 200 ரன்களைக் கடக்கச் செய்தார். ஆனால், இன்று 92 ரன்களில் பிரபாத் ஜெயசூரியாவிடம் ஆட்டமிழக்க நியூஸிலாந்தின் வெற்றிக் கனவு நொறுங்கியது.

ஸ்பின் பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி துணைக்கண்டத்தில் மேம்பாடு அடைந்துள்ளது , அஜாஜ் படேல் 8 விக்கெட்டுகளை இந்த டெஸ்ட்டில் எடுத்தார். நியூஸிலாந்து பேட்டிங்கிலும்துணைக்கண்ட ஸ்பின்னிங் டிராக்களில் நன்றாகவே மேம்பாடு அடைந்துள்ளது, அடுத்த இந்தியத் தொடர் அவர்களுக்குக் கடினமாக இருக்கும் இந்திய அணிக்கும்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE