செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்று சாதனை

By செய்திப்பிரிவு

புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் பிரிவில் 10 சுற்றுகளின் முடிவில் இந்தியா 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் கடைசி சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி, சுலோவேனியாவுடன் மோதியது. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் டி. குகேஷ், விளாடிமிர் ஃபெடோசெவை 48-வது காய் நகர்த்தலின் போது வீழ்த்தினார்.

தொடர்ந்து இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, ஆன்டன் டெம்சென்கோவுடன் மோதினார். இதில் 53-வது காய் நகர்த்தலின்போது பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். 3-வதாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 49-வது காய் நகர்த்தலின்போது சுபெல்ஜ் ஜானை தோற்கடித்தார்.

கடைசி ஆட்டத்தில் இந்தியாவின் விதித் குஜராத்தி, செபெனிக் மாடேஜுடன் மோதினார். இந்த ஆட்டம் 59-வது காய் நகர்த்தலின்போது டிராவில் முடிவடைந்தது. முடிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் சுலோவேனியாவை தோற்கடித்தது. 11 சுற்றுகளின் முடிவில் இந்திய அணி 21 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் 2014 மற்றும் 2022-ம் ஆண்டு தொடர்களில் இந்தியா வெண்கலம் கைப்பற்றியிருந்தது.

மகளிர் பிரிவிலும் இந்திய அணி முதன் முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்திய மகளிர் அணிதனது கடைசி சுற்றில் 3.5-0.5 என்ற கணக்கில் அஜர்பைஜானை தோற்கடித்தது. இதன் மூலம் 19 புள்ளிகளுடன் இந்திய மகளிர் அணி முதலிடம் பிடித்து அசத்தியது. ஹரிகா துரோணவல்லி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். அதேவேளையில் ஆர்.வைஷாலி தனது ஆட்டத்தை டிரா செய்தார். மகளிர் பிரிவில் இதற்கு முன்னர் இந்திய அணி அதிகபட்சமாக கடந்த 2022-ம் ஆண்டு வெண்கலம் வென்றிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE