வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி: ஆட்ட நாயகனாக அஸ்வின் தேர்வு

By பெ.மாரிமுத்து

சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. ஆட்ட நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வானார்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் விளாசிய 113 ரன்கள், ரவீந்திர ஜடேஜா சேர்த்த 86 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 376 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதேவேளையில் வங்கதேச அணி 149 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியஅணி 64 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஷுப்மன் கில் 119, ரிஷப் பந்த் 109 ரன்கள் விளாசினர்.

515 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 3-வது நாள்ஆட்டத்தின் முடிவில் 37.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. நேற்று 4-வதுநாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணியானது அஸ்வின், ஜடேஜா ஆகியோரது சுழலில்62.1 ஓவர்களில் 234 ரன்களுக்குஆட்டமிழந்தது. ஷகிப் அல் ஹசன் (25), மெஹிதி ஹசன் (8) ஆகியோர் அஸ்வின் பந்தில் வெளியேறினர்.

சீராக ரன்கள் சேர்த்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 127 பந்துகளில், 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தை தூக்கி அடித்தபோது எக்ஸ்டிரா கவர் திசையின் நின்ற பும்ராவிடம் கேட்ச் ஆனது.லிட்டன் தாஸையும் (1) பெவிலியனுக்கு திருப்பினார் ஜடேஜா. தொடர்ந்து தஸ்கின் அகமது 5 ரன்னில்அஸ்வின் பந்திலும், கடைசி வீரராக ஹசன் மஹ்முத் 7 ரன்களில் ஜடேஜா பந்திலும் நடையை கட்டினர்.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்களையும், ஜடேஜா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில்1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக அஸ்வின் தேர்வானார். 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.

‘37-வது 5’ - சேப்பாக்கத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர், 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்துவது இது 37-வது முறையாகும். இதன் மூலம் அதிக முறை 5 விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஷேன் வார்னுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் அஸ்வின். இந்த வகையில் இலங்கையின் முத்தையா முரளிரதன் 67 முறை 5 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

அதிக வெற்றி: 1932-ம் ஆண்டு முதல் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இதுவரை 580 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 179 வெற்றிகளையும் 178 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 222 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. 1 போட்டி டையில் முடிந்தது. சேப்பாக்கத்தில் தற்போது கிடைத்துள்ள வெற்றியையும் சேர்த்து கடந்த 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி தோல்வியை விட அதிக வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

சேப்பாக்கத்தில் இரு முறை அஸ்வின் அசத்தல்: ஒரே மைதானத்தில் சதம் மற்றும் 5 விக்கெட்களை இரு முறை வீழ்த்தி முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அஸ்வின். வங்கதேச அணிக்கு எதிராக தற்போது சேப்பாக்கத்தில் முடிவடைந்த டெஸ்டில் சதம் விளாசியிருந்த அவர், பந்து வீச்சில் 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதே மைதானத்தில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இதேபோன்று சதமும், 5 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார். டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து 5 விக்கெட்டு களை வீழ்த்திய மிக வயதான வீரர் என்ற சாதனை யையும் அஸ்வின் படைத்துள்ளார். இதற்கு முன்பு 1962- ம் ஆண்டு போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தி யாவின் பாலி உம்ரிகர் 172 ரன்கள் விளாசியதுடன் பந்து வீச் சில் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அப்போது அவருக்கு வயது 36 ஆண்டு 7 நாட்கள் ஆகும்.

‘ரசித்து விளையாடுகிறேன்' - ஆட்ட நாயகன் விருது வென்ற அஸ்வின் கூறும்போது, "நான் பந்துவீச்சு மூலம் வாழ்க்கையை நடத்துகிறேன், எனவே பந்துவீச்சே முதலில் வருகிறது. பேட்டிங் என்பது இயற்கையாக வரும் ஒன்று, கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறேன். இரண்டையும் பிரித்து செயல்பட முயற்சிக்கிறேன். நான் ரசித்து விளையாடுகிறேன். ஏனென்றால் நான் என்ன செய்கிறேன் என்பதனால் அல்ல, அதிலிருந்து நான் என்ன பெற விரும்புகிறேன் என்பதனால், போராடி ஆட்டத்தை ஆழமாக கொண்டு செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் சதமும் அடிக்க முடிந்தது. கடந்த காலங்களில் அணி வீரர்கள் பலர் இதைச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். இது ஒரு சிறப்பான இன்னிங்ஸ்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

56 mins ago

விளையாட்டு

59 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்